திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யால் வெற்றி பெற முடியாது; டெல்டா மாவட்டங்களில் களம் திமுகவுக்கே சாதகமாக உள்ளது என திமுகவின் டெல்டா மாவட்டங்களுக்கான பொறுப்பாளர் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி:
கேள்வி: நீங்கள் டெல்டா மண்டலப் பொறுப்பாளராக இருக்கிறீர்கள். அங்கு கள நிலவரம் எப்படி இருக்கிறது?
கே.என். நேரு: டெல்டா மண்டலம் மிகவும் நன்றாக இருக்கிறது. திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மேற்கு, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை என டெல்டாவின் பெரும்பாலான இடங்களில் நிலைமை சாதகமாக உள்ளது. சில இடங்களில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி வேலை செய்யச் சொல்லி இருக்கிறோம். எனவே அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவோம்.
கேள்வி: விவசாயிகள் மத்தியில் உங்கள் கட்சியின் மீதான ஆதரவு எப்படி உள்ளது? இடையில் நெல் கொள்முதல் விவகாரத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டதே?
கே.என். நேரு: எடப்பாடி பழனிசாமி, விவசாயிகளை செட் பண்ணி, ஆட்களைத் திரட்டிப் பேச வைத்தார். திமுக அரசைக் குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் அவ்வாறு செய்கின்றன. ஆனால் நெல் கொள்முதல் மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. நேற்று கூட ஆதிக்குடி என்ற கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு சாலையில் நெல் கொட்டப்பட்டிருந்தது, அதிகாரிகள் அதனைச் சீராகக் கொள்முதல் செய்து வருகிறார்கள்.
கேள்வி: எடப்பாடி பழனிசாமி , தன்னை ஒரு விவசாயி என்று காட்டிக்கொள்கிறாரே?
கே.என். நேரு: அவர் தன்னை ஒரு விவசாயி என்று நிரூபிக்க நெல் குவியல்கள் மீது செருப்புடன் நிற்கிறார். ஒரு உண்மையான விவசாயி அப்படிச் செய்ய மாட்டார்.
கேள்வி: முதல்வர் ஸ்டாலின் அவர்களும் “நானும் ஒரு டெல்டா காரன் தான்” என்று கூறுகிறாரே? இது மக்களிடம் எந்த அளவுக்குச் சேர்ந்துள்ளது?
கே.என். நேரு: டெல்டா மக்கள் மீது முதல்வர் மிகுந்த அன்பு கொண்டுள்ளார். அந்த மக்களும் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், முதலமைச்சர் கலைஞர் வந்து எப்போதும் முதலமைச்சராக இருந்தாலும் 60 மாதங்கள் இருந்தால் 50 முறை டெல்டாவுக்கு வந்துடுவாங்க, திருச்சிக்கு வந்துடுவாங்க, மற்ற இடங்களுக்கு வந்துடுவாங்க. தளபதியும் அப்படித்தான் வராரு. எல்லாப் பகுதியிலும் எந்த நேரம் யார் கூப்பிட்டாலும், என்ன நிகழ்ச்சி இருந்தாலும் இந்த மக்கள், தமிழ்நாடு பூரா போறார், ஆனா கொஞ்சம் கவனமாக இதுல இருப்பாங்க. அதனால அவங்க பகுதிதான் டெல்டாக்காரர்கள்னு, உண்மைதானே..
கேள்வி: இப்ப நான்கு முனைப் போட்டியாக இருக்கிறது இந்த 2026 தேர்தல். திமுகவோட பெரிய பலம் அப்படிங்கிறது என்ன லிஸ்ட் சார்?
கே.என். நேரு: ஒரே பலம் இந்த ஆட்சி, தளபதி, அவர்தான் பெரிய பலம். தளபதியினுடைய செயல், தளபதி நடந்துக்கிட்ட முறை, தளபதி அந்த கூட்டணியை விடாமல் வைத்திருப்பது, யாரிடமும் கடிந்து கொள்வது இல்லாமல் நடப்பது, மற்றவர்களை மதிப்பது, இதெல்லாம் தோழமை கட்சிகளும் சரி, பொது மக்களிடமும் சரி, எந்த இடத்திலும் அவர் கடிந்து கொண்டு பார்க்க முடியாது. நிதானம், மிக மிக நிதானமாக இருந்ததுதான் பெரிய பலம் இந்த ஆட்சிக்கு. அவர் ஒன் அண்ட் ஒன்லி அவருடைய இதுதான், அவர்தான் பலம்.
