அரசமைப்புச் சட்டம் அரசுகளுக்கானது அல்ல.. மக்களுக்கானது.. மீட்டெடுக்கும் நேரம்.. மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்

Published On:

| By Minnambalam Desk

Indira Jaising Interview

தமிழாக்கம்: ரவிக்குமார்

இந்திரா ஜெய்சிங் (Indira Jaising) உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞர் . இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக (Additional Solicitor General) நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர்தான். 2009 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான ஐ.நா. குழுவிற்குத் (CEDAW) தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்ணும் இவரே ஆவார். இவர் ஆனந்த் குரோவருடன் இணைந்து ‘தி லீஃப்லெட்’ (The Leaflet) எனும் சட்டரீதியான பகுப்பாய்வுக் கருத்துகளுக்கான டிஜிட்டல் தளத்தை நிறுவியுள்ளார். இவரது சுயசரிதை நினைவுக் குறிப்புகள் வடிவில் The Constitution Is My Home என்னும் தலைப்பில் தற்போது நூலாக வெளிவந்துள்ளது.

The Hindu நாளேட்டின் Sunday Magazine பிரிவில் இன்று (07.06.2026) வெளியாகியிருக்கும் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் நேர்காணல்:

ADVERTISEMENT

கேள்வி: இந்த சுயசரிதையை நினைவுக் குறிப்புகளாக எழுத உங்களைத் தூண்டியது என்ன?

பதில்: இரண்டு அட்டைகளுக்கிடையில் அடங்கிய எந்தப் புத்தகமும் ஒரு மனிதரின் வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்ய முடியாது என்பதை நான் உணர்ந்திருந்தேன். அதனால்தான் ஆரம்பத்தில் சுயசரிதையை எழுதுவதில் எனக்கு தயக்கம் இருந்தது. அதே நேரத்தில், சட்டத் துறையில் நிறுவனரீதியான நினைவு (institutional memory) இழக்கப்பட்டு வருவது என்னை அதிகமாகக் கவலைக்குள்ளாக்கியது. ஒரே பிரச்சினைகள் தொடர்பாக முன்பு வழங்கப்பட்ட முன்னுதாரணமான தீர்ப்புகளைக் குறிப்பிடாமலேயே வழக்குகளில் தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வந்தன.

ADVERTISEMENT

இறுதியில் என்னை இந்த நினைவுக் குறிப்பை எழுதத் தூண்டியது, ஏராளமான இளம் பெண்கள் என்னை அணுகி, “நான் சட்டம் படிக்கத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமே நீங்கள் தான்” என்று கூறத் தொடங்கியதுதான். அவர்களுடைய வார்த்தைகள், இந்த அனுபவங்களைப் பதிவு செய்து வைப்பதில் ஒரு மதிப்பு இருக்கிறது என்பதை எனக்குப் புரியவைத்தன.

அரசமைப்பு சட்டம் உங்கள் வீடு

கேள்வி: அரசமைப்புச் சட்டத்தை உங்கள் வீடு என்று நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். அரசமைப்புச் சட்டம் அதிகமாக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற கவலைகள் நிலவும் சூழலில், அந்த வீடு இன்று பாதுகாப்பாக இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

ADVERTISEMENT

பதில்: ஆம், அரசமைப்புச் சட்டம் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அதனால்தான் நான் அரசமைப்புச் சட்டத்தை என் வீடாகக் கருதத் தொடங்கியிருக்கிறேன். அரசமைப்புச் சட்டம் அரசுகளுக்காகவோ ஆளும் கட்சிகளுக்காகவோ எழுதப்படவில்லை; அது மக்களுக்காக எழுதப்பட்டது. இப்போது அரசமைப்புச் சட்டத்தை மீட்டெடுத்து, அதற்குக் கட்டுப்பட்டு, அதனுள் வசிக்கும் நேரம் வந்துவிட்டது.

திருமணம் எனும் ஆணாதிக்க நிறுவனம்

கேள்வி: திருமணத்திற்குப் பிறகு உங்கள் தாயார் தனது சுயச்சார்புத் தன்மையையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் தியாகம் செய்ய வேண்டியிருந்தது என்று நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். திருமணம் இன்னும் ஒரு ஆணாதிக்க நிறுவனம் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

பதில்: ஆம், நான் அப்படித்தான் கருதுகிறேன். சமீபத்தில் வரதட்சணை தொடர்பாக உயிரிழந்ததாகக் கூறப்படும் நவீன காலப் பெண்களின் மரணங்களை நாம் பார்த்திருக்கிறோம். திருமணம் இன்னும் பல வழிகளில் ஒரு சொத்துப் பரிமாற்ற வடிவமாகவே தொடர்கிறது.

