4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் அதிமுக தொடர்ந்த வழக்கை ஜூன் 17ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர்.
இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில் தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போதே இந்த நான்கு பேரின் ராஜினாமா கடிதங்களை சட்டப்பேரவைத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது
அப்போது முன்னாள் அமைச்சர் அக்னி கிருஷ்ணமூர்த்தி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ் ஆர் ராஜகோபால், ‘நான்கு எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ராஜினாமா செய்த உடனேயே தவெகவில் இணைந்துள்ளனர். எனவே இது திடீரென எடுத்த முடிவு அல்ல.
அரசியல் சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளதால் இவர்களது ராஜினாமாவை ஏற்று உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த நான்கு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடைவிதிக்க கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதால் அந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று வாதம் முன் வைத்தார்.
அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண், ’கொறடா உத்தரவை மீறி தமிழக வெற்றிக்கழக அரசுக்கு வாக்களித்த 25 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 21 பேரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக கடிதம் அளித்தார். அதனால் அவர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.
ராஜினாமா செய்த நான்கு பேரும் தாமாக முன்வந்து பதவி விலகியுள்ளனர். எனினும் தகுதி நீகக நடவடிக்கை தொடர்பாக விளக்கம் கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சட்டப்பேரவை விதிப்படி அவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று கூறினார்..
இருதரப்பு வாதங்களையும் தொடர்ந்து அதிமுக தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
