ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியானபோது அதனைக் காணாதவர்கள் சில நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் கழித்துப் பார்த்துவிட்டுச் சிலாகிப்பது என்பது ஒரு வகையில் வரம்; ஒரு வகையில் சாபம். யாருக்கு வரம், யாருக்கு சாபம் என்பதைப் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு நாம் அப்பாவிகள் அல்ல. அப்படியான திரைப்படங்கள் இன்று ‘அண்டர்ரேட்டட்’ என்ற வார்த்தைக்குள் அடக்கப்பட்டு விடுகின்றன. தொலைக்காட்சிகளில், இணையதளங்களில் அதுமாதிரியான திரைப்படங்களைத் தற்செயலாகப் பார்க்க நேர்கிறபோது, அவை குறித்து இணையத்தில் தேடித் துழாவத் தோன்றும். அப்படியொரு எண்ணத்தை அவ்வப்போது விதைக்கிற படங்களில் ஒன்று ‘ராஜதந்திரம்’. Rajathandhiram Movie Re Release
ஏ.ஜி அமித் எழுதி இயக்கியுள்ள ‘ராஜதந்திரம்’ ப்டத்தில் வீரா, ரெஜினா கசாண்ட்ரா, பட்டியல் சேகர், தர்புகா சிவா, அஜய் பிரசாத், ஆடுகளம் நரேன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இதில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடலை ஜி.வி.பிரகாஷ்குமார் தந்திருந்தார். பின்னணி இசையை சந்தீப் சௌதா அமைத்திருந்தார். Rajathandhiram Movie Re Release
எப்போது இப்படத்தைப் பார்த்து முடித்தாலும் ‘ப்ரெஷ்’ஷாக உணர வைப்பதே இதன் வெற்றி. அவ்வாறு காண்பதற்கு முன்பாக, இப்படம் குறித்துச் சில விஷயங்கள் மட்டுமே நம் நினைவிலிருக்கும். மறந்துபோன விஷயங்கள் அனைத்தும் ஒவ்வொரு காட்சியிலும் தானாக மேலெழும். அரைகுறையாகத் தெரியும் புதிரின் விடையை அறிவது போன்று ‘ராஜதந்திரம்’ திரையனுபவம் ஒவ்வொரு முறையும் அத்தகைய உற்சாகத்தைத் தரும்.
‘ஹெய்ஸ்ட்’ வகைமை கதை! Rajathandhiram Movie Re Release

நான்கு அல்லது ஐந்து பேர் சேர்ந்து ஒரு நகைக்கடை அதிபரை ஏமாற்றத் திட்டமிடுகின்றனர். அவரது நகைக்கடையைக் கொள்ளையடிக்க முயற்சிக்கின்றனர். அரசல்புரசலாக அந்த விஷயம் தெரிந்தவுடனேயே, சம்பந்தப்பட்டவர்களைத் தாக்க அடியாட்களை அனுப்புகிறார் அந்த முதலாளி.
அதன்பின்னரே, அந்த நபரிடம் இருந்து கொள்ளையடிப்பதன் மூலமாக, அவரால் பாதிக்கப்பட்ட நல்ல மனிதர்களுக்குச் சிறிதளவாவது நியாயம் கிடைக்கும் என்ற உண்மையைக் கொள்ளையடிக்க முயன்ற கும்பலில் உள்ள இளைஞர்கள் புரிந்துகொள்கின்றனர். Rajathandhiram Movie Re Release
அதிலொரு இளைஞர் மூளையாகச் செயல்பட்டு, இதர நபர்களின் துணையோடு அந்த நகைக்கடையில் கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்.
இந்த முறை, அந்த நகைக்கடை உரிமையாளரிடம் சொல்லிவிட்டுக் கொள்ளையடிப்பதென்று அவர் திட்டமிடுகிறார். அவரது மூளையில் என்ன இருக்கிறது? அவர் எப்படி அந்தச் செயலைச் செய்தார்? அந்த நகைக்கடை அதிபர் எந்த வகையில் பாதிப்புக்குள்ளாகிறார்? கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்னவாயின?
