Delimitation : பாரபட்சமான நடவடிக்கை .. மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் சிக்கல் – விஜய் குற்றச்சாட்டு

By Pandeeswari Gurusamy

|

Published on 15 Apr 2026, 12:05 PM

Vijay

தொகுதி மறுசீரமைப்பு, ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை என நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து விஜய் இன்று (ஏப்ரல் 15) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒன்றிய அரசு, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள 543-இலிருந்து 850 ஆக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ‘அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026’ மூலம், மக்களவையின் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை முன்மொழிந்துள்ளது. இந்த மசோதா, நாளை தொடங்க உள்ள நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது.

ADVERTISEMENT

மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட இருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் வரவேற்கிறது. மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவைத் தவிர்த்து, ‘அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேறினால், தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும், வட மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கும் இடையே உள்ள விகிதாசார வேறுபாடு, வெகுவாக அதிகரிக்கும்.

அப்படி நிகழ்ந்தால், மொழி, கலாசாரம் மற்றும் மாநில உரிமைகள் சார்ந்த சட்டங்கள் இயற்றுதல் மற்றும் ஒன்றிய அரசின் கொள்கைகள் வகுத்தல் உள்ளிட்டவற்றில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து, வட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். இதனால் தென் மாநில மக்களின் கோரிக்கைகள், குறிப்பாக ஒன்றிய அரசின் அறிவிப்புகளை முழுமையாகக் கடைப்பிடித்த தமிழ்நாட்டு மக்களின் குரல், நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும். இது ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.

ADVERTISEMENT

ஒன்றிய அரசின் அறிவிப்பை, ஆண்டாண்டுக் காலமாகக் கடைப்பிடித்த ஒரு மாநிலத்திற்கு “தண்டனை”யையும், அதைப் பின்பற்றாத மாநிலங்களுக்கு “வெகுமதி”யும் தருவது போல் இந்த மசோதா நிறைவேற்றம் அமைகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நிதிப் பகிர்விலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை – விகிதாசாரம் மாறுவது, மாநிலத்திற்கான நிதி ஒதுக்கீட்டிலும் எதிரொலிக்கும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நிதிப்பகிர்வில் இழப்பைச் சந்தித்து வருவதாக மாநில அரசு, ஒன்றிய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது.

பட்ஜெட் தாக்கலின் போதும் தமிழ்நாட்டிற்குப் போதுமான நிதியையும் திட்டங்களையும் ஒன்றிய அரசு தருவதில்லை. அப்படி இருக்கையில், தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகு, மக்கள் தொகை அடிப்படையிலான திட்டங்களுக்கான நிதி மேலும் குறையவே வாய்ப்புள்ளது. இப்படிப் பல்வேறு வகைகளில் தென் மாநிலங்களுக்கு, குறிப்பாகத் தமிழ்நாட்டிற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய அரசியலமைப்பு (131ஆவது திருத்தம்) மசோதா, 2026 நிறைவேற்றும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், தற்போது உள்ள பழைய நடைமுறையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel