ஏலம் விடப்படும் சிவாஜியின் அன்னை இல்லம்… பின்னணியில் இருப்பது யார்?

Published On:

| By Kumaresan M

நடிகர் சிவாஜி கணேசன் வசித்த அன்னை இல்லம் சினிமாத்துறையில் மிக பிரபலமானது. தியாகராய நகரில் தெற்கு போக் சாலையில் உள்ள இந்த வீட்டுக்கு அன்னை இல்லம் என்று சிவாஜியே பெயர் சூட்டினார். அன்னை இல்லம் அன்பு நிறைந்த வீடு என்றால் மிகையல்ல. பெருந்தலைவர் காமராஜர் , வி.பி. சிங் முதல் எம்.ஜி.ஆர் வரை வந்து உணவு உண்டு சென்ற வீடு இதுவாகும்.court orders seizure sivaji’s home

முதலில் இந்திய அரசின் ஐசிஎஸ் அதிகாரியாக இருந்த ஜார்ஜ் டி.போக் என்பவருக்கு இந்த வீடு சொந்தமாக இருந்தது. இவர், அப்போதையை ஒரிஷா மாநிலத்தின் கவர்னராகவும் இருந்தார். ஜார்ஜ் டி போக் வசித்து வந்ததால்தான் இந்த வீடு இருந்த தெருவுக்கு முதலில் தெற்கு போக் ரோடு என்று பெயர் சூட்டப்பட்டது. நடிகர் சிவாஜி கணேசன் இந்த வீட்டை1959-ம் ஆண்டு வாங்கினார். நடிகர் சிவாஜி கணேசன் செவாலியே விருது வாங்கியதையடுத்து, சென்னை மாநகராட்சி தெற்கு போக் சாலையை ‘செவாலியே சிவாஜி கணேசன் சாலை’ என்று மாற்றியது.

அன்னை இல்லத்தின் தரைத்தளத்தில் உள்ள டைனிங் ஹால் உள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் இங்கே ஒரே நேரத்தில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மதிய உணவு தூள் பறக்கும். ஞாயிற்றுக்கிழமையானால் மட்டன், சிக்கன், மீன் பிரியாணி, அசைவ உணவுகள் அமர்க்களப்படும். நடிகர் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாளின் சமையல் சினிமா உலகில் வெகு பிரபலம் என்பதும் குறிப்பிடத்தக்கது. court orders seizure sivaji’s home

ஷுட்டிங் இல்லாத சமயத்தில் சிவாஜி, அன்னை இல்லம் வீட்டில்தான் இருப்பார். தற்போதும், பிரபு, ராம்குமார், விக்ரம் பிரபு குடும்பத்தினர் இங்குதான் கூட்டுக் குடும்பமாக வசிக்கின்றனர்.

அத்தகைய பெருமைமிக்க அன்னை இல்லத்தைதான் இப்போது ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்தின் ஈசன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ‘ஜகஜால கில்லாடி’ படத் தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ரூ. 3.74 கோடி கடன் பெற்றிருந்தார். கடன் திருப்பி செலுத்தவில்லை. இதையடுத்து, மத்தியஸ்தராக உயர் நீதிமன்ற நீதிபதி டி.ரவீந்திரன் நியமிக்கப்பட்டார். court orders seizure sivaji’s home

வட்டியுடன் சேர்த்து ரூ.9.39 கோடியை வசூலிக்கும் வகையில் ‘ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்துக்கு வழங்க மத்தியஸ்தர் உத்தரவிட்டிருந்தார். பட உரிமைகளை வழங்க எதிர்ப்பு எழுந்தது. இதனால், மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் வகையில் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட கோரி தனபாக்கியம் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த்துக்கு சொந்தமான நிறுவனம் பதிலளிக்க அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பதிலளிக்காததால் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share