அண்ணாமலை ராஜினாமா ஏற்பு- பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

Published On:

| By Mathi

Annamalai

பாஜகவில் (BJP) இருந்து அக்கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை (Annamalai) ராஜினாமா செய்ததை கட்சித் தலைவர் நிதின் நபின் ஏற்றுக் கொண்டதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசிய தலைவர் நிதின் நபினைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதில், தமிழக பாஜகவின் தற்போதைய நிலை மற்றும் தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களையும் அண்ணாமலை சந்தித்துப் பேசினார். அண்ணாமலையைத் தக்கவைத்துக் கொள்ள கட்சியின் தேசியத் தலைமை சில முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் தற்போது அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அண்ணாமலை ஐபிஎஸ் முதல் பாஜக தலைவர் வரை..

கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திற்கு அருகில் உள்ள விளாம்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் அண்ணாமலை. கோவை பி.எஸ்.ஜி (PSG) தொழில்நுட்பக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்தார். அதன்பின், லக்னோ ஐஐஎம் (IIM Lucknow) கல்வி நிறுவனத்தில் எம்பிஏ (MBA) மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

ADVERTISEMENT

2011-ஆம் ஆண்டு யுபிஎஸ்சி (UPSC) தேர்வில் தேர்ச்சி பெற்று, கர்நாடக கேடர் ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். கர்நாடகாவின் உடுப்பி, சிக்மகளூர் மற்றும் பெங்களூரு (தெற்கு) ஆகிய பகுதிகளில் காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றினார்.

2019-ல் தமது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. கடந்த 2021-ல் தமிழ்நாடு பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2021 சட்டசபை தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியிலும் 2024 மக்களவை தேர்தலில் கோவை தொகுதியிலும் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் அண்ணாமலை.

ADVERTISEMENT

2025-ம் ஆண்டு பாஜக- அதிமுக கூட்டணி உருவான நிலையில் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில் நயினார் நாகேந்திரன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

2026 சட்டசபை தேர்தலிலும் பாஜகவுக்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். ஆனாலும் உட்கட்சி விவகாரங்களில் கடும் அதிருப்தியில் இருந்த அண்ணாமலை பாஜகவை விட்டு வெளியேறி உள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share