இந்த நாட்டில் பெண்கள் உயிருடன் இருக்கும்போது அல்ல, அவர்கள் இறந்த பிறகுதான் நாம் அவர்களைப் போற்றுகிறோம் என்று தோன்றுகிறது. நீதி கோரி நீதிமன்றங்களை அணுகும் எண்ணற்ற பெண்களை நான் பார்த்திருக்கிறேன்; ஆனால் அவர்கள் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டுதான் அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்படுகிறது. அவர் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? நீங்கள் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்திருக்கிறீர்களா? ஒரு வீடு இன்னும் ‘ஆணின் கோட்டை’ என்று கருதப்படுகிறது; அது பெண்களுக்கு பாதுகாப்பான இடமாக இருப்பதிலிருந்து வெகுதொலைவில் உள்ளது. பெண்களுக்கு அவர்களது வீட்டிற்குள்ளேயே வன்முறையற்ற சூழலை அணுகும் உரிமை இருக்க வேண்டும். சட்டத்தில் இருந்த இந்த இடைவெளிதான், 2005ஆம் ஆண்டின் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் (Protection of Women from Domestic Violence Act, 2005) போன்ற சட்டங்களை நான் வடிவமைக்க வழிவகுத்தது. அந்தச் சட்டம், பெருமளவில், பெண்கள் வீட்டிற்குள் அதிக பாதுகாப்பு உணர்வைப் பெற உதவியுள்ளது. ஆனால் இறுதியில் தேவைப்படுவது சமூக மனப்போக்கில் ஏற்படும் மாற்றம்தான். ஆணாதிக்கம் இன்னும் நமது சமூக நிறுவனங்களை வடிவமைத்துக் கொண்டே இருக்கிறது.

நீதித்துறையை பாதிக்கும் ஆணாதிக்க சிந்தனை

கேள்வி: ஆணாதிக்கச் சிந்தனை இன்னும் நீதித்துறை சிந்தனையைப் பாதித்துக் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: ஆம், ஆணாதிக்கச் சிந்தனை நிச்சயமாக நீதித்துறையின் முழு அமைப்பிலும் ஊடுருவியுள்ளது. அதே நேரத்தில், இத்தகைய மனப்போக்குகளுக்கு எதிராக வாதாடுதல் மூலமும், சட்டப் போராட்டங்கள் மூலமும் அவற்றை எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். பெண்களைப் பற்றிய ஒரே மாதிரியான கற்பிதங்களை உருவாக்குவதில் சட்ட மொழி வகிக்கும் பங்கு குறித்த புரிதலும் இப்போது அதிகரித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பதவிக் காலத்தில், சட்ட உரையாடல்களில் பொருத்தமற்ற பாலினம் சார்ந்த சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க நீதிபதிகளுக்கு வழிகாட்டும் வகையில் ஒரு சட்டச் சொற்களஞ்சியம் வெளியிடப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு

கேள்வி: நீதிமன்ற அவமதிப்பு அதிகாரங்கள் விமர்சனங்களை இல்லாமலாக்கப்# பயன்படுத்தப்படுகின்றன என்று நீங்கள் கருதியதால் 1980களில் The Lawyers இதழைத் தொடங்கினீர்கள். சமீப காலங்களில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் அதிகரித்திருப்பதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? இத்தகைய அதிகாரங்கள் நீதிநிர்வாகத்தில் நேரடி குறுக்கீடு ஏற்படுத்தும் வழக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் எனச் சொல்ல வேண்டுமா?

பதில்: ஆம், நீங்கள் கூறிய இரண்டாவது கருத்துடன் நான் உடன்படுகிறேன். நீதிநிர்வாகத்தில் நேரடி குறுக்கீடு ஏற்பட்டால், நீதிமன்ற அவமதிப்பு அதிகாரங்களைப் பயன்படுத்துவது நியாயமானதாக இருக்கலாம்.

இறுதியில், நீதித்துறையானது தனது நற்பெயரைத் தானே சம்பாதிக்க வேண்டும். அது தனது சட்டபூர்வத் தன்மையை மட்டுமல்ல, தனது நியாயப்பூர்வத் தன்மையையும் நிரூபிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, அது பொதுமக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் அந்த நம்பிக்கையைப் பெறுவதற்கான வழி அல்ல.

மதப் பழக்கவழக்கங்கள்- அடிப்படை உரிமைகள்

கேள்வி: அரசமைப்புச் சட்டம் மதச்சார்புச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் நிலையில், மதப் பழக்கவழக்கங்கள் அடிப்படை உரிமைகளுடன் முரண்படுவதாகத் தோன்றும் வழக்குகளை நீதிமன்றங்கள் எவ்வாறு அணுக வேண்டும்?

