வயநாட்டில் ராகுல் காந்தியின் சாதனையை பிரியங்கா காந்தி முறியடித்துள்ளார்.
அசாம், பீகார், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மேகாலயா, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 14 மாநிலங்களில் உள்ள 48 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
கேரளம் – வயநாடு, மகாராஷ்டிரம் – நான்டெட் மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். இதனால் நாடே உற்று நோக்கும் தொகுதியாக வயநாடு மாறியது.
இந்த தொகுதி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கல்பெட்டா, மானந்தவாடி, சுல்தான்பத்தேரி, திருவம்பாடி, நிலம்பூர், எரநாடு மற்றும் வண்டூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர்.
தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வயநாட்டில் தங்கி தீவிரமாக பிரச்சாரம் செய்தனர். ராகுல் காந்தி பேசும் போது, “பிரியங்கா காந்திக்கு ஒருவரை பிடித்துவிட்டால் அவருக்காக என்ன தியாகம் வேண்டுமானாலும் செய்வார். அவருக்கு வயநாடு தொகுதியை மிகவும் பிடிக்கும். தன் குடும்பத்துக்காக (வயநாடு தொகுதி) பிரியங்கா துணையாக இருப்பார்” என்று கூறி வாக்கு சேகரித்தார்.
100 நாள் வேலை பணியாளர்கள், விவசாயிகள், பழங்குடியினர், இளைஞர்கள், பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் என பல்வேறு நபர்களை சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்து பிரச்சாரம் செய்தார் பிரியங்கா காந்தி.
கடந்த நவம்பர் 11ஆம் தேதி கடைசி நாள் பிரச்சாரத்தின் போது ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ரோடு ஷோ நடத்தினர்.
அப்போது, ராகுல் காந்தி டி ஷர்ட்டில் “ஐ லவ் வயநாடு’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது அத்தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்தநிலையில் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 65 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
இது கடந்த இரு மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் குறைவாகும். 2019 மக்களவைத் தேர்தலில் 80 சதவிகித வாக்குகளும், 2024 ஏப்ரலில் நடந்த தேர்தலில் 74 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தன. கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 9 சதவிகித வாக்குகள் குறைந்தன.
இந்தநிலையில் ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த வயநாடு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (நவம்பர் 23) காலை தொடங்கியது.
இதில் காலையில் இருந்த தன்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சத்தியன், பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகித்து வந்தார் பிரியங்கா.
தற்போது 6,22,338 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 2,11,407 வாக்குகளையும், பாஜக வேட்பாளர் 1,09,939 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
4,10,931 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார் பிரியங்கா காந்தி.
தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை மட்டுமின்றி தன்னுடைய அண்ணனான எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சாதனையையும் முறியடித்துள்ளார் பிரியங்கா காந்தி.
2019 தேர்தலில் ராகுல் காந்தி 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். 2024 தேர்தலில் வயநாட்டில் 3.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் ராகுலை விட அதிக வாக்குகள் பெற்று தனது முதல் தேர்தலிலேயே சாதனை படைத்துள்ளார் பிரியங்கா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
‘கலைஞர் 100 – வினாடி வினா’… கனிமொழிக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!
மனைவினா அப்படியே உருகிவிடுவார் நவ்ஜோத் சித்து… காரணம் அப்படி ஒரு சோகம்!