மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டு சொன்ன கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி என்ற நையாண்டி இயக்கம், அமெரிக்காவில் வசித்து வரும் இந்தியரான அபிஜித் தீப்கேவால் தொடங்கப்பட்டது.
இந்த சூழலில் நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்சியில் நடந்த முறைகேடு என இளைஞர்களையும் மாணவர்களையும் பாதிக்கும் செயல்பாடுகள் நடந்து வருவதால், இதற்கு கண்டனம் தெரிவித்தும் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் காக்ரோச் ஜனதா கட்சி இன்று (ஜூன் 6) போராட்டத்தில் குதித்தது.
இதற்காக சமூக வலைத்தளங்களில் இந்த கட்சியை தொடங்கிய அபிஜித் அமெரிக்காவில் இருந்து இன்று காலை டெல்லி வந்தார்.
ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில், காக்ரோச் முகமூடி அணிந்து, பூச்சிகளை கொள்ளும் ஹிட் ஸ்ப்ரேவை கையில் வைத்துக்கொண்டு மத்திய அமைச்சர் தர்மேந்திரன் பிரதானுக்கு எதிராக இளைஞர்கள் கோஷம் எழுப்பினர்.
அப்போது பேசிய அபிஜித் தீப்கே, ”இது மிக நீண்ட போராட்டம். அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகிறோம். நமது கணக்குகளை முடக்குவது, நீக்குவது அல்லது ஹேக் செய்வது போன்ற வேலைகளை செய்து வருகின்றனர்.
இவர்களால் நமது பதிவுகளை நீக்க முடியுமே தவிர போராட்ட சூழலையும் இருப்பையும் அழிக்க முடியாது.
மேலும் அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால் நான் கைதாகக்கூடும் என்று எனது அம்மா அஞ்சுகிறார்.
நமது போராட்டம் தொடரும். மீண்டும் வரும் 13ஆம் தேதி ஜந்தர் மந்தரில் கூடுவோம்” என்று அழைப்பு விடுத்தார்.
இந்த போராட்டத்துக்கு ஆதரவுத் தெரிவித்த லடாக் சமூக ஆர்வலர் சோனம் வான்சுக், ’கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை ஆரம்பம் மட்டுமே. எங்களின் முதன்மையான இலக்கு, ஒட்டுமொத்த கல்வி அமைப்பிலும் சீர்திருத்தங்களை கொண்டு வரவேண்டும். தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதுதான்’ என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் இளைஞர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர். அதுபோன்று ஆயிரக்கணக்கான போலீசாரும், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சமூக வலைதளம் மூலம் தொடங்கப்பட்ட கட்சி இன்று சமூகம் சார்ந்த பிரச்சினைகளை கையில் எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டது கவனத்தை பெற்றுள்ளது.