கேள்வி: அதே மாதிரி நீங்க கூட்டணி கட்சி அதைச் சொன்னீங்க. இந்த முறை வந்து கொஞ்சம் அந்தத் தொகுதிகள் ஒதுக்குவதா இருக்கட்டும், எல்லாம் இழுபறியா இருந்தது. இப்போ கிரவுண்ட்ல எப்படி இருக்காங்க கூட்டணி கட்சிகள்?
கே.என். நேரு: எல்லாம் ஒற்றுமையா இருக்காங்க. தொகுதி ஒதுக்கீட்டுல இழுபறியெல்லாம் ஒன்னுமில்லைங்க. காங்கிரஸ் கொஞ்சம் கூடுதலாக கேட்டாங்க. காங்கிரஸ் கூடுதலாக கேட்டது, தேமுதிக கூட்டணிக்கு வந்ததுனால தொகுதி பங்கீட்டுல அவங்களுக்கு கொஞ்சம் குறைத்துக் கொடுக்கணும், கூடுதல் கொடுக்கணும், எல்லாத்தையும் கேட்டு அவங்களை சமாதானப்படுத்தி தான் தொகுதி பங்கீடு முடிஞ்சது. அது இப்போ வந்து கூட்டணி கட்சிகள் ஃபீல்ட்ல எல்லாம் ஒன்னா இருக்கிறோம். நாங்க நல்லா வேலை பார்க்குறாங்க எல்லாருமே.
கேள்வி: இபிஎஸ் அவர்களுடைய இந்த பிரச்சாரம் சமீபத்திய நாட்கள்ல, கொஞ்சம் இறங்கிப் பேசுறாரு அப்படிங்கிற விமர்சனங்கள் எல்லாம் வருது, அதை எப்படி பார்க்குறீங்க?
கே.என். நேரு: இல்ல, உண்மையச் சொன்னா கோபம் வருது அவருக்கு. உண்மையை சொன்னா.. அவர் வந்து பதவியேற்றவுடன் அவர் நடந்துகிட்டதைப் போட்டா எடுத்து சொல்றாங்க, அது அவருக்குக் கோபம். நடந்ததுதான் சொன்னாங்க இவங்க, ஆனா கோபப்படுறாரு. கோபப்பட்டு தனிப்பட்ட முறையில் விமர்சனம் பண்றாரு. அது ரொம்ப ஒரு மாதிரியா பேசுறாரு. அது மக்கள் எல்லாம் அவர் பேச்செல்லாம் எடுத்துக்கல. மக்கள் எடுத்துக்கல. அது ரொம்ப, ரொம்ப கீழ் இறங்கிப் பேசுறாரு. நம்ம தலைவர் பதில் சொல்லல அதுக்கு. அவர் என்ன செய்றார், ஃபேமிலியெல்லாம் கூப்பிட்டுப் பேசுறார். கலைஞரை வந்து தப்பா சொல்றாரு. அவர் வந்த காலத்திலேயே சொந்தமாக கார் வச்சு, சொந்தமாக வீடு வச்சவர் தலைவர். அவரைப் போய் வந்து தப்பால்லாம் பேசுறாங்க, எல்லாரும் பேசுனாங்க. அது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. விமர்சனங்கள் போகுது தனிப்பட்ட முறையில், அவர் ரொம்பக் கோபப்படுறார் பன்னீர்செல்வம் மேல.
கேள்வி: அதே மாதிரி ஆட்சி மேல இருக்கக்கூடிய அதிருப்தி அப்படிங்கிறது இருக்கா சார்? இந்த சட்டம் ஒழுங்கா இருக்கட்டும், இந்த விஷயங்கள் எல்லாம்?
