தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கு வரும் ஜூலை 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியை கவிழ்ப்பதற்கு அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ35 கோடி பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மற்றும் அவருக்கு பின்னணியாக செயல்பட்ட திருச்சியை சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக்குமார் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினரிடம் பேரம் பேசியதாக கைது செய்யப்பட்ட மூன்று பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து மூவரையும் 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
