அன்புமணி நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணிக்கும், நிறுவனர் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் இருவரும் தனிதனியாக வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி 18 தொகுதிகளுக்கு வேட்பாளரை நிறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஏப்ரல் 20) வெளியிட்ட வீடியோவில்,
“இந்தத் தேர்தல் களத்திலே ஒரு துரோகக் கூட்டமும், ஒரு துரோகியும் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள். அந்தத் துரோகி யார் என்று சொன்னால், என் வயிற்றில் பிறந்த அன்புமணி.
அன்புமணி எனக்கும் என்னுடைய கட்சிக்கும் செய்த துரோகங்களை வரிசைப்படுத்தினால் மணிக்கணக்கிலே சொல்ல முடியும். பார்வையாளர்களான நீங்கள் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது ஆச்சரியப்படுவீர்கள், இப்படி ஒரு மகனா?.
நான் மக்களுக்குச் சொல்வேன், இந்தத் துரோகக் கூட்டத்திற்கு நீங்கள் வாக்களிக்காதீர்கள். ஏனென்றால் இவர்களுடைய நோக்கமே மக்களுக்குச் சேவை செய்வது அல்ல. அதிகாரம் கையிலே வரும்போது பணம் பண்ணுவதுதான் இவர்களுடைய வேலை. அதனாலே அந்தத் துரோகக் கூட்டத்திற்கு வாக்களிக்காதீர்கள்.
அந்த 18 தொகுதியிலே நிற்கிற வேட்பாளர்கள் எல்லாம் நான் வளர்த்த பிள்ளைகள் தான், என்னிடம் பாடம் கற்றவர்கள் தான், என்னிடம் பயின்றவர்கள் தான். ஆனால் இன்று பணத்திற்காக அணிமாறி அங்கே அன்புமணியிடம் போய் நிற்கிறார்கள். அவர்களுடைய நோக்கமெல்லாம் அவர்கள் சொல்வதெல்லாம் அதிகாரம், அதிகாரம் இருந்தால் தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியும். ஆனால் உண்மையிலேயே அதிகாரம் இருந்தால் தான் மக்களுக்குச் சேவை செய்ய முடியும் என்பது உண்மைதான். ஆனால் இவர்களுடைய நோக்கம் அதிகாரத்தைப் பெற்று மக்களுக்குச் சேவை செய்வது அல்ல, பணம் பண்ணுவது. பணம் பண்ணுகிற வேலையைத்தான் அவர்கள் கற்றிருக்கிறார்கள்.
இதிலிருந்து உங்களுக்குத் தெரிவது, மக்களுக்குத் தெரிவது இவர்களுடைய நோக்கம் மக்களுக்குச் சேவை செய்வது அல்ல. அதனால்தான் இவர் வீட்டிலேயே படுத்துக்கொண்டு தன்னுடைய மனைவியைத் தேர்தலிலே, அது நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் தன் மனைவியை நிற்க வைக்கிறார். இவர் நேரடியாகக் களம் காண வேண்டியதுதானே? நாடாளுமன்றத்திற்கு இவர் சில நாட்கள் தான் சென்றார். ரொம்பக் குறைவு, இந்தியாவிலேயே ரொம்பக் குறைவாக இரு அவைகளுக்கும் சென்றது இவர்தான்.
இந்த மாதிரியான பயிற்சியை நான் கொடுக்கவில்லை. நான் கொடுத்த பயிற்சி மக்களுக்கான பிரச்சனைகள் ஏராளமாக இருக்கின்றன, அந்தப் பிரச்சனைகளை நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ பேச வேண்டும், வெளிக்கொண்டு வரவேண்டும் என்பதுதான். நேர்மாறாக டெல்லிக்குப் போனால்தானே பேசுவதற்கு, போகாமல் இங்கே இருந்துக்கொண்டு இந்த ஆள் பிடிக்கும் வேலை செய்கிறார். எனக்கே உளவு பார்த்த பிள்ளை என்று சொல்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது. அப்பனைப் போய் என்ன உளவு பார்ப்பது?.
