டிஜிட்டல் திண்ணை: செந்தில் பாலாஜியின் டபுள் டாஸ்க்… ஸ்டாலின் கொடுத்த பூஸ்ட்!

Published On:

| By Aara

Digital thinnai: Senthil Balaji's double task that given by MKStalin!

வைஃபை ஆன் செய்ததும் மார்ச் 31ஆம் தேதி ஈரோட்டில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் கலந்து கொண்ட பிரச்சார பொதுக்கூட்டத்தின் லைவ் காட்சிகள் வந்து விழுந்தன.

அவற்றை பார்த்து முடித்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் மார்ச் 22ஆம் தேதியிலிருந்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று மார்ச் 31ஆம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோட்டில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

ஈரோட்டில் திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் பிரகாஷ், கரூரில் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி, நாமக்கல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

ஸ்டாலினுடைய பேச்சின் ஆரம்பத்தில் நிர்வாகிகளின் பெயர்களை குறிப்பிட்டுக் கொண்டே வரும்போது, ‘இங்கே இல்லாவிட்டாலும் தனது பணிகளால் நம் உள்ளங்களில் நிறைந்திருக்கும் செந்தில்பாலாஜி அவர்களே…’ என்று குறிப்பிட பொதுக்கூட்ட வளாகமே அதிர்ந்தது.

ஸ்டாலின் தனது பேச்சின் கடைசியில், ’அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்து மேற்கு மண்டலத்தில் திமுகவின் தேர்தல் பணிகளை முடக்க சதி செய்தது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் அவரால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் வெளியே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்’ என்று செந்தில் பாலாஜியை பாராட்டி தள்ளினார்.

ஸ்டாலினுடைய இந்த பேச்சுக்கு பின்னால் கடந்த 10 நாட்களில் நடந்த மாற்றங்கள் இருக்கின்றன என்கிறார்கள் கரூர் திமுக வட்டாரத்தில்.

‘மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோது இந்த முறை கரூர் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டாம் என்றும், திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி தரப்பில் திமுக தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதே நேரம் தற்போதைய சிட்டிங் எம்பியான ஜோதிமணி டெல்லியில் ராகுல் காந்தியிடம் தனக்கு இருக்கும் செல்வாக்கின் அடிப்படையில் போராடி கரூர் தொகுதியை மீண்டும் பெற்றார்.

இதனால் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சற்று சுணக்கமடைந்தனர்.  திமுக வேட்பாளர் தான் கரூர் தொகுதிக்கு அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பில் வழக்கமான செந்தில் பாலாஜியின் ஸ்டைலில் பரிசுப் பொருள் விநியோகங்கள் கரூர் தொகுதியில் தொடங்கியிருந்தன. ஆனால் ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த பணிகள் அப்படியே ஹோல்ட் செய்யப்பட்டன.

Image

இந்த நிலையில் திமுக தலைமையிடமிருந்து சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு அனுப்பப்பட்ட மெசேஜில் கரூர் தொகுதியில் ஜோதிமணி வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இது மட்டுமல்ல ஜோதிமணி தரப்பில் இருந்து செந்தில் பாலாஜிக்கும் ஒரு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது.

அதாவது 2019 நாடாளுமன்ற தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு முழு முதல் காரணம் செந்தில் பாலாஜிதான். இதில் மாற்று கருத்தே இல்லை. இடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால் செந்தில் பாலாஜிக்கு சங்கடங்கள் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தப்படுவதாக ஜோதிமணி செந்தில்பாலாஜிக்கு தகவல் அனுப்பி இருக்கிறார்.

தலைமையின் உத்தரவு, ஜோதிமணியின் வருத்தம் ஆகியவற்றை தொடர்ந்து சிறையில் இருந்து தனது ஆதரவாளர்களுக்கு, ‘நான் வெளியே இருந்தால் எப்படி செயல்படுவீர்களோ அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இந்த தேர்தலில் பணியாற்ற வேண்டும். கரூரில் ஜோதிமணி வெற்றி பெற வேண்டும். கோவையில் அண்ணாமலை தோற்கடிக்கப்பட வேண்டும்’ என்று இரண்டு டாஸ்க்குகளை கொடுத்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

அதன் அடிப்படையில் கடந்த சில நாட்களாக செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அவரது பிரத்யேக தேர்தல் மெக்கானிசத்தின் படி வேலைகளை தொடங்கி விட்டார்கள். இந்தப் பின்னணியில் தான் ஸ்டாலின் ஈரோடு கூட்டத்தில் செந்தில் பாலாஜியை பாராட்டியிருக்கிறார்” என்ற மெசேஜ்க்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் : செல்லூர் ராஜூ சாபம்!

வடசென்னையில் காற்று மாசுபாடு வாரியம் அமைக்கப்படும் : கலாநிதி வீராசாமி வாக்குறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share