மத்திய பாஜக அரசின் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் கிராமங்கள் தொடங்கி மாநகரங்கள் வரை வீடுகள், பொது இடங்களில் நாளை ஏப்ரல் 16-ந் தேதி கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை: “Delimitation என்ற பெயரில், தனது லிமிட்டைத் தாண்டி, பா.ஜ.க. அரசு, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை வஞ்சிக்கிறது! நாளை நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வரப் போகும் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பைக் காட்டும் வகையில், தமிழ்நாட்டில் அனைவரும் நம்முடைய வீட்டில் கருப்புக் கொடியை ஏற்றுவோம். கருப்புச் சட்டத்தை எதிர்த்து நம் எதிர்ப்பின் அடையாளமாக, கருப்புக் கொடியை ஏற்றுவோம். இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சதிகார பா.ஜ.க. அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றுவோம்.” என முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கிணங்க;
அனைத்து கழக மாவட்டங்களிலும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்டம், கிளை என பட்டித்தொட்டி கிராமம் முதல் மாநகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் நாளை (16.4.2026) இந்தியாவை இருண்ட காலத்துக்கு அழைத்துக் கொண்டு போகும், எதேச்சதிகார பா.ஜ.க. அரசுக்கு எதிராக கருப்புக் கொடி ஏற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
வெல்வோம் ஒன்றாக!. இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.
