ஐந்து இசையமைப்பாளர்களை ஒன்றிணைத்த திரைப்படம்!

Published On:

| By uthay Padagalingam

Kannil Theriyum Kathaikal

வெற்றிப்படங்கள் மட்டும்தான் திரை வரலாற்றில் இடம்பெறும் என்றில்லை. சில நேரங்களில் தோல்விப்படங்களும் கூட அதில் பங்கேற்கும். அந்தளவுக்குச் சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கும். அவ்வாறிருந்தும் மக்களிடம் வெற்றியைப் பெறாமல் போனதற்குச் சில காரணங்கள் இருக்கும். சில ஆண்டுகள் கழித்து, அந்த காரணங்களை மறந்துவிட்டு அப்படங்களை ரசிகர்கள் சிலாகிக்கக்கூடும். Kannil Theriyum Kathaikal

அப்படியொரு திரைப்படமாகத் திகழ்வது, ஏ.எல்.ராகவன் – எம்.என்.ராஜம் தம்பதியரின் தயாரிப்பில், தேவராஜன் – மோகன் இயக்கத்தில் சரத்பாபு, ஸ்ரீப்ரியா, வடிவுக்கரசி, செந்தாமரை, விஜயசந்திரிகா, வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்த ‘கண்ணில் தெரியும் கதைகள்’.

1980ஆம் ஆண்டு மார்ச் 14ஆம் தேதியன்று இப்படம் வெளியானது. இன்றோடு 45 ஆண்டுகள் ஆகின்றன. Kannil Theriyum Kathaikal

எளிமையான கதை! Kannil Theriyum Kathaikal

ஊரில் கொடுமைகள் செய்துவரும் பண்ணையாரை ஒருவர் எதிர்க்கிறார். அவர் யாராக இருக்க முடியும். அவரது கொடுமைகளால் பாதிக்கப்பட்டவராக இருப்பார்.

அப்படிப்பட்ட நபர் நன்றாகப் படித்து பட்டம் பெற்று ஒரு நல்ல வேலையில் சேர்ந்து பணம் சம்பாதித்து அந்த ஊருக்குத் திரும்புகிறார். பண்ணையார் வசமிருக்கும் குடும்பச் சொத்தினை மீட்கிறார்.

இப்படியே கதை சென்றால் ‘ஹீரோயிசம் – வில்லனிசம்’ மோதலாக மட்டுமே இருந்துவிடுமே? அதுவும் தவிர, அது மட்டுமே ஒருவரது வாழ்வாகி விடாதே!

அந்த நபர் இரண்டு காதல்களை எதிர்கொள்கிறார். அவர் ஒரு பெண்ணை விரும்புகிறார். இன்னொருபுறம், இன்னொரு பெண் அவரை விரும்புகிறார்.

இரண்டில் ஒரு காதல் தானே ‘சுபமாக’ முடிவடைய முடியும். அதற்கும் அந்த பண்ணையாரே காரணமாக இருக்கிறார். Kannil Theriyum Kathaikal

என்ன நடந்தது? அந்த பண்ணையாரை எதிர்த்த நபர் யார்ர்? அவரைக் கைபிடித்தவர் யார்? இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கண்ணில் தெரியும் கதைகள்’ திரைப்படம்.

உண்மையைச் சொன்னால், இது ஒரு எளிமையான கதை. இன்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வைக் காட்டுகிற திரைப்படங்களில் இதன் சாராம்சத்தைக் காண முடியும்.

கன்னட நாவலாசிரியரான ஸ்ரீ கிருஷ்ண அலஹள்ளியின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்ட படம் இது. அழகாபுரி அழகப்பன், அமுதவன் ஆகியோர் இதற்கு வசனம் எழுதியிருந்தனர். இவர்களோடு தேவராஜ் – மோகன் இயக்கமும் சேர்ந்து இப்படத்தின் காட்சியமைப்பைத் தீர்மானித்தன.

மார்க்கஸ் பார்ட்லே ஜுனியரின் ஒளிப்பதிவு இப்படத்தின் ஒவ்வொரு பிரேமையும் செறிவானதாக மாற்றியிருந்தது. Kannil Theriyum Kathaikal

பெரிதாக ஒப்பனை இல்லாத முகங்கள், கிராமத்து லொகேஷன்கள், இயல்பான நடிப்பு என்று எண்பதுகளில் நிலவிய ‘புதிய அலை’ திரைப்படங்களை ஒத்திருந்தது ‘கண்ணில் தெரியும் கதைகள்’. ஆனால், அது இப்படத்தின் வெற்றிக்கு உதவவில்லை.

