“கோவை அதிமுக என்றும் எஃகு கோட்டை; பிரிவினையை தூண்டாதீங்க!” – செ.ம.வேலுசாமி பகிரங்க வேண்டுகோள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Velusamy

தமிழக சட்டமன்றத் தேர்தலில் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்நிலையில், அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகச் செயல்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையிலான ஒரு பிரிவினர், கட்சியின் கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு பதிலாக, அப்பதவியை முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமிக்கு வழங்குவதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார்.

ADVERTISEMENT

அதன்படி, கோவை அதிமுக அலுவலகத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளராகச் செ.ம.வேலுசாமி நேற்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் கே.அர்ஜுனன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், முத்துக் கருப்பண்ணசாமி ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர் செ.ம.வேலுசாமி பேசுகையில், “கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு எஃகு கோட்டை.
இன்றைய கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களையும் நான் அழைத்தேன். ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்களால் வர இயலவில்லை என்று கூறினர். அது பரவாயில்லை.

ADVERTISEMENT

ஆனால், தயவுசெய்து தொண்டர்களும் நிர்வாகிகளும் எங்களுக்குள் வேலுச்சாமியா, வேலுமணியா, முத்துக் கருப்பண்ணசாமியா, தாமோதரனா எனப் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம். நான் அப்படி நினைக்கவில்லை. அதேபோல் கட்சிக்குள் சில கருத்து வேறுபாடுகளால் மனசங்கடங்கள் ஏற்படுவது இயல்பு தான். அதோடு அதை விட்டுவிடுங்கள். அவர்களும் நம் கட்சியில்தான் இருக்கிறார்கள். இதற்காக வாட்ஸ்அப் (WhatsApp) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு, கட்சியின் நற்பெயரைக் கெடுக்க வேண்டாம்.

இத்தனை நாள்கள் கழித்து நான் இந்த அலுவலகத்திற்கு வரக் காரணம், யாருடைய ஒப்புதலும் இல்லாமல் தாறுமாறாக இந்த கட்டடத்திற்குள் நுழையக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அனைவருடைய மன ஒற்றுமையோடு, அவர்களே சாவியைக் கொடுத்து ‘நீங்களே திறந்து நடத்துங்கள்’ என்று சொல்லும் நிலை வர வேண்டும். இல்லையெனில், ‘கோவையில் அதிமுக கோஷ்டி பூசலாக இருக்கிறது’ என்று தமிழ்நாடு முழுவதும் தப்பாகப் பேசுவார்கள். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் நான் இவ்வளவு நாளாக அமைதியாக இருந்தேன்.

ADVERTISEMENT

யாரும் நாளை முதல் கட்சி அலுவலகத்திற்கு வரலாம். தேவையில்லாமல் பெரிய கூட்டத்தைக் கூட்டி, நான் ஏதோ பெரிய ஆள் என்பதைக் காண்பித்து, மற்றவர்களுக்கு வெறுப்பையோ, காயத்தையோ ஏற்படுத்த விரும்பவில்லை. நாம் அமைதியாக இருந்து நம்முடைய பணிகளைச் செய்வோம். எனக்கு எல்லாரும் வேண்டியவர்கள் தான். யாராவது என்னைப்பற்றித் தவறாகப் பேசியிருந்தாலும், அதைப் பற்றி நான் நினைக்கப்போவதில்லை. அதுதான் நம்முடைய சகோதர பாசம்.

நம் கட்சியில் வார்டு செயலாளராக இருந்தாலும், நகர அல்லது பேரூர் செயலாளராக இருந்தாலும், மக்கள் மத்தியில் ஏதேனும் ஒரு விஷயம் நடந்தால், அந்த ஊரில் உள்ள நல்லது கெட்டதுகளில் அனைவரும் உடனடியாகப் போய்ப் பங்கெடுத்துப் பழக வேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒற்றுமையோடு நாம் செயல்பட வேண்டும்.”
இவ்வாறு செ.ம.வேலுசாமி பேசினார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share