சென்னையில் தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜயின் ரோடு ஷோ பாதியில் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், விஜயைப் பார்க்க வந்த ஒரு பெண்ணின் ஆறு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளதால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (பிப்ரவரி 15) சென்னை தி.நகர், எழும்பூர், திருவல்லிக்கேணி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார். உரிய அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.
முதலில் தி.நகரில் தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து வாக்கு சேகரித்த விஜய், சாலையின் இருபுறமும் நின்ற மக்களை நோக்கி கையசைத்தபடி வந்தார். இளைஞர்கள் தடுப்புகளைத் தாண்டி வர முயன்றதால் காவல்துறையினர் கடும் சிரமத்திற்கு மத்தியில் பாதுகாப்பை உறுதி செய்தனர்.
இன்று தி.நகரில் விஜய் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த இடத்திற்கு விஜயின் வாகனம் சில வினாடிகள் மட்டும் நின்றுவிட்டு அங்கிருந்து கிளம்பியது. பின்னர் ஆயிரம் விளக்கு பகுதியிலும் விஜய் பிரச்சாரம் நடத்தினார். வேப்பேரி தொகுதியில் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.
தி நகர் மற்றும் ஆயிரம் விளக்கு பகுதிகளில் ரோடு ஷோவை முடித்துக்கொண்டு விஜய் கிளம்பினார். வேப்பேரி பகுதியில் திரண்டிருந்த மக்களை கிளம்பிச் செல்லும்படி அக்கட்சி நிர்வாகிகள் அறிவித்தனர்.
செயின் பறிப்பு
இந்நிலையில், சென்னை தி.நகர் பகுதியில் விஜயின் ரோடு ஷோ நடைபெற்றபோது, அங்கு விஜயைப் பார்க்க வந்த ஒரு பெண்ணின் ஆறு சவரன் நகை பறிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று கோவையில் இருந்து விஜய் திருப்பூர் சென்றபோது, விஜயைப் பார்க்க வந்த ஒரு பெண்ணின் 5 சவரன் செயின் பறிக்கப்பட்டிருந்தது. இன்று சென்னையிலும் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