இத்திரைப்படத்தில் அந்த பண்ணையாரின் கொடுமைகளையும் அதனால் அவர் சார்ந்த கிராமத்தினர் படுகிற இன்னல்களையும் காட்டுகின்றன தொடக்கத்தில் வரும் முக்கால் மணி நேரக் காட்சிகள். அதில் நாயகன், நாயகியரின் பால்ய பருவமே காட்டப்படுகிறது. பிறகே, சமகாலத்திற்குத் திரைக்கதை தாவுகிறது. இப்படத்தின் பலவீனம் அதுவே.

ஏனென்றால், திரைப்படங்களில் இது போன்ற முன்கதைகள் இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்களைத் தாண்டினால் சலிப்புறுகிற மனநிலையே அப்போதிருந்தது.

படத்தின் கிளைமேக்ஸில் இரு நாயகிகளில் யாரைக் கதாநாயகன் கைபிடிக்கிறார் என்பதிலும் கோட்டைவிட்டிருந்தனர் இயக்குனர்கள். இந்தப் படத்தின் தோல்விக்கான முக்கியக் காரணம், அந்த முடிவை ஏற்றுகொள்ளாத மக்களின் மனநிலையே..!

இதில் நாயகனாக சரத்பாபுவும் அவர் காதலிக்கும் பெண்ணாக வடிவுக்கரசியும், அவரை ஒருதலையாகக் காதலிப்பவராக ஸ்ரீப்ரியாவும் நடித்திருந்தனர். ஒருவேளை காதலியாக ஸ்ரீப்ரியாவையும் இன்னொரு நாயகியாக வடிவுக்கரசியையும் நடிக்க வைத்திருந்தால் மக்களின் எண்ணவோட்டம் மாறியிருக்கலாம். எவர் கண்டார்?

எத்தனை சொன்னாலும், இப்படத்தின் முடிவு ஒருதலைப்பட்சமானது என்பதை மறுக்க முடியாது.

இப்படத்தில் செந்தாமரை, அவரது மனைவியாக வரும் எம்.என்.ராஜம், வெண்ணிற ஆடை மூர்த்தி, விஜயசந்திரிகா, வேலையாளாக வரும் குலதெய்வம் ராஜகோபால், நாயகனின் தந்தையாக வரும் வீராச்சாமி என்று பலர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். அதுவே, இன்றும் இப்படத்தை அயர்ச்சியுறாமல் காணச் செய்கிறது.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நடிகை ஸ்ரீப்ரியா உடன் தனக்கு நட்பு கிடைக்கக் காரணமாக இருந்தது ஒரு சம்பவம் தான் என்று சொல்லியிருந்தார் வடிவுக்கரசி. படப்பிடிப்பின்போது உடனடியாகத் தங்கியிருக்கும் அறைக்குத் திரும்ப வேண்டிய சூழல் நேர்ந்தபோது, அவர் அதனைக் கவனித்து தன்னுடன் காரில் ஏற்றி அழைத்துச் என்று உதவியதை நினைவுகூர்ந்திருந்தார். அதற்குக் காரணமான திரைப்படம் ‘கண்ணில் தெரியும் கதைகள்’ என்றே நினைக்கிறேன். ஏனென்றால், இருவரும் சேர்ந்த நடித்த முதல் படமிது. Kannil Theriyum Kathaikal

ஐந்து இசையமைப்பாளர்கள்! Kannil Theriyum Kathaikal

இது போன்ற விஷயங்களைத் தாண்டி, இப்படத்திற்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு.

இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைப்பதே பெரிய விஷயம் என்றிருந்த திரையுலகில், ஐந்தாறு பேரை ஒன்றிணைப்பதெல்லாம் இன்று சர்வசாதாரணமாகிவிட்டது. அதுவும் கூட இந்தி திரையுலகில் மட்டுமே அது நிகழ்கிறது. தமிழ் திரையுலகில் இன்றும் அது அசாதாரணமானதுதான்.

