Delimitation: தேர்தலை விட சுயமரியாதையே முக்கியம் – கொந்தளித்த மு.க.ஸ்டாலின்

Published On:

| By Pandeeswari Gurusamy

Stalin

தேர்தல் எல்லாம் அதற்குப்பிறகுதான் நமக்கு சுயமரியாதைதான் முக்கியம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்று தருமபுரியில் நடைபெற்ற சட்டமன்றத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். திமுக அரசின் சாதனைகளை எடுத்துரைத்தும் தேர்தல் வாக்குறுதிகளை விளக்கியும் பேசினார்.

ADVERTISEMENT

பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் பழனியப்பன், பாலக்கோடு தொகுதியில் டாக்டர் செந்தில்குமார் , அரூர் தொகுதியில் சண்முகம், தருமபுரி தொகுதியில் டாக்டர் வி. இளங்கோவன், பென்னாகரம் தொகுதியில் ஜி.கே.எம். தமிழ்க்குமரன் ஆகியோருக்கு பொதுமக்கள் வாக்களிக்கும் படி கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசிய முதல்வர், “கோடு போட்டால் ரோடு போடுவோம்” என்று சொல்வார்கள்… ஆனால், நம்முடைய திராவிட மாடலில், இந்தியாவுக்கே வழிகாட்டும் ரோட்டை நாம் போட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தப் பாதையில், முன்னோக்கிப் போகலாம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் அழைக்கிறோம். இது, பா.ஜ.க.வுக்குப் பிடிக்கவில்லை!

ADVERTISEMENT

ஏனென்றால், இந்தியா வளர்ந்துவிட்டால், ஆர்.எஸ்.எஸ். உருவாக்க நினைக்கும் 200 ஆண்டுகாலப் பிற்போக்குச் சமூகத்தை உருவாக்க முடியாது! அந்தச் சமுதாயம் வந்தால்தான், மக்களை மயக்கி, உழைப்பைச் சுரண்டி ஒரு சிலர் மட்டும் வளமாக வாழலாம்.

ஆனால், நம்முடைய திராவிட மாடலில் வளர்ச்சி என்பது, எல்லோருக்குமானது! யாரோ ஒரு சிலர் மட்டும் வளர்ந்தால், அது பிசினஸ்! எல்லோரும் வளர வேண்டும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று உழைப்பதுதான், திராவிட மாடலின் சக்சஸ்!” என்றார்.

ADVERTISEMENT

மேலும், பழனிசாமியிடம் சாதனைகள் என்று ஏதாவது இருக்கிறதா? ஏதாவது ஒன்று சொல்ல முடியுமா? சூடு சுரணை இல்லாமல், தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக் கொடுத்து, அடிமையாக இருப்பதுதான் தன்னுடைய வாழ்நாள் பெருமையாக அவர் நினைக்கிறார்.

இப்போது, இந்தச் சூழ்நிலையில் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும்… தொகுதி மறுசீரமைப்பு!

அதாவது, இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்த நாட்டில் பசியும் – வறுமையும் அதிகமாக இருக்கிறது. இதைச் சரி செய்ய வேண்டும் என்றால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சொன்னார்கள். அதில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து, நம்முடைய தமிழ்நாட்டிலும் – இன்னும் பல மாநிலங்களிலும் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகச் செயல்படுத்தினோம்.

இப்போது என்னவென்றால், உங்கள் மாநிலத்தின் மக்கள்தொகைக்கு ஏற்ற மாதிரி, தொகுதி மறுசீரமைப்புச் செய்யப் போகிறோம், உங்களுக்குக் கூடுதலாக எம்.பி. சீட் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்…

உண்மை என்னவென்றால், இதே காலகட்டத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தாமல் இருக்கும் சில மாநிலங்களுக்குத்தான், விகிதாச்சாரப்படி அதிக இடம் கிடைக்கப் போகிறது! இதனால், நாடாளுமன்றத்தில் நம்முடைய குரல் வலுவிழந்து போய்விடும்.

நம்முடைய எம்.பி.க்களுக்குப் பவர் இல்லை என்றால், டெல்லி அதிகார வர்க்கம் தமிழ்நாட்டைப் பற்றிச் சிந்திக்குமா? நமக்கு எந்தத் திட்டமாவது கிடைக்குமா? தென்னிந்தியாவிலிருந்து பிரதமர் உருவாக வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவே முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றப்படும் ஒரு கொடுமையை அனுமதிக்கலாமா?

இந்த ஆபத்துதான், தொகுதி மறுசீரமைப்பு! இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றுதான் நாளைக்குத் தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றப் போகிறோம். எல்லோரும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி, டெல்லியின் ஆணவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கத் தயாராகிவிட்டீர்களா? உங்கள் வீட்டு வாசலில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முழக்கமிடத் தயாரா? தமிழ்நாட்டில் நாம் இந்தப் போராட்டத்தை நாளை நடத்தும்போது டெல்லியில் நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராடிக் கொண்டிருப்பார்கள்!

