வட தமிழகத்தின் முக்கிய தொகுதியான கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக விஷ்ணுபிரசாத்தும், பாமக சார்பாக சினிமா இயக்குனர் தங்கர் பச்சானும் போட்டியிடுவதால் தமிழகம் முழுவதும் கவனம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிகவின் முன்னாள் எம்.எல்.ஏ. சிவக்கொழுந்து களம் காண்கிறார்.
திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கடலூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் மீன் பிடித் தொழிலும், வீராணம் மற்றும் பெருமாள் ஏரி பாசனத்தால் கரும்பு மற்றும் நெல் பயிர் விவசாயமும் முக்கியத் தொழில்களாக உள்ளன. கடலூர் நாடாளுமன்றத் தொகுதி முந்திரி காடுகள் நிறைந்து வளமாகவும் செழுமையாக உள்ள தொகுதியாகும்.
நடைபெறப் போகும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்த இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்தும், பாஜக பாமக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக வேட்பாளராக சினிமா டைரக்டர் தங்கர் பச்சானும், அதிமுக -தேமுதிக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக முன்னாள் எம் எல் ஏ சிவக்கொழுந்துவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மணிவாசகமும் போட்டியிடுகிறார்கள். இவர்கள் நான்கு பேருமே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
பச்சான் போன் வந்தாலே… பதறும் பிரமுகர்கள்!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான், பாஜக ஆதரவை பெரிதாக நம்பாமல் பாமகவின் பலத்தை நம்பியே வலம் வருகிறார். வன்னியர் வாக்குகளை சிதறாமல் பெறுவதற்கு இந்தியா கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள வன்னியர் பிரமுகர்களையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். இதனால் தங்கர் பச்சான் வருகிறார் என்றால் ஓடி ஒளிந்து விடுகிறார்கள் எதிர் கட்சியில் உள்ள வன்னியர் சமூகப் புள்ளிகள். விலகிப் போனாலும் விடமாட்டேன் என்று இரவு நேரம் ஆனதும் கைபேசியில் தொடர்புகொண்டு ஆதரவு கேட்கிறார் தங்கர் பச்சான்.

அன்புமணியின் மச்சான், காங்கிரஸ் வேட்பாளருக்கு ராமதாஸின் பதில்!
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் களமிறங்குகிறார். தமிழ்நாடு காங்கிரஸின் முன்னாள் தலைவரான கே.எஸ். அழகிரியின் சொந்த மாவட்டம் என்றபோதிலும் இங்கே காங்கிரஸுக்கென்று பெரிதாக பலம் இல்லை.
திமுக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், மற்றும் திமுக எம்.எல்.ஏ சபா ராஜேந்திரன், ஐய்யப்பன், தவாக தலைவரும் எம்.எல்.ஏ வுமான வேல்முருகன், விருத்தாசலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான எம். ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வன்னியர் வாக்குகளை வேட்டையாடி வருகின்றனர். விசிக கூட்டணி என்பதால் விசிக நிர்வாகிகள் தலித் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒன்று சேர்த்து வருகின்றனர்.
மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கணேசன் கூட்டணி கட்சியில் உள்ள ஒன்றிய நகர, மாவட்ட பொறுப்பாளர்களுக்கு தினந்தோறும் கார் டீசல், கை செலவுக்கு கரன்சி என தாராளமாக கொடுத்து வேலை வாங்கி வருகிறார். நிர்வாகிகள் சொந்தக் கார் வைத்திருந்தாலும் அதற்கென தனி வாடகையை அமைச்சர் கொடுத்துவிடுவதால் வேகவேகமாக வேலை செய்கிறார்கள்.
கிழக்கு மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், சொந்த கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் கிளை நிர்வாகிகள் முதல் மாவட்ட மாநில நிர்வாகிகள் வரையில் கூப்பிட்டு கூப்பிட்டு வேலை கொடுத்து வருகிறார். ’உங்கள் ஊரில் உங்கள் பூத்தில் வன்னியர் வாக்குகள் முழுமையாக வந்தாக வேண்டும். இல்லையென்றால் தேர்தலுக்குப் பிறகு பொறுப்பு இருக்காது, சம்பாதிக்கவும் முடியாது’ என கண்டிப்புடன் தேர்தல் பணியாற்றி வருகிறார்.
காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் பாமக தலைவர் அன்புமணியின் மச்சான் என்ற உரிமையில் பாமக நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டு வருகிறார். சில பாமக நிர்வாகிகள் விஷ்ணு பிரசாத்துக்கு வாழ்த்துகளையும் சொல்லி வருகின்றனர். இதையெல்லாம் அறிந்துகொண்ட டாக்டர் ராமதாஸ் கடலூர் குள்ளஞ்சாவடியில் தங்கர் பச்சானுக்கு பிரச்சாரம் செய்யும்போது, ‘அந்த வேட்பாளர் இவருக்கு அப்படியாமே… இப்படியாமே… என்றெல்லாம் பேசுகிறார்கள். ஏமாந்துவிடாதீர்கள். சொந்தமும் இல்லே… பந்தமும் இல்லே…” என்று பாடலை பாடி சொந்தத்துக்கு இடமில்லை, தங்கர் பச்சானுக்குதான் பாமகவினர் வேலை செய்ய வேண்டும், வாக்களிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்.

