“சினிமாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான்” : பாக்யராஜ்

Published On:

| By Selvam

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க செப்டம்பர் 11 அன்று நடைபெற்ற தேர்தலில் வென்ற புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (செப்டம்பர் 16) நடைபெற்றது.

இவ்விழாவில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக நடிகர் மற்றும் இயக்குநருமான கே.பாக்யராஜ் பதவியேற்றுக் கொண்டார்.

ADVERTISEMENT

தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. இதுவரையிலும் நடந்தது போராட்டம் இல்லை.

இனிமேல்தான் நமக்கான போராட்டமே காத்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பாவது எதிரி யாரென்று தெரியும். ஆனால், இப்போது எதிரி யாரென்றே தெரியவில்லை.

ADVERTISEMENT

இந்த வெற்றி அனைவருக்கும் பொதுவானது. எனக்கு கிடைக்கும் பாராட்டு எதிர் அணியினருக்கும் உரித்தானது.

சங்கம் சிறக்க அவர்களுடன் இணைந்து வேலை செய்வேன். அளவோடு பேசுபவர்களை உலகம் பாராட்டும். அதனால் அளவோடு பேசுகிறேன்.

ADVERTISEMENT

உனக்குள்ளே இருக்கும் மனசாட்சிதான் சாமி. அந்த மனசாட்சிக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். சினிமாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் எழுத்தாளர்கள்தான்.

கதை ஆசிரியர்களின் உரிமைக்காக போராடுவது எங்களது கடமை. எதுவும் இல்லை என்றால் தர்ணாவில் ஈடுபட்டாவது நமது உரிமையை கேட்போம்.

நான் பெரிதாக எழுத்தாளர்களுக்கு எதுவும் செய்யவில்லை. இருப்பினும், என்னை தேர்தலில் ஜெயிக்க வைத்துள்ளனர். இனி, அவர்களுக்காகப் பாடுபடுவேன்.

எங்களுக்கு எதிர் அணி என்று எதுவும் இல்லை, எல்லாரும் ஒரே அணிதான். எழுத்தாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து முயற்சிகளும் எடுத்து எல்லா உதவிகளும் செய்து தருவேன்.” என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ் 2020-ம் ஆண்டு தேர்தலிலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இராமானுஜம்

“நான் என்ன கொலைகாரனா?”: ரசிகரிடம் நடிகர் அஜித் கலாய்!

ராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share