டபுள் என்ஜின் அரசுகள் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி தானாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி இல்லை என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று (பிப்ரவரி 20) கோவை தொழில் முனைவோர் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு, மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் பெம்மாசணி சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள்
கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் எஸ்.பி. வேலுமணி , சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே ஆர் ஜெயராமன், கோவை தெற்கு வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், சூலூர் தொகுதி வேட்பாளர் கந்தசாமி, கவுண்டம்பாளையம் தொகுதி பி.ஆர்.ஜி அருண்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கலந்துரையாடல் நிகழ்விற்கு பின்னர் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் நிலையான ஆட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்தார். “டபுள் என்ஜின்” அரசுகள் உள்ள மாநிலங்களில் வளர்ச்சி தானாக நடைபெறுகிறது. இதற்கு மாறாக தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி எதுவும் இல்லை.
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக திமுக மற்றும் காங்கிரஸ் தரப்பு எடுத்துள்ள நிலைப்பாடு பெண்களுக்கு எதிரான துரோகம். அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீதம் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என மத்திய அரசு தெளிவாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே எனவும் தெரிவித்தார்.
இது என்டிஏ கூட்டணியின் தோல்வி அல்ல , நாட்டின் பெண்களின் தோல்வி. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ள நிலையில், அவர்களின் எதிர்பார்ப்பை திமுக மற்றும் காங்கிரஸ் புறக்கணித்துள்ளன என குற்றம் சாட்டினார்.
பொருளாதார வளர்ச்சி குறித்து பேசிய அவர், முதலில் வளர்ச்சி வேண்டும், வளர்ச்சியால் செல்வம் உருவாகும், அதிலிருந்து வருவாய் கிடைக்கும், பின்னரே நலத்திட்டங்கள் நிலையானதாக இருக்கும்.வளர்ச்சி இல்லாமல் நலத்திட்டங்கள் மட்டும் நீடிக்க முடியாது” என தெரிவித்தார்.
அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு மிக முக்கியம். தொழில்நுட்பத்தின் உதவியுடன் அனைத்து மாநில அரசுகளும் செயல்பட வேண்டும் என்றார்.
