கோவையில் இருந்து தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய்க்கு, அவரது தேர்தல் வாக்குறுதிகளை நினைவுபடுத்தும் விதமாக வல்லாரைக் கீரை மற்றும் தேர்தல் அறிக்கையைத் தபாலில் அனுப்ப முயன்ற தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 3 பேரை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த மே 10-ஆம் தேதி காங்கிரஸ் விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று ஏறத்தாழ ஒரு மாதம் ஆகும் நிலையில், தங்களது தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் எதைப் பற்றியும் பேச மறுப்பதாகத் தமிழ்ப் புலிகள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், ” கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தவெக ஆட்சி அமைந்தவுடன் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பேருந்துகளிலும் அனைத்து மகளிருக்கும் இலவசப் பயணம் என்று அறிவித்ததைப் பற்றி எந்தவொரு சலனமும் இல்லாமல் இருக்கின்றனர். மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் என்று அறிவித்துவிட்டு, அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியதில் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இது தவிர, அறிவிக்கப்படாத மின்வெட்டும் அடிக்கடி ஏற்படுகிறது. இது போன்ற எண்ணற்ற வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, தற்போது ஒரு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியாமல் இருக்கின்றனர்” எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல்வர் விஜய் தனது தேர்தல் அறிக்கையை மறந்துவிட்டதால், அவருக்கு நினைவுபடுத்தும் விதமாகத் தேர்தல் அறிக்கையையும், நினைவாற்றலை வளர்த்துக்கொள்ளும் வல்லாரைக் கீரையையும் அனுப்பத் தமிழ்ப் புலிகள் அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள தபால் அலுவலகத்திற்கு வந்தனர்.
தமிழ்ப் புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் இளவேனில் தலைமையில் அவர்கள் வல்லாரைக் கீரையைத் தபாலில் அனுப்ப முயன்றபோது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். முதல்வருக்கு வல்லாரைக் கீரையை அனுப்ப அனுமதி இல்லை எனக் கூறி, அதனைப் பறிமுதல் செய்ததோடு, இளவேனில் உள்ளிட்ட 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழ்ப் புலிகள் அமைப்பின் பொதுச்செயலாளர் இளவேனில் செய்தியாளர்களிடம் பேசுகையில் “தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் பதவியேற்று ஒரு மாதமாகியும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. எனவே, அவருக்குத் தேர்தல் அறிக்கை குறித்து நினைவுபடுத்தும் விதமாக வல்லாரைக் கீரை மற்றும் தேர்தல் அறிக்கையை அனுப்ப வந்தபோது, காவல்துறையினர் அனுமதி மறுத்து எங்களைக் கைது செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
