முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 8ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (ஜூன் 15) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை ஆகிய துறைகளின் மூலம் குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோரது நலனிற்காகச் செயல்படுத்தப்பட்டுவரும் இல்லங்கள், பல்வேறு திட்டங்கள், சமூக சட்டங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் குழந்தைகள் மையங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அப்போது “வெற்றித் தமிழகம்” தொலைநோக்கு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள துறை சார்பாக செயல்படுத்தக்கூடிய திட்டங்கள், அதற்குத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.
அப்போது, பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய (One Stop Centre) செயல்பாடுகள், தத்தெடுக்கும் மையங்கள், மகளிர், குழந்தைகள், மூத்தகுடிமக்கள் ஆகியோருக்காக செயல்படுத்தப்படும் உதவி எண்கள், குழந்தைகளுக்கான காலை மற்றும் மதிய உணவுத் திட்டம், அங்கன்வாடி மையச் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் முதல்வரிடம் எடுத்துரைத்தனர்.
இந்நிலையில், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விரிவாக்கம் செய்திட ஏதுவாக, தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி இத்திட்டத்தினை முதற்கட்டமாக தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் 2022-ம் ஆண்டு முதல் 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் 18.50 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் 2024ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது தவெக ஆட்சியில் இத்திட்டம் 8ஆம் வகுப்புவரை விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