அமைச்சர் உதயநிதியின் பிரச்சாரத்துக்கு பின்னால் விஷ்ணுபிரசாத்தின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
தேமுதிகவுக்காக தீயாய் வேலை செய்யும் அதிமுக!
கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேமுதிகவுக்கு என கணிசமான வாக்குகள் உள்ளது. உதாரணமாக 2009 தேர்தலில் 93 ஆயிரத்து 152 வாக்குகளை தேமுதிக பெற்றது. 2014 தேர்தலிலும் தேமுதிக 1 லட்சத்து 47 ஆயிரத்து 606 வாக்குகளைப் பெற்றது.
இந்த தேர்தலில் அதிமுகவுடனான கூட்டணி பலத்தால் தேமுதிகவினர் இறங்கி வேலை செய்து வருகின்றனர். முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், மத்திய மாவட்டச் செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக வரிந்து கட்டி வேலை செய்து வருகின்றனர்.

கடலூர் தொகுதியில் பரவலாக இருக்கும் மீனவர்கள் வாக்குகள், தலித்துகள் வாக்குகளை கைப்பற்ற தீவிரமாக இருக்கிறார்கள். கூட்டணிக் கட்சி என்பதே தெரியாத அளவுக்கு அதிமுகவே போட்டியிடுவது போல வேலை செய்து வருவதற்கு, கடலூரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட பொதுக்கூட்டமே சாட்சி.
“யார் மாவட்டத்தில் அதிக வாக்குகள் பெறுவது, அதன் மூலம் எடப்பாடியிடம் நல்ல பெயர் வாங்குவது, அடுத்து அமையும் அதிமுக ஆட்சியில் அமைச்சராவது என்ற போட்டியில்தான் எம்.சி. சம்பத்தும், அருண் மொழித் தேவனும் தேமுதிகவுக்காக தீயாய் வேலை செய்கிறார்கள்” என்று அதிமுக நிர்வாகிகளே கூறுகிறார்கள்.
எப்படியோ இலை மற்றும் மாம்பழத்தைவிட கை ஓங்கி வருகிறது என்பதுதான் தற்போதைய கடலூர் கள நிலவரம்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
செந்தில்பாலாஜி போல கேஜ்ரிவால்… -திகார் சிறைக்கு சென்ற டெல்லி முதல்வர்
தேர்தல் பத்திர ஊழல்? – மோடி பேட்டி!
டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியின் டபுள் டாஸ்க்… ஸ்டாலின் கொடுத்த பூஸ்ட்!
