வருகிற சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக அதிமுக தலைமையால் 82 மாவட்டங்களுக்கும் மாவட்ட பொறுப்பாளர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். eps warning in admk meeting
இவர்கள் கலந்து கொண்ட காணொளி காட்சி கூட்டம் இன்று (மார்ச் 9) நடந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருக்கும் தலைமை கழக அலுவலகத்தில் இருந்து இந்த கூட்டத்தை நடத்தினார்.
தேர்தல் பொறுப்பாளர்கள் மட்டுமில்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு நிர்வாகிகளும் இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார் என்கிறார்கள்.
சமீப காலமாக அதிமுகவின் ஆய்வுக் கூட்டங்களில் கட்சியினருக்குள் வெளிப்படையான மோதல்கள் வெடித்து வந்தன. நெல்லை, கும்பகோணம் என கட்சிக் கூட்டங்களில் மோதல்கள் ஏற்பட்டன. சமீபத்தில் செங்கோட்டையன் கலந்து கொண்ட கோபிசெட்டிபாளையம் அதிமுக கூட்டத்திலும் வாக்குவாதங்கள் வெடித்தன. இங்கே இப்படி என்றால் தென் மாவட்டமான விருதுநகரில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக அதிமுக விருதுநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கடுமையாக பேசியிருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் இன்றைய கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி தனது கோபத்தை காட்டியிருக்கிறார். eps warning in admk meeting
“மாவட்ட பொறுப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
பூத் கமிட்டியில் 40 வயதுக்கு உட்பட்டோர்கள் மட்டுமே இருக்க வேண்டும். பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். பூத் கமிட்டியில் இருப்பவர்கள் உண்மையானவர்கள் தானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இதில் எந்த காரணத்தை முன்னிட்டும் சமரசம் செய்யக்கூடாது.

நான் திடீர் திடீரென அனைத்து மாவட்டங்களுக்கும் வந்து ஆய்வு செய்வேன். பூத் கமிட்டியில் குழப்பங்கள் குளறுபடிகள் இருந்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பேன். சீனியர் என்றோ, ஜூனியர் என்றோ பார்க்க மாட்டேன்” என்று பேசிய எடப்பாடி தொடர்ந்தார்.
“அம்மா இருந்தபோது நமது கட்சியை ராணுவ கட்டுப்பாட்டோடு வைத்திருந்தார். ஆனால் இப்போது அந்த கட்டுப்பாட்டில் தளர்வு ஏற்பட்டிருக்கிறது.
உட்கட்சியில் கோஷ்டி பூசல்கள் அதிகரித்துக் கொண்டு வருகின்றன. ஆளாளுக்கு இஷ்டப்படி மீடியாக்களில் பேட்டி கொடுக்கிறீர்கள். இதையெல்லாம் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டேன்.
இனிமேல் தவறு செய்தவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள். நீக்கப்பட்டு விட்டால், உடனடியாக எடப்பாடியாரை சேலம் வீட்டில் சென்று சந்தித்து ஏதாவது விளக்கம் சொல்லி மீண்டும் கட்சியில் சேர்ந்து விடலாம் என்று நினைக்காதீர்கள்.
நீக்கப்பட்டவர்களை கட்சியில் சேர்ப்பது பற்றி இப்போதைய கட்சி விதிகளை மிகக் கடுமையாக திருத்தி புதிய விதிகளை கொண்டு வர போகிறோம். அப்போது நீக்கப்பட்டவர்கள் மீண்டும் எளிதாக கட்சியில் சேர்ந்து விட முடியாது. eps warning in admk meeting
இதெல்லாம் ஞாபகம் வைத்துக் கொண்டு கட்சியின் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் காத்திருங்கள்.
2026 இல் நாம்தான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறோம். அதற்கான அடிப்படை வேலைகளை கவனிப்போம். மற்றபடி கூட்டணி பற்றியோ உட்கட்சி பிரச்சனை பற்றியோ மீடியாக்களில் பேசாதீர்கள்” என்று எச்சரிக்கை விடுத்து பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.