நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு ‘சுப்ரீம் பவர்’: கிளைகள் தொடங்க இனி அனுமதி தேவையில்லை… யுஜிசி-யின் அதிரடி மாற்றம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Autonomous powers for deemed universities

புதுடெல்லி/சென்னை:

“கல்லூரிகள் நடத்துவது கல்விச் சேவையா அல்லது வியாபாரமா?” என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, இந்தியாவின் உயர்கல்வித் துறையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது பல்கலைக்கழக மானியக் குழு (UGC). சிறப்பான தரத்துடன் செயல்படும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் (Deemed-to-be Universities), இனி நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்களது புதிய கிளைகளைத் (Off-Campus Centres) தொடங்கிக்கொள்ளலாம் என்றும், அதற்கு யுஜிசி-யின் முன் அனுமதி தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நீண்ட காலமாக ‘சிவப்பு நாடா’ முறையில் சிக்கித் தவித்த பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கு, இந்த அறிவிப்பு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

புதிய விதிமுறை என்ன சொல்கிறது?

ADVERTISEMENT

இதுவரை ஒரு நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தனது பிரதான வளாகத்தைத் தாண்டி வேறு இடத்தில் கிளை தொடங்க வேண்டும் என்றால், அதற்கு யுஜிசி-யிடம் விண்ணப்பித்து, ஆய்வுக் குழுவின் வருகைக்காகக் காத்துக் கிடந்து, அனுமதி வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். ஆனால், புதிய விதிமுறைகளின்படி, அந்த நடைமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் இதுகுறித்துத் தெரிவிக்கையில், “தேசிய கல்விக் கொள்கையின்படி, உயர்கல்வியை எளிமைப்படுத்தவும், தரமான கல்வி நிறுவனங்களை ஊக்குவிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.

ADVERTISEMENT

யாருக்கெல்லாம் இந்தச் சலுகை?

“அப்படியானால் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் கல்லூரி ஆரம்பிக்கலாமா?” என்றால், அதுதான் இல்லை. இதில் யுஜிசி ஒரு ‘செக்’ வைத்துள்ளது.

பிரிவு-1 (Category-I): தேசிய தர மதிப்பீட்டுக் கவுன்சிலின் (NAAC) உயர்ந்த கிரேடு பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது தேசிய தரவரிசைப் பட்டியலில் (NIRF) முதல் 100 இடங்களுக்குள் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்.

தகுதி: இந்தப் பல்கலைக்கழகங்கள் தாங்கள் விரும்பும் இடத்தில் புதிய கிளைகளைத் தொடங்கிக்கொள்ளலாம். ஆனால், அது குறித்துத் தொடங்குவதற்கு முன்பாக மத்திய அரசுக்கும், யுஜிசி-க்கும் தகவல் தெரிவித்தால் மட்டும் போதும். முன் அனுமதி (Prior Approval) தேவையில்லை.

என்ன லாபம்?

இதன் மூலம், தரமான கல்வி நிறுவனங்கள் கிராமப்புறங்கள் அல்லது கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் தங்கள் கிளைகளை விரிவுபடுத்த முடியும். மாணவர்கள் சொந்த ஊரிலேயே சிறந்த பல்கலைக்கழகங்களின் கல்வியைப் பெறும் வாய்ப்பு உருவாகும்.

கல்வியாளர்கள் அச்சம்:

அதே சமயம், “இந்தத் தளர்வு கல்வி வியாபாரத்திற்கு வழிவகுத்துவிடுமோ?” என்ற அச்சமும் கல்வியாளர்கள் மத்தியில் உள்ளது. “கண்காணிப்பு குறைந்தால், கல்விக் கட்டணம் தாறுமாறாக உயர வாய்ப்புள்ளது. எனவே, தன்னாட்சி அதிகாரம் கொடுத்தாலும், கட்டண நிர்ணயத்தில் அரசுக்குக் கட்டுப்பாடு இருக்க வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். எது எப்படியோ, உயர்கல்வித்துறையில் இந்த மாற்றம் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. இந்தத் தளர்வு யுஜிசி அங்கீகாரம் பெற்ற ‘Deemed’ பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற தனியார் கல்லூரிகளுக்குப் பொருந்தாது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share