வைஃபை ஆன் செய்ததும் அமலாக்கத்துறையின் மூன்று நாள் ரெய்டு முடிவுக்கு வந்த தகவல் இன்பாக்சில் வந்து விழுந்தது. digital thinnai.. dmk cases are turned against senthilbalaji
அதைப் பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“மார்ச் 6 ஆம் தேதி தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமையகம் மற்றும் தனியார் மதுபான ஆலைகளில் நடந்த மூன்று நாள் அமலாக்கத்துறை சோதனை முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
அமலாக்கத் துறை சோதனை நடத்துகிறது என்றால், அதற்கு அடிப்படையில் மாநில அரசின் அல்லது மத்திய அரசின் அதிகாரபூர்வமான விசாரணை அமைப்பு ஒரு எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியும். இந்த வகையில் அமலாக்கத்துறையின் இப்போதைய ரெய்டுகளுக்கு திமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை போட்ட எஃப்.ஐ.ஆர்.களே அடிப்படை என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரங்களில்.
தமிழ்நாட்டில் 2016 முதல் இப்போது வரை மொத்தம் டாஸ்மாக் விவகாரங்களில் தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை மொத்தம் 41 வழக்குகள் பதிவு செய்திருக்கிறது. இவற்றில் 34 வழக்குகள் அதிமுக ஆட்சிக் காலத்தில் பதிவு செய்தவை. மீதம் இருக்கும் ஏழு வழக்குகள் 2021 திமுக ஆட்சியில் பதிவு செய்யப்பட்டவை. டாஸ்மாக் கடைகளில் நடக்கும் முறைகேடுகளின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை இந்த வழக்குகளை பதிவு செய்திருக்கிறது.

உதாரணத்துக்கு 2021 அக்டோபரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். மதுபாட்டிலுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்பனை செய்வதாகவும், அரசு டாஸ்மாக் குடோனில் இருந்து கணக்கு காட்டாமல், கள்ள மார்க்கெட்டில் கூடுதல் மது பானங்களை விற்பனை செய்து லாபம் ஈட்டுவதாகவும் புகார்கள் வந்ததை அடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அந்த 2 டாஸ்மாக் கடைகளில் சோதனை நடத்தினர்.
6 மணி நேரமாக நடந்த இந்த சோதனையில், ரெய்டுக்கு முந்தைய 3 நாட்களில் வசூலான கணக்கில் வராத ரூ.31,680 மற்றும் சட்டவிரோதமாக தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.6 லட்சத்து 47 ஆயிரத்து 180 மதிப்புள்ள 7 ஆயிரம் மதுபாட்டில்களையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்களான பார்த்தசாரதி, அய்யப்பன், விற்பனையாளர்கள் நாராயணன், முருகன் ஆகிய 4 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுபோல மொத்தம் 7 வழக்குகள் திமுக ஆட்சியில் டாஸ்மாக் விவகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. digital thinnai.. dmk cases are turned against senthilbalaji
லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனைகளின் முடிவில் அந்த கடை விற்பனையாளர்கள், சூப்பர்வைசர்கள் மீதே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் அவர்கள் மட்டுமே இதை செய்துவிட முடியுமா, அவர்களுக்கு பின்னால் இருந்து இதைச் செய்தது யார் என்ற கேள்விக்கு செந்தில்பாலாஜியை ஃபிக்ஸ் செய்துகொண்டுதான் அமலாக்கத்துறை ரெய்டில் இறங்கியிருக்கிறது.

ஏற்கெனவே செந்தில்பாலாஜியை சிறைக்கு அனுப்பிய போக்குவரத்துத்துறை தொடர்பான வழக்கு, அவர் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்தபோது, அந்த ஆட்சியிலேயே தொடரப்பட்டது. செந்தில்பாலாஜியை அமைச்சர், மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து 2015ல் நீக்கிய ஜெயலலிதா, அப்போதே அவர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இப்போது திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை குறிவைப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசுடைய வணிக வரித்துறையின் முத்திரை இல்லாமல்- நேரடியாக மதுபாட்டில்களை கடைக்கு அனுப்பி விற்றார்கள் என்பதற்கான ஆதாரம் இந்த ரெய்டில் அமலாக்கத் துறையிடம் சிக்கவில்லை. அதேநேரம் தமிழகத்தின் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் தெலங்கானா, ஆந்திரா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த மதுபாட்டில்களை டாஸ்மாக் மூலமாக விற்றிருக்கிறார்கள் என்பதை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் விசாரணை மூலமாக ஸ்மெல் செய்திருக்கிறார்கள் அமலாக்கத் துறையினர். அங்கே குறைந்த விலைக்கு வாங்கி இங்கே அதிக விலைக்கு விற்றதாகவும், ஆட்சி மேலிடத்துக்கு இது தெரிந்து சில மாதங்களில் இந்த விற்பனை நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் சொல்கிறார்கள்.
இது தவிர தனியார் மதுபான ஆலைகள் டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்த கணக்கு வழக்குகளும் அமலாக்கத்துறையால் தீவிரமாக ஆராயப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாட்டில் 9 பீர் உற்பத்தி ஆலைகளும், 11 சாராய ஆலைகளும் இருக்கின்றன. இந்த 20 ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் மாதம் 55 லட்சம் கேஸ் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கேஸ் என்றால் 12 பீர் பாட்டில்கள் இருக்கும், பிராந்தி, விஸ்கி, ரம் என்றால் ஒரு கேஸுக்கு 12 ஃபுல் பாட்டில்கள் இருக்கும்.
ஒரு கேஸுக்கு இத்தனை ரூபாய் என்று அந்தந்த ஆட்சியின் ஆளுங்கட்சிக்கு பார்ட்டி ஃபண்ட் என தனியார் மதுபான ஆலைகள் கொடுத்துவிடும். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களிலும் எழுதப்படாத சட்டம்.

இந்த வகையில் எந்தெந்த மதுபான ஆலைகள் எத்தனை லட்சம் கேஸ்கள் டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்திருக்கின்றன என்று ஆராய்ந்திருக்கிறது அமலாக்கத்துறை. இதில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட மதுபான ஆலைகளின் சப்ளை குறைந்து வந்திருக்கிறது. அதேநேரம் எஸ் அண்ட் ஜே என்ற மதுபான ஆலை ஒரு மாதத்துக்கு 18 லட்சம் கேஸ்களை டாஸ்மாக்கிற்கு சப்ளை செய்து வருகிறது என்று அறிந்து, அந்த நிறுவன அலுவலர்களிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் குடைந்திருக்கிறார்கள்.
சசிகலாவின் மிடாஸ் ஆலை ஒரு காலத்தில் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆசியாவிலேயே பெரிய ஆலையான மிடாஸ் ஆலையை இப்போது சசிகலா தரப்பினர் நடத்தவில்லை. அதை உடையார் மகன் வெங்கட்டின் மகன் செங்குட்டுவன் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார் என்றும் அறிந்திருக்கிறது அமலாக்கத்துறை. அந்த ஆலை அலுவலர்களிடமும் விசாரணை நடந்திருக்கிறது.
இவ்வாறு திமுக அரசு போட்ட லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளையும், தனியார் மதுபான ஆலைகளின் சப்ளை கணக்கு வழக்குகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது அமலாக்கத் துறை.
இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி மீது அடுத்த கட்ட ஆக்ஷன்களுக்கு மத்திய அரசு தயாராகிறது என்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.