தவெக தலைவர் விஜய் மீது வழக்கு பதிவு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம், தமிழகத்தில் முதல் முறையாகத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தொடர்ச்சியாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.சில இடங்களில் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டு ஆளும் கட்சி அனுமதி கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்துவதாக விஜய் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

ADVERTISEMENT

அதேசமயம், பல இடங்களில் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் அக்கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்கிறார். மேலும் திட்டமிட்டு தொடங்கிய பிரச்சாரம் பாதியில் ரத்து செய்யப்படும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் திருப்பூரில் தாமதம் காரணமாக போலீசார் எச்சரித்ததால் அனுமதி பெற்ற ரோடு ஷோவை ரத்து செய்தார் விஜய். நேற்று 8 மணி வரை விஜய் பிரச்சாரத்திற்கு சென்னையில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 மணிக்கே பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டார்.
இந்நிலையில், விஜய் நேற்று சென்னையில் திநகர், எழும்பூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்தது.

தியாகராய நகர் வேட்பாளர் ஆனந்த், ஆயிரம் விளக்கு வேட்பாளர் பிரபாகன் எழும்பூர் வேட்பாளர் ராஜ்மோகன் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 8 மணி வரை பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 6 மணி கடந்ததும் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு கிளம்பினார்.விஜய்யின் தொடர்ச்சியான இந்த நடவடிக்கை அவரை பார்க்க வருபவர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகக் கூறி, தவெக தலைவர் விஜய், தியாகராய நகர் வேட்பாளர் ஆனந்த், தென் சென்னை மாவட்ட செயலாளர் அன்பு அப்புனு உள்ளிட்டோர் மீது மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தியாகராய நகரில் பிரச்சாரம் நடந்த அனுமதி பெற்ற நிலையில் திடீரென ரோட் ஷோ நடத்தியதால் போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, பறக்கும் படை அதிகாரி சந்தோஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் விஜய் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share