“தவெக-வில் இணைகிறாரா செல்லூர் ராஜு? விரல் அசைவில் பதில்!

Published On:

| By Kavi

தவெகவில் இணைவீர்களா என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்துள்ளார்.

மதுரை மாவட்ட அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் அனைத்து விளையாட்டு சங்கங்களின் கூட்டமைப்பு தலைவருமான சோலைராஜாவிடம், அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பதவி விலக வேண்டும் என்று அதிமுக எம்பி இன்பதுரை கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு பதில் அளித்து பேசிய அவர், ‘விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளையாட்டு சங்கங்களின் பொறுப்புகளில் இருந்து பதவி விலக வேண்டும் என்று எம் பி இன்பதுரை கூறியதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வர்கள் காமராஜர், பக்தவச்சலம், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் காலம் வரையில் யாருமே ஒரு விளையாட்டு வீரரை துறை அமைச்சராக நியமித்தது இல்லை. ஆதவ் அர்ஜுனா விளையாட்டு விடுதியில் தங்கி படித்தவர். விளையாட்டு வீரராக பல கஷ்டங்களை பார்த்து வளர்ந்தவர். அவர் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது சரியான தேர்வு தான்.

ADVERTISEMENT

இந்த கருத்தை நான் சொல்வதால் என் மீது கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் பரவாயில்லை. அதிமுக எம் பி சொல்வது நியாயம் இல்லை. முட்டாள்தனமானது” என்று கூறி இருந்தார்.

அதாவது அதிமுகவில் இருந்து விலகி பலரும் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வரும் நிலையில் சோலைராஜா இவ்வாறு கூறியதை தொடர்ந்து, அவரும் தவெகவில் இணையப் போகிறார் என்று செய்திகள் பரவின.

ADVERTISEMENT

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் சோலைராஜாவும் மதுரையில் இன்று (ஜூன் 15) செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர்.

அப்போது சோலைராஜா பேசுகையில்,  ”இரு தினங்களுக்கு முன்பாக விளையாட்டு வீரர்கள் அமைப்பு சார்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா  குறித்து அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து பதில் அளித்து இருந்தேன்.இதனால்,  நான் தவெகவில்  சேர உள்ளதாகவும்  ஆதவ் அர்ஜூனாவுக்கு ஆதரவாக பேசியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந் நிலையில் மாவட்ட செயலாளரிடம் உரிய விளக்கம் அளித்துள்ளேன். மேலும் இன்பதுரை ஆதவ் குறித்து பேசியது தவறுதான். விளையாட்டுத்துறையில் உள்ளவர்கள் அமைச்சராக நீடிக்கலாம். ஏற்கனவே அமைச்சராக இருந்தவர்களும் விளையாட்டு துறையில் இருந்திருக்கிறார்கள். எனவே இன்பதுரையின் கருத்து தவறான கருத்துதான். இருந்தபோதிலும் இன்ப துரையை கண்டிப்பதாக கூறிய வாசகங்களை திரும்ப பெறுகிறேன்” என்று தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

 நீங்களும் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது என்ற கேள்விக்கு

தனது கைவிரல்களால்  ’இரட்டை இலை’ சின்னம் காட்டியபடி எந்தவித பதிலும் அளிக்காமல் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புறப்பட்டு சென்றார். தான் அதிமுகவிலேயே தொடர்வேன் என்பதை விரல் அசைவு மூலம் காட்டிச் சென்றார். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share