ஓய்வுக்காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் மாதாமாதம் ஒரு தொகை கையில் வர வேண்டும் என்பது எல்லோருடைய ஆசை.
தனியார் நிறுவன ஊழியர்கள், சுயதொழில் செய்பவர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் பெரிய கேள்விக்குறிதான். அவர்களுக்காக மத்திய அரசு நடத்தும் அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தில் 18 வயதிலேயே சேர்ந்து மாதம் ரூ.210 கட்டினால், 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
அடல் பென்ஷன் திட்டம் என்றால் என்ன?
2015-ல் தொடங்கிய இந்தத் திட்டம், ஓய்வுக்காலத்தில் நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கு உதவும் நோக்கத்தோடு உருவானது. இதில் சேர்பவர்கள் தங்கள் வயது, விருப்பத்துக்கு ஏற்ப மாதம் ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000, ரூ.4,000 அல்லது ரூ.5,000 என்ற ஐந்து ஓய்வூதியத் தொகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். 60 வயது ஆனதும் தேர்ந்தெடுத்த தொகை வாழ்நாள் முழுக்க மாதாமாதம் வரும். சந்தை முதலீட்டு வருமானம் குறைந்தாலும், குறைந்தபட்ச ஓய்வூதியத்துக்கு மத்திய அரசு உறுதி தருகிறது.
வயது கூடினால் தவணையும் கூடும்
18 வயதில் சேர்ந்து ரூ.5,000 ஓய்வூதியத்தைத் தேர்ந்தெடுப்பவர் மாதம் ரூ.210 கட்ட வேண்டும். ஆனால் சேரும் வயது கூடக்கூடக் கட்ட வேண்டிய தொகையும் கூடும்:
| சேரும் வயது | மாதத் தவணை (ரூ.5,000 ஓய்வூதியத்துக்கு) |
| 18 வயது | ரூ.210 |
| 25 வயது | ரூ.376 |
| 30 வயது | ரூ.577 |
| 35 வயது | ரூ.902 |
| 40 வயது | ரூ.1,454 |
இவை மாதம் ரூ.5,000 ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான தொகைகள். அதனால் இளம் வயதிலேயே சேர்ந்தால் குறைந்த தவணையில் ஓய்வூதியம் பெறலாம்.
யாரெல்லாம் சேரலாம்?
- 18 முதல் 40 வயதுக்குள் இருக்கும் இந்தியக் குடிமக்கள்.
- வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலகச் சேமிப்புக் கணக்கு கட்டாயம்.
- 2022 அக்டோபர் 1 முதல், வருமான வரி செலுத்துபவராக இருப்பவர் அல்லது ஏற்கெனவே வருமான வரி செலுத்தியவர் புதிதாக APY கணக்கைத் தொடங்க முடியாது.
எப்படி விண்ணப்பிப்பது?
உங்கள் சேமிப்புக் கணக்கு இருக்கும் வங்கி அல்லது தபால் நிலையத்துக்குப் போய் அடல் பென்ஷன் யோஜனா விண்ணப்பத்தை நிரப்பலாம். மாதத்துக்கு ஒருமுறை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்துக்கு ஒருமுறை பணம் தானாகவே பிடித்தம் ஆகும் வசதியும் உண்டு. சந்தையில் முதலீடு செய்ய விரும்பாதவர்களுக்கு இது நிலையான ஓய்வூதியத் தேர்வாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் வாழ்க்கைச் செலவுகள் ஏறும் என்பதால், மாதம் ரூ.5,000 மட்டும் போதாமல் போகலாம். அதனால் இதோடு கூடுதல் ஓய்வுக்காலச் சேமிப்பையும் திட்டமிடுவது நல்லது.









