சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெறுவதற்காக இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ. 2100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அதானிக்கு அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) நீதிமன்றம் மூலம் இன்று (நவம்பர் 23) சம்மன் அனுப்பியுள்ளது.
அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் இந்திய அரசுடன் சூரிய மின்சார சக்தி விநியோகிக்க ஒப்பந்தம் செய்வதற்காக அரசு அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுக்க திட்டம் வகுத்ததாக அமெரிக்காவின் கிழக்கு நியூயார்க் நீதிமன்றம் கடந்த நவம்பர் 21-ஆம் தேதி குற்றம் சாட்டியது. அவருக்குப் பிடிவாரண்டும் பிறப்பித்தது.
இதில் கௌதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி மற்றும் 6 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். இதனை தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தையில் கடன் பத்திரங்கள் மூலம் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ.5,040 கோடி) திரட்ட வைத்திருந்த திட்டத்தைத் தள்ளி வைத்துள்ளதாக அதானி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் நவம்பர் 21 அறிவித்திருந்தது.
இதற்கிடையில் அதானியை பல்வேறு எதிர்க்கட்சியினர் விமர்சித்து வந்தனர். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, அதானி கைது செய்யப்படவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (SEC) நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றம் மூலம் கௌதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில் “இந்த நோட்டீஸ் பெற்று 21 நாட்களுக்குள் SEC உங்கள் மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு குறித்து பதில் அளிக்க வேண்டும். அப்படி நீங்கள் பதிலளிக்கவில்லை என்றால் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான தீர்ப்பு அளிக்கப்படும். உங்களது பதிலை நியூயார்க் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது
அகமதாபாத்தில் உள்ள கௌதம் அதானியின் ‘சாந்திவன்’ பண்ணை வீட்டுக்கும், சாகர் அதானியின் ‘போதக்தேவ்’ வீட்டிற்கும் இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
எப்போதும் ஆட்சியில் பங்கு இல்லை : அமைச்சர் ஐ.பெரியசாமி