இந்த கேள்விகளுக்குப் பதில் சொல்லும் வகையில் ‘ராஜதந்திரம்’ திரைக்கதை பல திருப்பங்களோடு வடிவமைக்கப்பட்டிருக்கும். Rajathandhiram Movie Re Release
ஆக்ஷன், த்ரில்லர் என்று திரையில் சொல்லப்படும் கதையின் வகைமையை முடிவு செய்தபிறகு இதர வகைமைகளை அதில் கலந்து சொல்வதே வெற்றிகரமான திரையாக்க உத்தியாக இருக்க முடியும். பல வெற்றிப் படங்களில் இந்த பார்முலாவை காண முடியும்.
தலைவாழை இலையில் அறுசுவை உணவுண்ணும் விருப்பமுள்ள நமது ரசனையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். Rajathandhiram Movie Re Release
ஒரு ஸ்டைலிஷான ’ஹெய்ஸ்ட் த்ரில்லர்’ திரைப்படமாகத் தோற்றமளித்தாலும், ’ராஜதந்திரம்’ படத்தில் ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன், சென்டிமெண்ட் மொமண்ட்கள் குறிப்பிட்ட அளவில் உண்டு. அது கதையோடு கலந்து நிற்கும் வகையில் கதாபாத்திரங்களுக்கு இடையிலான தொடர்பு நிறுவப்பட்டிருக்கும்.
ஒரு மூன்றாம் மனிதர் ஒரு நிகழ்வை வேடிக்கை பார்ப்பது போன்றிருக்கும் இதன் திரைக்கதை ட்ரீட்மெண்ட் அத்தகைய காட்சிகளை வேறு மாதிரியாக உணர வைக்கும். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி. Rajathandhiram Movie Re Release
’ரீரிலீஸ்’ செய்யலாம்! Rajathandhiram Movie Re Release

‘ராஜதந்திரம்’ படத்தைப் பார்த்தவுடன் புத்துணர்ச்சி அடைவதற்கு முக்கியக் காரணம், எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு. ரொம்பவே சீரியசான படங்களில் அவரைப் பார்த்தவர்களுக்கு, ஒரு கமர்ஷியல் படத்தில் அவர் பணியாற்றியிருக்கிறார் என்பது இன்னும் கொஞ்சம் நெருக்கமாக உணர வைக்கும். இந்த படத்தின் காட்சியாக்கத்தில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நேர்த்தி ‘வாவ்’ ரகம். போலவே, பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு, சந்தீப் சௌதாவின் பின்னணி இசை, விதேஷின் கலை வடிவமைப்பு, அழகிய கூத்தன் & சுரேன் ஜியின் ஒலி வடிவமைப்பு என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்போடு உருவாகியிருக்கும் இப்படம்.
நடிப்பைப் பொறுத்தவரை, நாம் இதுவரை காணாத ‘காம்பினேஷன்’ திரையில் தெரியும். இளவரசு, ஆடுகளம் நரேன் தாண்டி ரெஜினா கசாண்ட்ராவை பெரிய அளவில் கொண்டாட வைத்த படமிது. அதற்கு முன்னர் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘நிர்ணயம்’ படங்களில் நடித்திருந்தாலும், அவரை ஒரு நாயகியாக முழுமையாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வைத்த திரைப்படம் இது.
இதில் அஜய் பிரசாத், தர்புகா சிவாவின் பாத்திரங்கள் வித்தியாசமானதாகத் தென்படாவிட்டாலும், மிக இயல்பாகத் தோற்றம் தரும். தர்புகா சிவா ஒரு இசையமைப்பாளராக, ‘முதல் நீ முடிவும் நீ’ பட இயக்குனராக உலா வருகிறார். அஜய் இப்போது நடிக்கிறாரா என்று தெரியவில்லை.
போலவே, நாயகன் வீரா எனும் வீரபாகுவும் பெரிதாகத் திரையில் பார்க்க முடிவதில்லை. நடுநிசி நாய்கள் படத்தில் நடித்தவர், ‘ராஜதந்திரம்’ படத்திற்குப் பிறகு ‘துணிவு’ படத்தில் ஒரு பாத்திரத்தில் வந்து போயிருந்தார். ‘லக்கிமேன்’ படத்திலும் இடம்பெற்றிருந்தார்.