தேர்தல் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அனைத்து எம்.பி.க்களும் தொகுதியில் ஆங்காங்கே இருந்தார்கள். அனைவரும் சென்றுவிட்டார்கள். மணி மட்டும்தான் இருக்கிறார். அவரும் நாளை காலை சென்றுவிடுவார். ஒருவர்கூட இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டேன். தேர்தல் எல்லாம் அதற்குப்பிறகுதான், இதுதான் நமக்கு முக்கியம். இதுதான் நமக்கு சுயமரியாதை.

நாளைக்கு நாம் குரல் எழுப்பத் தவறிவிட்டால், நம்முடைய குரலுக்கு எப்பொழுதுமே மதிப்பு இருக்காது! இந்தப் போராட்டத்தில் வெல்லும் வரை நம்முடைய உரிமைக்குரல் அடங்கக் கூடாது! டெல்லி அடங்கும்வரை நாம் அடிக்க வேண்டும்! நாம் அடிக்கும் அடியில் திமிரெடுத்த பா.ஜ.க. அடங்கியே ஆக வேண்டும்!

பழனிசாமி அவர்களே… இது தமிழ்நாட்டுக்கான போர்! இதிலாவது கொஞ்சம் சுயமரியாதையோடு நடந்து கொள்ளுங்கள்! அடிமையாகவும், துரோகியாகவும் இருப்பது பழனிசாமிக்கு மட்டும் பழக்கமில்லை; அவரோடு வருகிறவர்களின் இலட்சணத்தையும் பாருங்கள்… துரோகிகளின் மொத்தக் கூடாரமாக உருவாகியிருப்பது N.D.A.

ஒவ்வொருவரின் இலட்சணத்தையும் புட்டு புட்டு வைக்கட்டுமா?

ஒருவர் – ஒவ்வொரு முதுகாகக் குத்திவிட்டு, இப்போது தமிழ்நாட்டின் முதுகில் குத்த தன்னுடைய முதுகைப் பா.ஜ.க.வுக்கு வாடகைக்கு விட்டிருக்கும் பழனிசாமி.

இன்னொருவர், உங்களுக்கெல்லாம் அவரை நன்றாகத் தெரியும். சமூகநீதிப் போராளி என நான் பெரிதும் மதிக்கும் மருத்துவர் அய்யா ராமதாசை வேதனையில் தவிக்கவிட்டுவிட்டு, ஊழல் வழக்குக்குப் பயந்து, கூட்டணி அமைத்துவிட்டு, உலக மகா உத்தமர் போன்று உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறாரே… அவரைப் பற்றி ஒரு வார்த்தைகூட நான் பேச விரும்பவில்லை.. அவரைப் பற்றி பேசினால் என்னுடைய தகுதி குறைந்துவிடும். ஏனென்றால்… மருத்துவர் அய்யாவே இவரைப் பற்றி என்ன பேசுகிறார்? அ…சி…ங்…க…ம்… என்று சொல்லியிருக்கிறார்.

சமூகநீதிக்காக இந்த மண்ணில் நடந்த மிக முக்கியமான போராட்டம் 1987 போராட்டம்! அய்யா ராமதாசு அவர்கள் தலைமையில் நடந்த போராட்டம். அ.தி.மு.க. அரசின் துப்பாக்கி குண்டுகளுக்கு 21 தியாகிகள் பலியானார்கள். ஆனால், 1989-இல் நம்முடைய தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடனே, தலைவர் கலைஞர் முதலமைச்சராக ஆன உடனே, சேலத்துச் சிங்கம் வீரபாண்டியார் அவர்கள் மூலமாக, அய்யா ராமதாசு அவர்களைத் தன்னுடைய வீட்டுக்கே அழைத்து, விவாதித்து, ஆட்சிப் பொறுப்புக்கு வந்த 43-ஆவது நாளிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான, 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை உருவாக்கிக் கொடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்தார் நம்முடைய கலைஞர், நம்முடைய தலைவர்!

இன்றைக்குக் கல்வி, வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பிள்ளைகள் படித்து, வேலைக்குச் சென்று முன்னேற, கலைஞர் கொடுத்த இடஒதுக்கீடுதான் மிக முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. அந்தப் போராட்டத்தில் உயிரிழந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டியிருப்பது யார் தெரியுமா? இந்த ஸ்டாலின்தான்!