கின்னஸ் சாதனை படைக்கும் நோக்கில் ஒரு நாளில் படம்பிடிக்கப்பட்ட ‘சுயம்வரம்’ திரைப்படத்தில் சிற்பி, தேவா, வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகிய நான்கு இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கின்றனர்.

இயக்குனர் வசந்த் ஆக்கிய ‘ஏய் நீ ரொம்ப அழகா இருக்க’ படத்தில் ராகவ் – ராஜா, ஸ்ரீனிவாஸ், ரமேஷ் விநாயகம், முருகவேல், அரவிந்த் – சங்கர் ஆகிய இசையமைப்பாளர்கள் பாடல்களை அமைத்திருந்தனர். பின்னணி இசையிஐ சபேஷ் முரளி கையாண்டிருந்தனர்.

பிஜோய் நம்பியாரின் ‘டேவிட்’ படத்தில் ஏழு பேர் இசையமைத்திருந்தனர். ராகவா லாரன்ஸ் இயக்கிய ‘காஞ்சனா 2’வில் தமன், சி.சத்யா, லியோன் ஜேம்ஸ், அஸ்வமித்ரா என்று நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்தனர்.

இதற்கெல்லாம் முன்னோடியாகத் திகழும் வகையில், ‘கண்ணில் தெரியும் கதைகள்’ படத்தில் ஐந்து இசையமைப்பாளர்கள் இசையமைத்திருந்தனர்.

’ஒண்ணு ரெண்டு மூணு’ என்று ஆடு மேய்க்கும் சிறுவர்கள் பாடுவது போன்று அமைந்த பாடலுக்கு ‘அகத்தியர்’ என்ற பெயரில் டி.ஆர்.பாப்பா இசை அமைத்தார்.

அதிலொரு சிறுவன் ரௌத்திரம் கொள்கிற காட்சியின் தாக்கத்திற்காக, ‘வேட்டைக்காரன் மலையில் ஒரு காட்டு யானை’ பாடலைத் தந்தார் கே.வி.மகாதேவன்.

நாயகன் நாயகியை முதன்முறையாகப் பார்க்கிற சூழலுக்காக, ‘நான் ஒரு பொன்னோவியம் கண்டேன்’ பாடலுக்கு இசையமைத்தார் இளையராஜா.

அந்த காதலர்கள் பிரிந்து வாடுவதைக் காட்ட உதவியது, சங்கர் கணேஷ் இசையமைத்த ‘நான் உன்னை நெனைச்சேன் நீ என்ன நினைச்ச’ பாடல்.

கிளைமேக்ஸில் நாயகியின் இறப்பு கண்டு நாயகன் வருந்தி அழுவதாக அமைக்கப்பட்டிருந்தது ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்த ‘நான் பார்த்த ரதிதேவி’ பாடல்.

இப்பாடல்களுக்கு வாசுகிநாதன், கண்ணதாசன், புலமைப்பித்தன், வாலி, முத்துலிங்கம் ஆகிய கவிஞர்கள் பாடல் எழுதியிருந்தனர்.

இத்தனை இசையமைப்பாளர்களை ஒரே படத்தில் ஒன்றிணைத்தது எப்படி? அதற்குக் காரணம், இதன் தயாரிப்பாளர் ஏ.எல்.ராகவன். பின்னணிப் பாடகராகத் திகழ்ந்த அவர், திரையுலகில் இருந்த அனைவரோடும் இனிய உறவைப் பாராட்டியவர். அதனாலேயே இத்தனை இசையமைப்பாளர்களையும் பாடலாசிரியர்களையும் ஒரு திரைப்படத்தில் அவரால் இணைக்க முடிந்தது.

இந்தப் படத்தின் பின்னணி இசையை அமைத்திருந்தார் இளையராஜா. இன்றும் இப்படத்தின் காட்சிகளைக் கண்டால், அதன் தாக்கத்தை அதிகப்படுத்துவதில் அவரது பங்கு எத்தகையது என்று புரியவரும். Kannil Theriyum Kathaikal

‘கண்ணில் தெரியும் கதைகள்’ திரையரங்குகளில் வெளியாகிப் பெரிய வெற்றியைப் பெறவில்லைதான். அதனாலென்ன? தமிழ் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக ’ஐந்து இசையமைப்பாளர்களை ஒன்றிணைத்த திரைப்படம்’ என்ற பெருமை இதற்கு மட்டுமே உண்டு..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share