அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாவட்ட ஆட்சியர் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றிக் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
அதன்படி ராமநாதபுரம் மாவட்ட போட்டிகளுக்கான பரிசு வழங்கும் விழா ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று (ஜூன் 17) நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழா மதியம் 3 மணிக்கு தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் முன்னரே வந்த நிலையில், 2.50 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்ச்சி தொடங்கிவிட்ட நிலையில் அங்கே வந்த எம்.பி. நவாஸ் கனி, “நான் வருவதற்கு முன்பாக ஏன் நிகழ்ச்சியை ஆரம்பித்தீர்கள்?” என்று மாவட்ட ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினார்.
அப்போது அருகிருந்த அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏதோ பதில் சொல்ல அவருக்கும் எம்.பி.யான நவாஸ்கனி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இருவரது ஆதரவாளர்களும் அங்கே கூடியிருந்த நிலையில் கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை நிலவியது. இதனால் மாவட்ட ஆட்சியர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றார்.
ஆனால் எதிர்பாராத விதமாக இரு தரப்பும் மோதிக் கொண்டதில் அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் தள்ளிவிடப்பட்டதில் கீழே தவறி விழுந்தார். இதனையடுத்து டென்ஷனான நிலையில் எம்.பி. நவாஸ்கனி அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் அங்கிருந்து சென்றார்.
மேலும் மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நவாஸ் கனியிடம், அமைச்சருடன் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “மாவட்ட ஆட்சியர் எந்த முகாந்திரமும் இன்றி நிகழ்ச்சியை முன்கூட்டியே தொடங்கிவிட்டார். இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது வாக்குவாதம் ஏற்பட்டது. நடந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் மீது தலைமை செயலாளரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே கட்சியினர் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பியிடம் புகார் தெரிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ கண்ணப்பன் திமுக அரசில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அமைச்சராக இருக்கிறார். நவாஸ் கனி கடந்த 2019 எம்பி தேர்தலில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக் கட்சியில் நின்று வெற்றி பெற்ற எம்பி என்பது குறிப்பிடத் தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
பணக்கார மாணவர்களுக்கே சாதகமான ’நீட்’: ஆய்வில் அம்பலம்!
டிஜிட்டல் திண்ணை: டார்கெட் உதயநிதி… திணறும் ED: விசாரணையில் குதிக்கும் இன்னொரு ஏஜென்சி!