‘சாக்லேட் பாயாக’ இல்லாவிட்டாலும், பெண்களின் மனம் கவரக்கூடிய நட்சத்திரமாக, சிறப்பான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிற ஒரு நாயகராக அவர் மிளிர முடியும். ஆனாலும், டைரக்ஷன் வேட்கையில் அது போன்ற வாய்ப்புகளைத் தவறவிடுகிறாரா என்று தெரியவில்லை. ‘ராஜதந்திரம்’ பார்க்கையில் இவர் வேறு படங்களில் நடிக்கிறாரா என்று தேடுபவர்கள் கணிசம்.
இதில் வில்லனாக வருபவர் இயக்குனர் விஷ்ணுவர்தனின் தந்தை ’பட்டியல்’ சேகர். அவரது நடிப்பு, டப்பிங் ஆகியன ஒரு ‘டெரர்’ வில்லனாக திரையில் காட்டின.
’ப்ராம்ப்டிங்’ முறையைப் பயன்படுத்தி நடிப்பது போன்றிருந்தாலும், வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் முதியவர் பாத்திரத்தில் கலக்கியிருந்தார். அதன்பிறகு அவரைத் தேடி வாய்ப்புகள் வந்தனவா? அதனை அவர் விரும்பினாரா என்று தெரியவில்லை.
இந்த படத்தை ஏ.ஜி.அமித் இயக்கினார். இதற்குப் பிறகு விளம்பரப் படங்கள், டாக்குமெண்டரி என்று இயங்கிக் கொண்டிருக்கிறாரா? அடுத்த பட முயற்சிகள் ஏதும் பலனளிக்கவில்லையா? தெரியவில்லை. ஆனால், அவரைச் சிறந்த இயக்குனராக அடையாளம் காட்டும் வகையில் இப்படம் இப்போதும் இருக்கிறது.
இந்த படத்தின் பாத்திரங்களுக்கான அறிமுக ‘டீசர்கள்’ இப்போதும் யூடியூபில் காணக் கிடைக்கின்றன. அதேபோல ட்ரெய்லரும் இருக்கிறது. அவற்றைப் பார்த்தவுடன், இப்படம் குறித்த எதிர்பார்ப்பு நிச்சயம் அதிகமாகும். அவற்றைக் கண்டு ரசித்துவிட்டு முழுப்படத்தையும் பார்த்தால் வேறொரு அனுபவம் கிடைக்கும். இப்படி ‘மார்க்கெட்டிங்’ உத்திகளிலும் கலக்கல் பணியை மேற்கொண்டிருந்தது இப்படக்குழு.
ராஜந்தந்திரம் திரைப்படம் 2015 மார்ச் 13 அன்று வெளியானது. சரியாக ஓராண்டு கழித்து ‘ராஜந்தந்திரம் 2’ படத்திற்கான அறிவிப்பு வெளியானது. ஒரு ட்ரெய்லர் கூட ‘கட்’ செய்து வெளியிட்டிருந்தது படக்குழு. முதல் பாகத்தைத் தயாரித்த செந்தில் வீராசாமி இதனை இயக்குவதாகச் சொல்லப்பட்டிருந்தது. இளையராஜா இசையமைப்பதாகவும் அறிவிப்புகள் வந்தன.
ஆனால், இப்போது வரை இப்படம் என்னவானது என்று தெரியவில்லை. முழுமையாகத் தயாராகி, பின்னர் வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கிறதா அல்லது முழுமையாகத் தயாராவதற்குள் இப்படம் முடங்கிவிட்டதா? ரசிகர்களின் கேள்விகளுக்கு ‘ராஜதந்திரம்’ குழுவினர் மட்டுமே பதிலளிக்க முடியும். Rajathandhiram Movie Re Release
ராஜதந்திரம் வெளியாகிப் பத்தாண்டுகள் ஆகின்றன. இப்போதும், அதனை நினைவுகூரத் துடிக்கிறது மனம். இதர மொழிகளில் இப்படத்தின் ‘டப்பிங்’ பதிப்பு வெளியாகியிருக்கின்றன. அவற்றைக் கண்டும் சில ரசிகர்கள் இப்படித் துடிக்கின்றனர் என்பதுதான் ஆச்சர்யம்.
’ராஜதந்திரம் 2’ எப்போது வெளிவரும் என்ற கேள்விக்குப் பதில் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கட்டும். இப்போதிருக்கும் மறு வெளியீட்டு ட்ரெண்டை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், ‘ராஜந்தந்திரம்’ படத்தை ‘ரீரிலீஸ்’ செய்ய வேண்டுமென்பதுவே நம் விருப்பம்..!