பதில்: இந்த முரண்பாடு சமரசப்படுத்த முடியாதது. ஆனால் இந்தப் பிரச்சினை காலனித்துவத்தின் மரபாகும். 1772ஆம் ஆண்டில், இந்துக்கள் இந்து குடும்பச் சட்டத்தின்படியும், முஸ்லிம்கள் முஸ்லிம் குடும்பச் சட்டத்தின்படியும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி முடிவு செய்தது. தனிநபர் சட்டங்களை இவ்வாறு தனித்தனி பிரிவுகளாக ஒழுங்குபடுத்திக் கொண்டே இருப்பதற்கு எந்த அரசமைப்புச் சட்டம் சார்ந்த காரணமும் இல்லை. இதன் விளைவாக, அனைத்து தனிநபர் சட்டங்களிலும் பாகுபாடான நடைமுறைகள் தொடர்கின்றன. அவை சரிசெய்யப்படாமல் இருக்கும்போது, மதத்தின் அதிகாரமும் பிற அரசல்லாத சக்திகளின் அதிகாரமும் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரத்தைத் தாண்டிச் செல்லக்கூடும் என்பதை நாம் உணர்கிறோம். அது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

உச்சநீதிமன்ற நீதிபதி வாய்ப்பு

கேள்வி: உச்ச நீதிமன்றத்தின் அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நான்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் ஒரு பெண் மூத்த வழக்கறிஞரும் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இதை நீங்கள் தவறவிட்ட ஒரு வாய்ப்பாகக் கருதுகிறீர்களா?

பதில்: கொலீஜியம் தனது பரிந்துரைகளைச் செய்த நேரத்தில், மூன்று பெண்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாகப் பணியாற்றி வந்தனர்; நான்காவது ஒருவர் அந்தப் பொறுப்பை ஏற்கவிருந்தார். மூத்த பெண் நீதிபதிகள் கொண்ட இந்தத் தொகுப்பைப் பார்த்தபோது, மேலும் அதிகமான பெண்கள் உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவார்கள் என்று நான் நம்பியிருந்தேன். இருப்பினும், அனைத்து காலியிடங்களும் இன்னும் நிரப்பப்படவில்லை; எதிர்கால நியமனங்களில் பாலினப் பிரதிநிதித்துவத்திற்கு அதிக கவனம் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் உள்ளது.

நீதித்துறையால் தாக்கப்பட்ட தருணங்கள்..

கேள்வி: குஜராத் கலவரங்களில் தொடர்புடையதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சில அதிகாரிகளின் ஜாமீன் மனுக்களை நீங்கள் எதிர்த்ததைத் தொடர்ந்து, நீங்கள் இணைந்து நிறுவிய Lawyers Collective அமைப்பின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்ட (FCRA) பதிவு ரத்து செய்யப்பட்டதாக நீங்கள் எழுதுகிறீர்கள். இந்தத் தொழிலால் விரக்தியடைந்துள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: துரதிருஷ்டவசமாக, அந்த நடவடிக்கைகள் அனைத்தும், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு எதிராக உச்ச நீதிமன்றப் பெண் பணியாளர் ஒருவர் அளித்த பாலியல் தொல்லை புகார் பற்றியும், அந்த விவகாரம் கையாளப்பட்ட விதம் பற்றியும் நான் வெளிப்படையாகப் பேசியதுடன் தொடர்புடையவையே என்று நான் எப்போதும் கருதியிருக்கிறேன். என்னை வருத்தியது FCRA பதிவை இழந்ததே அல்ல; என் வாழ்நாள் முழுவதும் நான் சேவை செய்த நீதித்துறை என்ற ஒரு நிறுவனத்தால் தாக்கப்படுகிறேன் என்ற உணர்வுதான். இருப்பினும், அந்தக் கடினமான காலத்தை கடக்க எங்களுக்கு உதவியது, நாங்கள் தொழில்முறை வழக்கறிஞர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததுதான். அதுவே நான் இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்க விரும்பும் செய்தி. சட்டத் தொழில் மிகவும் வலிமையானதும் தற்சார்புள்ளதுமான ஒரு தொழில். இளம் வழக்கறிஞர்கள் தங்களுடைய சொந்த வலிமையை உணர வேண்டும். அவர்கள் தற்சார்புடன் இருந்து, மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகத் தொடர்ந்து செயல்படும் வரையில், அவர்கள் அஞ்ச வேண்டிய எதுவும் இல்லை.

நேர்காணல்: ஆராத்ரிகா பௌமிக் ( AARATRIKA BHAUMIK)

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share