சிம்பொனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது என்று இசையமைப்பாளர் இளையராஜா இன்று (மார்ச் 10) தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். Ilayaraja requests fans symphony
லண்டனில் மார்ச் 8-ஆம் தேதி இசையமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசையை அரங்கேற்றினார். இன்று காலை லண்டனில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த இளையராஜாவை தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, பாஜக சார்பில் மாநில துணை தலைவர் கரு. நாகராஜன், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு மற்றும் இயக்குனர் பேரரசு உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலரும் வரவேற்றனர்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா, “மிகவும் மகிழ்வான இதயத்தோடு மலர்ந்த முகத்தோடு என்னை நீங்கள் வழியனுப்பி வைத்ததே இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த இறைவன் அருள்புரிந்தான்.
இசை கோர்ப்பாளர் நிகில் தாமஸ் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்தார். சிம்பொனி என்பது நான்கு பகுதிகளை கொண்டது. இந்த நான்கு பகுதிகளும் முடியும் வரை யாரும் கைத்தட்டக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், அங்கு வந்திருந்த பொதுமக்களும், ரசிகர்களும் முதல் பகுதி முடிந்தவுடன் கைத்தட்டுகிறார்கள். இதனால் அங்கு சிம்பொனி வாசித்த 80 பேரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்த சிம்பொனி இசை அனைத்து வல்லுநர்களாலும் பாராட்டப்பட்டது.
அரசு மரியாதையுடன் முதல்வர் என்னை வரவேற்றது எனது நெஞ்சத்தை நெகிழ வைக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் என்னை வாழ்த்திக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.
இந்த சிம்பொனி இசையை யாரும் டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது. நேரடியாக இந்த இசை அனுபவத்தை நீங்கள் அனைவரும் கேட்க வேண்டும். சிம்பொனி இசையை கேட்கும்போது 80 வாத்திய கருவிகளும் கேட்கும். ஆனால், மற்ற ஒலிப்பதிவுகளில் அவ்வாறு கேட்காது.
இந்த சிம்பொனி இசையை துபாய், பாரீஸ், ஜெர்மன் உள்ளிட்ட 13 நாடுகளில் அரங்கேற்ற தேதி குறித்தாகிவிட்டது.

நான் சாதாரண மனிதனை போல தான் இங்கே வேலை செய்துகொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி எனக்கு ஒரு எண்ணமும் கிடையாது. என்னை இசை தெய்வம், கடவுள் என்று சொல்லும் போது எனக்கு என்ன எண்ணம் தோன்றும் என்றால், இளையராஜா அளவுக்கு கடவுளை கீழே இறக்கிவிட்டீங்களே என்று தான் தோன்றும். இந்த இசை உலகமெங்கும் கொண்டு செல்லப்படும்.
82 வயதாகிவிட்டது, இனிமேல் இளையராஜா என்ன செய்யப்போகிறார் என்று நினைக்காதீர்கள். நீங்கள் நினைக்கிற அளவுக்குள் நான் இல்லை. பண்ணைப்புரத்திலிருந்து புறப்பட்டபோது வெறும் காலோடு தான் நடந்தேன். என்னுடைய சொந்த காலில் தான் நடந்து இந்த இடத்தில் நிற்கிறேன் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும். இளைஞர்கள் இதை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய அறிவுரை. முதல்வர் இதை விழாவாக எடுத்தால் சிறப்பாக இருக்கும். விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்” என்று தெரிவித்தார். Ilayaraja requests fans symphony