ADVERTISEMENT

ஒட்டுமொத்த இந்தியாவிற்காக போராடுகிறார் ஸ்டாலின் – சென்னை பிரச்சாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உடன் இணைந்து ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “வணக்கம் சென்னை! உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்காகப் போராடிக்கொண்டிருக்கிறார். இன்று நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் உள்ளது. அதை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். உங்கள் ஆதரவு ஸ்டாலின் அவர்களுக்கும், இந்த கூட்டணிக்கும் தேவை.

மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய தரம் இல்லை. அதனால்தான் ஸ்டாலினுக்காக பிரச்சாரம் செய்ய நான் இங்கு வந்துள்ளேன்.

ADVERTISEMENT

நீங்கள் என்.டி.ஏ-வை (NDA) பார்த்தால், அது ‘புது டெல்லி கூட்டணி’ (New Delhi Alliance) போன்றது. என்.டி.ஏ என்பது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க கூட்டணி அல்ல; அது வெறும் பா.ஜ.க மட்டுமே. பா.ஜ.க அ.தி.மு.க-வை ஆக்கிரமித்துவிட்டது. அ.தி.மு.க இப்போது பா.ஜ.க-வின் பிடியில் முழுமையாக சிக்கியுள்ளது.

பீகாரில் என்ன நடந்தது என்று பாருங்கள். நேற்றைய வரை முதலமைச்சராக இருந்த நிதிஷ் குமார், இன்று வெறும் மாநிலங்களவை உறுப்பினராக மாற்றப்பட்டுள்ளார். ஏன்? இதேதான் அ.தி.மு.க-விற்கும் நடக்கும். அ.தி.மு.க மூன்று பிரிவுகளாக உடைக்கப்பட்டு, பா.ஜ.க அதை முழுமையாகக் கைப்பற்றிவிடும்.

ADVERTISEMENT

பா.ஜ.க தமிழ்நாட்டைக் கைப்பற்ற விரும்புகிறது. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க-வை வெறுக்கிறார்கள். நீங்கள் பா.ஜ.க-வை வெறுக்கிறீர்களா இல்லையா? என கேள்வி எழுப்பினார். (ஆம் என்று கூட்டத்தினர் கோஷம் எழுப்பினர்)

தமிழ்நாட்டு மக்கள் பா.ஜ.க-வை விரும்பவில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க-வை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்ததன் மூலம் தமிழ்நாட்டிற்குப் பெரிய துரோகத்தைச் செய்துவிட்டது. எனவே, அவர்களுக்கு வாக்களிக்கும் முன் எச்சரிக்கையாக இருங்கள்.

மற்றொரு விஷயம், ஒரு வருடத்திற்கு முன்பு டெல்லியில் மக்கள் ஒரு தவறு செய்தார்கள்; அவர்கள் பா.ஜ.க-விற்கு வாக்களித்தனர். இப்போது டெல்லியில் நாங்கள் செய்த நல்ல திட்டங்கள் அனைத்தையும் பா.ஜ.க நிறுத்திவிட்டது. நாங்கள் டெல்லியில் தொடங்கிய பள்ளிகள், கிளினிக்குகள், இலவச மருந்துகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சைகள் என அனைத்தையும் அவர்கள் நிறுத்திவிட்டார்கள். டெல்லியில் நாங்கள் மின்சாரத்தை இலவசமாக்கினோம்; இப்போது மக்கள் ஆயிரக்கணக்கான ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தி வருகிறார்கள். நாங்கள் தண்ணீரை இலவசமாக வழங்கினோம்.

எனவே பா.ஜ.க, அ.தி.மு.க அல்லது என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களித்தால், இங்குள்ள நல்ல திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என்பதை எச்சரிக்கையுடன் நினைவில் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் நடந்து வரும் நல்ல பணிகள் தொடர வேண்டும் என்றால், நீங்கள் ஸ்டாலினுக்கும், தி.மு.க கூட்டணிக்கும். வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவர் தமிழ்நாட்டில் பல வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளார், அந்த வளர்ச்சி தொடர வேண்டும்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share