”எழுதக் கற்றுக் கொடுத்தவரே கலைஞர்தான்” -முதல்வரைச் சந்தித்த கே.பாக்யராஜ்

Published On:

| By Minnambalam

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் வெற்றிபெற்ற இயக்குனரும், நடிகரும் சிறந்த கதாசிரியருமான கே.பாக்யராஜ் இன்று (செப்டம்பர் 17) தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி தற்போது உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில்,

ADVERTISEMENT

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்க அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி நடைபெற்றது.

இதில் தலைவராக இயக்குநர் கே.பாக்யராஜ் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் போட்டியிட்டார்.

ADVERTISEMENT

அதில் கே.பாக்யராஜ் 192 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்குகளும் பெற்றனர். இதன் காரணமாக 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் வெற்றிபெற்றார்.

இந்த நிலையில் இயக்குநர் கே.பாக்யராஜ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று (செப்டம்பர்17) நேரில் சந்தித்தார். தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக பாக்யராஜ்,

ADVERTISEMENT

பதவியேற்று கொண்டதையடுத்து முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். அவருடன் பாக்யராஜ் அணியைச் சேர்ந்த செயலாளர் லியாகத் அலிகான், பொருளாளர் பாலசேகரன் ஆகியோரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

chief minister stalin actor bhagyaraj meeting

தமிழக முதல்வரைச் சந்தித்தபின்பு, இன்று (செப்டம்பர் 17) தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், “எங்களைப் போன்றவர்களுக்கு எப்படி எழுதுவது என்பதை கற்றுக்கொடுத்தவரே கலைஞர்தான்.

கலைஞரின் எழுத்தால் எம்.ஜி.ஆர் புரட்சி நடிகராகவும், சிவாஜி நடிகர் திலகமாகவும் உருவாக முடிந்தது. அவரது எழுத்து மூலம் நடிகர்கள் உருவானது மட்டுமின்றி, நாங்கள்கூட அவருடைய கதை, வசனத்தைப் பின்பற்றி வந்தவர்கள்தான்.

நான் தனிப்பட்ட முறையில் கலைஞரின் எழுத்தை அதிகம் ரசிப்பவன். என்னுடைய எழுத்தை அதிகம் மதித்தவர் கலைஞர்.

அவருடனான நட்பு பெரிது. இன்று எழுத்தாளர் சங்கம் என்றவுடனே முதலில் நினைவுக்கு வந்தது கலைஞர்தான். அவர் தற்போது உயிருடன் இல்லை.

இந்த நிலையில் தமிழக முதல்வரைச் சந்தித்து வாழ்த்து பெற்றோம். கலைஞரின் பொதுக்கூட்ட மேடைகளில் நிறைய தடவை பங்கேற்றிருக்கிறேன்.

நான் எம்.ஜி.ஆரோடு இருந்துகொண்டு கலைஞரை சந்திக்கும்போது பலர் என்னை தவறாக விமர்சிப்பார்கள்.

ஆனால், அதுகுறித்து எம்.ஜி.ஆர். என்னிடம் எதுவும் கேட்டதில்லை. அதேபோல், நான் எம்.ஜி.ஆரின் ரசிகனாக இருந்தாலும், என் எழுத்து குறித்து கலைஞர் பாராட்ட தவறியதில்லை.

என்னுடைய ‘இது நம்ம ஆளு’ படத்தைப் பார்த்து பாராட்டியதுடன் சிறப்புப் பரிசும் கொடுத்தார். சமீப காலமாக எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளது.

கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால், அதை நோக்கி சில இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர்.

வெற்றி மாறன் போன்றோர் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுக்கின்றனர்.

தமிழ்த் திரை உலகில் எழுத்தாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான். தமிழ் நடிகர்கள் படங்கள் ஆந்திராவிலும், இந்தியிலும் அதிகம் ஓடும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது” என்றார்.


ஜெ.பிரகாஷ்

திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தல்: வெற்றிபெற்றவர்கள் யார் யார்?

சசிகுமாரின் அடுத்த பட அப்டேட்!

Photo of author
Minnambalam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share