அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரை முன்னிட்டு இன்று கொச்சியில் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. ஐபில் ஏல வரலாற்றில் அதிகபட்சமாக இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம் கர்ரனை ரூ.18.50 கோடிக்கு ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அதேபோன்று ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி 17.50 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
எனினும் இதற்கு எல்லாம் மேலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து அணியின் அனுபவ ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு வாங்கியதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயல்பாடு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காண்போம்.
2022ம் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடியதை தொடர்ந்து 2023ம் ஆண்டு தொடரில் கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடி அணியின் மீது ஏற்பட்டுள்ளது.
இதுவரை 13 சீசன்களில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருக்கிறது. 13 சீசனில் 11 முறை பிளே ஆப் சுற்று இருக்கிறது. இந்த சாதனைக்கு ஒற்றை நாயகனாக இருந்தவர் மகேந்திர சிங் தோனி என்பதை மறுக்க முடியாது.
அப்படி பார்க்கும்போது, 41 வயதான சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இது கடைசி தொடர் என்பதால் வெற்றியுடன் வழியனுப்ப வேண்டும் என்பதில் சிஎஸ்கே அணி நிர்வாகம் உறுதியாக உள்ளது.
8 வீரர்கள் விடுவிப்பு
அதனை முன்னிட்டு அணியை பலப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் அணியில் இருந்து டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கே.எம்.ஆசிப், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ராபின் உத்தப்பா, என் ஜெகதீஷன், கிறிஸ் ஜோர்டான் ஆகிய 8 வீரர்களை விடுவித்தது.
இதில் நடப்பு 50 ஓவர் ரஞ்சி டிராபியில் தொடர்ச்சியாக 5 சதமடித்த ஜெகதீசனை விடுவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை எழுப்பியது.
ஆரம்பத்தில் எழுந்த பீதி
எனினும் சிஎஸ்கே அணியில் 18 வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று(டிசம்பர் 23) கொச்சியில் நடைபெற்ற மினி ஏலத்தில் ரூ.20.45 கோடி கையிருப்பு பணத்துடன் 7 வீரர்களை வாங்கும் நோக்குடன் சென்னை அணி நிர்வாகம் களம் கண்டது.
பெரும் தொகையுடன் பல்வேறு அணிகளும் ஐபிஎல் மினி ஏலத்தில் போட்டியிட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஆரம்பம் முதலே ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது என்பதே உண்மை.
ஏலம் தொடங்கியதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரும் எதிர்பாராத விதமாக மயங்க் அகர்வாலுக்கு ஏலம் கேட்டது. ஏற்கனவே அணியில் ருத்ராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு , சேனாபதி என நான்கு தொடக்க வீரர்கள் இருக்கும் நிலையில் சென்னை அணி மயங்க் அகர்வால் பின்னால் சென்றது ஏன் என ரசிகர்கள் சற்று பீதி அடைந்தனர்.
புஜாராவை நியாபகப்படுத்திய ரஹானே
இறுதியில் மயங்க் அகர்வாலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கைப்பற்றியது. இதனையடுத்து அடுத்ததாக வந்த ரஹானேவை அடிப்படை விலையான ₹50 லட்சம் ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் வீரர் புஜாராவை சென்னை அணி ஏலத்தில் எடுத்ததை நியாபகப்படுத்துவதாக ரசிகர்கள் விமர்சித்தனர்.
தம்பிய விட்டாச்சு… அண்ணனை பிடிச்சாச்சி
அதன் பிறகு இங்கிலாந்தின் இளம் ஆல்ரவுண்டர் சாம்கரனுக்கு சிஎஸ்கே குறி வைத்தது. ஆனால் ஏலத்தில் விலை எகிறவே சென்னை அணி பின்வாங்கியது. இருப்பினும் விட்டதை பிடிக்கும் நோக்கில் இங்கிலாந்தின் அனுபவ ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ஏலம் எடுக்க மும்பை இந்தியன்ஸுடன் விடாமல் துரத்தியது. கடைசி வரை போராடிய சிஎஸ்கே அணி ரூ.16.25 கோடிக்கு பென் ஸ்டோக்ஸை தட்டி தூக்கியது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலம் அசூரபலமாக உருமாறியுள்ளது.

ஏனெனில், சென்னை போன்ற ஆடுகளங்களுக்கு பென் ஸ்டோக்ஸின் பேட்டிங்கும், பந்துவீச்சும் சிறப்பாக எடுபடும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திறமை வாய்ந்த ஒருவரான பென்ஸ்டோக்ஸை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது குறித்து சென்னை ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
4 இளம் வீரர்கள்
அவரை தொடர்ந்து நியூசிலாந்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசனை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது.
அதன்பின்னர் இந்தியாவைச் சேர்ந்த இளம் வீரர்களான நிஷாந்த் சிந்து(ரூ.60 லட்சம்), ஷைக் ரஷீத்(ரூ.20 லட்சம்), பகத் வர்மா(ரூ.20 லட்சம்) அஜய் மண்டல்(ரூ.20 லட்சம்) ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது.
இதன்மூலம் ரூ.20.45 கோடியுடன் 7 வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று சென்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. நினைத்தபடியே 2 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 5 இந்திய வீரர்களை மொத்தம் 18.95 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.
இதன் மூலம் தோனி தலைமையில் 25 வீரர்களுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2023 ஐபிஎல் தொடருக்கு தயார் நிலையில் உள்ளது. வரும் தொடரில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சென்னையின் கோட்டையான சேப்பாக்கத்தில் சிங்கமென கர்ஜித்து 5வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என்றும், சிஸ்கே அணியின் வரலாற்று நாயகன் தோனியை கோப்பையுடன் வழியனுப்பி வைக்கும் என்றும் உறுதியுடன் நம்பலாம்.
கிறிஸ்டோபர் ஜெமா
முதல் இஸ்லாமிய பெண் போர் விமானி: இந்தியாவின் இன்னொரு சானியா மிர்சா
