’காக்ரோச் ஜனதா கட்சி’ அபிஜித் தீப்கே கன்னத்தில் சரமாரி ‘பளார்’ ‘பளார்’- ஜெய்ப்பூரில் பதற்றம்!

Published On:

| By Mathi

Cockroach Janta Party Founder Abhijeet Dipke Slapped in Jaipur

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று ஜூன் 15-ந் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, ‘காக்ரோச் ஜனதா கட்சி’ (Cockroach Janta Party) நிறுவனர் அபிஜித் தீப்கே தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்பது நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகள் மற்றும் வேலையின்மைக்கு எதிராக இளைஞர்களை ஒன்றிணைப்பதற்காக உருவாக்கப்பட்ட சமூக-அரசியல் இயக்கமாகும். கடந்த சில நாட்களாக இந்த அமைப்பு நாடு தழுவிய அளவில் கவனத்தைப் பெற்று வருகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் தன்னெழுச்சியான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

அபிஜித் தீப்கேவுக்கு (Abhijeet Dipke) சரமாரி அறை

நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து, ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மராக் பகுதியில் காக்ரோச் ஜனதா கட்சி ஆதரவு இளைஞர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்க வந்த அபிஜித் தீப்கே, தனது ஆதரவாளர்களால் தோள்களில் சுமந்து செல்லப்பட்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த சில இளைஞர்கள் திடீரென அவரை நோக்கி வந்து கன்னத்தில் சரமாரியாக அறைந்ததோடு, அவரை இழுக்கவும் முயன்றனர்.

அபிஜித் தீப்கே தாக்கப்பட்டதைக் கண்ட அவரது ஆதரவாளர்கள், தாக்குதல் நடத்திய நபர்களைப் பிடித்துத் திருப்பித் தாக்கினர். இதனால் போராட்டம் நடந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

ADVERTISEMENT

இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக 2 இளைஞர்களை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இச்சம்பவம் குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அபிஜித் தீப்கே, “உடல் ரீதியான தாக்குதல்கள் கோழைத்தனத்தின் அடையாளம். நான் காந்தி மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றுபவன்; இந்தப்போரை அமைதியுடனும் அன்புடனும் தொடர்ந்து நடத்துவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற தனது கோரிக்கையை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share