வங்கியில் முக்கியமான வேலை ஏதாவது இருக்கிறதா? ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாளை வங்கி விடுமுறை என்று நினைத்துவிட வேண்டாம். மூன்று நாள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்க உள்ள நிலையில், நாளை செப்டம்பர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் பொதுத்துறை வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான United Forum of Bank Unions (UFBU), செப்டம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதற்கு முன்னதாக செப்டம்பர் 26 சனிக்கிழமை மற்றும் செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை வார இறுதி விடுமுறை நாட்களாக அமைந்தன.
இதனால் வேலைநிறுத்தமும் சேர்ந்து வங்கி சேவைகள் தொடர்ந்து 5 நாட்கள் பாதிக்கப்படும் சூழல் உருவானது.
இதையடுத்து வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவைகள் நீண்ட நாட்களுக்கு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை எந்த வங்கிகள் இயங்கும்?
மத்திய நிதியமைச்சகத்தின் அறிவிப்பின்படி, அனைத்து பொதுத்துறை வங்கிகள் (Public Sector Banks) மற்றும் பிராந்திய கிராமப்புற வங்கிகள் (Regional Rural Banks) நாளை ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் செயல்படும். இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியும் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.
என்னென்ன சேவைகள் கிடைக்கும்?
ஞாயிற்றுக்கிழமை என்றாலும் வங்கிகள் பெயரளவில் மட்டும் திறந்திருக்காது. மத்திய அரசின் அறிவிப்பின்படி, வங்கிக் கிளைகள், வங்கி அலுவலகங்கள், ATM-களுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கிளைகள் மற்றும் Currency Chests ஆகியவை முழுமையாகச் செயல்படும்.
அதாவது, பொதுத்துறை வங்கிகளின் கிளைகளில் வழக்கமான வங்கி சேவைகள் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், தனியார் வங்கியான HDFC Bank-ம் நாளை செப்டம்பர் 27 ஞாயிற்றுக்கிழமை செயல்படும் என்று தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. எனவே, தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கிளை ஞாயிற்றுக்கிழமை செயல்படுகிறதா என்பதை அந்தந்த வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உறுதி செய்துகொள்வது நல்லது.
எனவே, வங்கிக் கிளைக்கு நேரில் சென்று முடிக்க வேண்டிய முக்கியமான வேலைகள் இருந்தால், நாளை ஞாயிற்றுக்கிழமையே அவற்றை முடித்துக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
