பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5.50 லட்சம் – பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5.50 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கன் சங்கம் அறிவித்துள்ளது.
விருதுநகர் தாலுகா சங்கரலிங்காபுரம் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (வயது 52). இவர் கட்டனார்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஆவார். இவரது மனைவி ஈஸ்வரியின் வனஜா பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 16 பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து தொடர்பாக ஆறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலை உரிமையாளர் தலைமறைவாக உள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.
முதல் தகவல் அறிக்கையின்படி, அதிக வெடிப் பொருட்களை மருந்து கலக்கும் அறையில் கவனக்குறைவாகக் கலந்ததாலும், விதிமுறைகளை மீறி ஒரே அறையில் அதிக அளவு வெடிகளைத் தயாரிக்க முயன்றதாலும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்குவதில் தேர்தல் ஆணையம் இதுவரை முடிவெடுக்காத நிலையில், நிவாரணத் தொகை வழங்கப்படும் வரை உடல்களை வாங்கப் போவதில்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பான வழக்கை மதுரை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏன் இழப்பீடு வழங்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது குறித்து உரிய விளக்கம் அளிக்க அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த 25 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