அப்பனுக்கு ஒரு நோய் வந்தால், பிறந்த நாள், திருமண நாள் இது போன்ற நாட்கள் வரும்போது வாழ்த்துச் சொல்வது பிள்ளைகளுக்கு அழகு. நான் பெற்ற பிள்ளை என்னுடைய பிறந்தநாள், திருமண நாள் முக்கியமான நாட்களிலே பொங்கல் மற்றும் இதர நாட்களிலே முகத்தைக் காட்டுவதில்லை. அதேபோல் இப்பொழுது சமீபத்திலே சேலத்திலே பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு தலைசுற்றல் வந்தது. ஆம்புலன்ஸில் என்னைச் சென்னை அப்போலோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். நிறையப் பேர் கண்கலங்கினார்கள், நிறையப் பேர் அழுதார்கள், நிறையப் பேர் வந்து பார்த்தார்கள். ஆனால் இவர் தொலைபேசியிலும் பேசவில்லை, வந்தும் பார்க்கவில்லை.
இதிலிருந்து நீங்கள் தெரிந்து கொள்வது, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த எனக்கு, என்னை ஒரு ஒரு சொல் ‘கேளீர்’ என்று சொல்கிற மாதிரி ஒரு வார்த்தை ‘எப்படிப்பா இருக்க?’ என்று கேட்கவில்லை. இப்படிப் பல தருணங்கள் இவருடைய குணாதிசயங்கள் ஏராளம். அது முழுவதும் சொன்னால் இதைக் கேட்பவர்கள் அல்லது பார்ப்பவர்கள் ‘உங்க வளர்ப்பு சரியில்லை’ என்று சொல்லுவீர்கள். உண்மைதான், ஆனால் உண்மையும் அல்ல, நான் சரியாகத்தான் வளர்த்தேன், இடையிலே தான் இந்தத் தடுமாற்றம்.
அதனாலே இந்த நேரத்திலே நான் வாக்காளப் பெருமக்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புவது, அந்தத் துரோகக் கும்பல் போட்டியிடுகின்ற 18 தொகுதிகளிலே இவருக்கு, இந்தக் கும்பலுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நான் அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பாக இந்த 18 தொகுதிக்கு அன்புமணி போட்டியிடுகிற அந்தத் தொகுதிகளிலே வாக்களிக்காதீர்கள் என்று சொல்வது கேட்பவர்களுக்கு அல்லது உங்களுக்குக் கசப்பாக இல்லையா?. இந்தக் கும்பல் நான் ஏன் இதைச் சொல்கிறேன் என்று சொன்னால், வாக்களிக்கக் கூடாது என்று சொல்கிறேன் என்று சொன்னால், அதிலும் குறிப்பாக அந்த 18 தொகுதிகளிலே இந்தக் கும்பல் போட்டியிடுகிற தொகுதிகளிலே வாக்களிக்கக் கூடாது என்று சொல்கிறேன் என்று சொன்னால், இவர்கள் சட்டமன்றத்திற்குச் சென்று அங்கே எதையும் இவர்கள் செய்யப்போவதில்லை.
பணம் பண்ணுகிற வித்தையை எங்கே கற்றுக் கொடுக்கிறார்கள், எங்கே சொல்லுகிறார்கள், எங்கே பாடம் சொல்லுகிறார்கள், அந்த வேலையைத்தான் அவர்கள் செய்வார்கள். மக்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். ஏனென்றால் அவருடைய அந்தத் துரோகக் கும்பலுடைய தலைவர் அந்த வித்தையை இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். வாக்காளப் பெருமக்களே, நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள், உங்களுக்குச் சேவை செய்கின்றவர்களைத் தேர்ந்தெடுங்கள் என்று உங்களை அன்போடு விரும்பி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
