பெரம்பலூர் அருகே ரவுடியை கொல்ல முயன்றவர்களை தனிப்படை அமைத்து தேடி வருவதாக திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடியான வெள்ளை காளியை திண்டுக்கல்லில் இருந்து சென்னையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் இன்று (ஜனவரி 24) அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே சாப்பிடுவதற்காக போலீசார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். அப்போது இரண்டு கார்களில் வந்த கும்பல் ரவுடி வெள்ளை காளியை கொலை செய்யும் நோக்கில் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது.
அப்போது பாதுகாப்பில் இருந்த போலீசார் வெள்ளை காளியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனினும் அந்த கும்பல் அரிவாளுடன் வந்து வெட்ட முயன்றிருக்கிறது. இதில் விக்னேஷ்குமார், மாரிமுத்து பாண்டி ஆகிய 2 காவலர்கள் காயமடைந்தனர். அப்போது இந்த எஸ்கார்டுக்கு தலைமை தாங்கி வந்த எஸ்.ஐ துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயற்சித்தும் அந்த கும்பல் அதிவேகமாக தப்பியோடியுள்ளது.
சுங்கச்சாவடியில் அந்த கும்பலின் இரண்டு கார்களும் நிக்காமல், பாஸ்டேக் சோதனைக்காக தடுக்கப்படும் தடுப்பை இடித்து தள்ளிவிட்டு அதிவேகமாக சென்றுள்ளது. சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவியில் பதிவான இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு குற்றவாளியை அழைத்து சென்று கொண்டிருந்தார்கள். ஆயுதம் தாங்கிய போலீசாரும் பாதுகாப்புக்கு சென்றனர்.
இடையில் சாப்பிடுவதற்காக வண்டியை நிறுத்திருக்கின்றனர். அப்போது இரண்டு வண்டிகளில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் வெள்ளை காளியை கொலை செய்ய முயற்சித்த போது, எஸ்கார்டு போலீசார் குற்றவாளிக்கு எதுவும் ஆகாத விதமாக தடுத்தனர்.
அப்போது எஸ்.ஐ துப்பாக்கியால் சுடும்போது, அந்த நபர்கள் எஸ்கேப் ஆகிவிட்டனர். குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
அந்த நபர்கள் போலீஸ் வாகனத்தின் பின்னாலேயே பின் தொடர்ந்து வந்தது போல தெரியவில்லை. தூரமாக பின் தொடர்ந்து வந்தது போலத்தான் தெரிகிறது. விசாரணை நடத்தி வருகிறோம்” என்று பதிலளித்தார்.
இந்தசூழலில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே எழுத்தூர் பகுதியில் கார்களை நிறுத்திவிட்டு அந்த கும்பல் மாற்று வாகனத்தில் தப்பியுள்ளது. தற்போது எழுத்தூர் அருகே நின்று கொண்டிருந்த கார்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.










