பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இன்று (ஜூன் 15) வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு முட்புதருக்குள் வீசப்பட்டு அச்சிறுமி உயிரிழந்துள்ளதும், பூந்தமல்லியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு சுடுகாட்டில் வீசப்பட்டுள்ளதும் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர செயல்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

ADVERTISEMENT

மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை படுகொலையில் குற்றவாளி ஒருவர் மட்டுமே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட போலீசார் தெரிவிக்கின்றனர். ஆனால், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, காவல்துறை தீர விசாரித்து குற்றமிழைத்த அனைவரையும் கைது செய்திடவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது உரிய வழக்குப்பதிவு செய்து விரைந்து நடவடிக்கை எடுக்கவும், காவல்துறை ரோந்து, சி.சி.டி.வி. கேமிராக்கள் போன்றவற்றை வலுப்படுத்திடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடந்து வருவதாகவும், கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகவும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். எனவே, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் ஒழித்திடவும், இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவது தொடர்கதையாக உள்ளது. இதனைத் தடுப்பதற்கு தமிழக அரசும், காவல்துறையும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share