சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் பறவைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாளை முதல் வரும் 30-ஆம் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில் சில நீர் வாழ் பறவைகள் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளன. இதையடுத்து பறவைக் காய்ச்சல் இருக்கக்கூடும் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பறவைகளின் இருப்பிடம் தனிமைப்படுத்தப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூன்று நாட்களுக்கு, அதாவது வரும் நவம்பர் 30-ஆம் தேதி வரை அல்லது மறு உத்தரவு வரும் வரை பூங்கா மூடப்படுவதாக நிர்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை, கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள நீர்வாழ் பறவைகள் அடைப்பிடத்தில் 27.11.2026 அன்று சில பறவைகள் உயிரிழந்துள்ளன. பறவைகளின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. பரிசோதனைக்காக மாதிரிகள் போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்திற்கு (NIHSAD) அனுப்பப்பட உள்ளன. பறவைக் காய்ச்சல் தொற்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கிண்டி சிறுவர் பூங்கா 28.11.2026 முதல் 30.11.2026 வரை மூன்று நாட்களுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை பார்வையாளர்களுக்கு மூடப்படும். இந்திய அரசின் வழிகாட்டுதல்களின்படி, பாதிக்கப்பட்ட அடைப்பிடத்தைத் தனிமைப்படுத்துதல், கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், தூய்மைப்படுத்துதல் மற்றும் உயிரிப் பாதுகாப்பு நடைமுறைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பூங்காவில் உள்ள பிற பறவைகள் மற்றும் விலங்குகளின் உடல்நிலை தொடர்ந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