ஆனால், சமூகநீதிக்காகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது அ.தி.மு.க. எந்த அ.தி.மு.க.? இதே தருமபுரியில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா என்று மூன்று அப்பாவி மாணவிகளை உயிரோடு எரித்துக் கொன்றார்களே, அந்த அ.தி.மு.க. மூன்று மாணவிகளை எரித்த அ.தி.மு.க. குற்றவாளிகளை, விடுதலை செய்த பழனிசாமியின் கையை ஒருபக்கம் பிடித்துக் கொண்டு, மறுபக்கம் நாடு முழுவதும் இடஒதுக்கீட்டுக்கு எதிராகச் செயல்படும் பா.ஜ.க. கையையும் பிடித்துக் கொண்டு வருகிறார். அ.தி.மு.க. – பா.ஜ.க.-வுக்குக் கூஜா தூக்கி, சமூகநீதிக்கே துரோகம் செய்கிறவர்தான், அய்யா ராமதாசுக்கும் இன்றைக்கு துரோகம் செய்தவர். அதனால்தான் N.D.A. கூட்டணியைத் துரோகக் கூட்டணி என்று தருமபுரியும் சொல்கிறது; ஒட்டுமொத்த தமிழ்நாடும் சொல்கிறது!

ஆனால், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, கொள்கைக் கூட்டணி! சமூகநீதியைப் பாதுகாக்கும் கூட்டணி! மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் கூட்டணி! வஞ்சனைகளை வென்று ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் வளர்ச்சியைக் கொடுக்கும் கூட்டணி!

தமிழ்நாட்டைத் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க.வின் திட்டம் என்னவாக இருக்கிறது? தெற்கு மறுபடியும் தேய வேண்டும்! இதுதான் அவர்கள் பிளான்! தொகுதி மறுசீரமைப்பு நடத்தப் போகிறோம் என்று சொல்லி, ஒரு போரை தொடங்கி இருக்கிறார்கள்! இந்தப் போரில் நம்முடைய தமிழ்நாட்டின் குரலை நெரிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் கொட்டத்தை அடக்க வேண்டும்! ஒட்டுமொத்தத் தென்மாநிலங்களை இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய நினைக்கும் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாடு கொடுக்கப் போகும் பதிலடியை அவர்கள் வரலாற்றிலேயே மறக்கக் கூடாது!

சண்டை செய்ய நான் ரெடி? எனக்குப் பக்கபலமாக இருக்க நீங்கள் ரெடியா? தமிழ்நாடு தலைநிமிர்வது, குனிந்தே பழக்கப்பட்ட பழனிசாமிக்குப் பிடிக்கவில்லை! அதனால்தான், அட்டார்னி ஜெனரல் மாதிரி, லா பாயிண்ட் பேச வந்துவிட்டார்.

நான் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசுகிறேன் என்று நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுகிறார் பழனிசாமி. எந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்கள்…

பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்த தலைவர் கலைஞரின் மகனைப் பார்த்துப் பேசுகிறீர்களா! பெண்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று சுய உதவிக்குழுக்களை ஆரம்பித்த தலைவர் கலைஞரின் மகனைப் பார்த்துப் பேசுகிறீர்களா! மாதந்தோறும் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் இந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்களா! விடியல் பயணம் கொடுத்த இந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்களா! புதுமைப்பெண் திட்டத்தில் மாணவிகளைக் கல்லூரிகளுக்கு அனுப்பும் இந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்களா! பணிசெய்யும் பெண்களுக்காகத் தோழி விடுதிகள் உருவாக்கி அழகு பார்க்கும் இந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்களா! காலை உணவுத் திட்டம் கொடுத்து, பெண்களின் சுமையைக் குறைத்திருக்கும், இந்த ஸ்டாலினைப் பார்த்துப் பேசுகிறீர்களா!

பழனிசாமி அவர்களே… உங்கள் உள்நோக்கம் இந்த ஸ்டாலினை வசைபாடுவது கிடையாது; உங்கள் முதுகில் சவாரி செய்து கொண்டிருக்கும் ஓனர் பா.ஜ.க.வைக் காப்பாற்றுவது!

அதனால்தான் மும்மொழிக் கொள்கையை எதிர்க்கவில்லை! F.C.R.A.-வை எதிர்க்கவில்லை! பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை! இப்போது தமிழ்நாடே கொந்தளிக்கும்போது, தொகுதி மறுசீரமைப்பால் ஏற்பட்டிருக்கும் பேராபத்தையும் நீங்கள் எதிர்க்கவில்லை!

இப்படி எந்தப் பிரச்சினையிலும் தமிழ்நாட்டுக்காகக் குரல் கொடுக்காத நீங்கள், எதற்காகக் கட்சி நடத்துகிறீர்கள்? எதற்காகக் கூச்சமே இல்லாமல் மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறீர்கள்? பேசாமல் பா.ஜ.க. செய்வதற்கு முன்பு, நீங்களே கட்சியை கலைத்துவிட்டு நேரடியாகப் பா.ஜ.க.வில் ஐக்கியமாகிவிடுங்கள்! கூச்சப்படாதீர்கள்! பா.ஜ.க.வின் பீகார் மாடல் உங்களுக்கு யூஸ்ஃபுல்லாக இருக்கும்!” என காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share