கே.என். நேரு: நான் பல தேர்தலைச் சந்திச்சுட்டேன். எங்கள்கிட்ட போகும்போது கேட்பாங்க, என்ன இப்பதான் தெரியுதா? இப்பதான் வந்தீங்களா? ஆமா, என்னாச்சு இந்த ரோடு போடல? என்னாச்சு இந்த லைட் எல்லாம் போடல? குடிக்கத் தண்ணியெல்லாம் இல்லை. தேர்தல் வந்தா வர்றீங்க அப்படிலாம் பேசுவாங்க. இது இயற்கையாகவே எல்லா இடத்துலயும். நான் ஏதோ பெருமைக்காக எல்லாம் சொல்லல, எந்த இடத்திலும் மக்கள் வந்து கேள்வி கேட்கல. வாங்க இதெல்லாம் பார்த்துக்கோங்க, நிறைய செஞ்சிருக்கீங்க, இன்னும் கொஞ்சம் செய்யுங்க அப்படின்னு தான் சொன்னாங்க. எப்போவோ 96-ல நாவலர் தேனி போனா அவர்தான் மொத எதிர்ப்பு கல்லு விட்டாங்க.. அந்தத் தேர்தலில் அதிமுக மொத்தமாக, ஜெயலலிதாவே தோத்துப்போயிட்டாங்க அந்தத் தடவை. அப்படி ஒரு எதிர்ப்புணர்வு எல்லாம் இல்லை. பத்திரிகையில, ஊடகங்கள்ல அன்னைக்கு இருந்ததை விட இன்னைக்கு 100 மடங்கு, 500 மடங்கு ஊடகங்கள் வந்துடுச்சு. ஏதாவது பேசுவாங்களா? அப்படிப் பார்த்தா ஒரு செய்தி, இப்படிப் பார்த்தா ஒரு செய்தி. அப்படிப் பார்க்கும்போது நமக்கு ஒன்னும் எந்த இடத்திலேயும் வேண்டுமென்றே திரிச்சு தான் போடுறாங்க, இந்த மாதிரி அந்த வேட்பாளர் அப்படி பண்ணாங்க இப்படி பண்ணாங்கன்னு. ஒரு இடத்துல கூட அப்படி இல்லை. அதற்குக் காரணம் ஆட்சியினுடைய சாதனைகள், ஆட்சி நடத்துன முறை.
அதனால அது வந்து மக்கள் ஏத்துக்கிட்டாங்க. நல்லாதான் இருக்காங்க, குறிப்பா பெண்கள் மிக நல்லா இருக்குறாங்க. நாங்க போனோம்னா ஒரு வார்டுக்குள்ள போறோம், 14,000 ஓட்டு, 12,000 ஓட்டுல இருந்து 14,000 ஓட்டு இருக்குன்னா, எப்படியும் 2,000 பெண்கள் வந்து ஆரத்தி எடுக்குறாங்க.
கேள்வி: தானாவே முன்வந்து?
கே.என். நேரு: ஆமாங்க எடுக்குறாங்க. வரவே மாட்டாங்கல்ல பார்க்க மாட்டாங்க அது மாதிரி. அதுக்கு காரணம் நிறைய மகளிர் உரிமைத் தொகை, இந்த மாதிரி விடியல் பயணம், கல்லூரியில இடைநிற்றல் இல்லாம இருப்பதற்கு பெண்களுக்காக கொடுத்தது. இப்படி பல விஷயம் பெண்களை போய் சேர்ந்திருச்சு அடிமட்டத்துல சேர்ந்துருக்கு. முதியோர் உதவித்தொகை கூடுதலாக்கி கொடுத்தது, மருத்துவச் செலவு கொடுத்தது, அதே மாதிரி கட்டணமில்லாமல் நிறைய மருத்துவம், பள்ளிக் கல்வி, அதே மாதிரி மருத்துவம்லாம் கொடுத்தது கீழ சேர்ந்திருக்கு மக்களுக்கு.
நம்ம தளபதி ஆட்சியில அதிகாரிகள் கீழ வந்து நேரடியாக மக்களுடன் ஸ்டாலின் என்கிற திட்டம் வரும்போது நிறைய பிரச்சனைகள் 20 ஆண்டுகால, 30 ஆண்டுகால பட்டா மாறுதல், கூட்டு பட்டா மாறுதல், அதே மாதிரி மின்சார அட்ரஸ் மாத்துறது, மின்சாரத்துல தந்தை பேர்ல இருக்கும் மகனுக்கு கூட மாத்தி கொடுக்க மாட்டாங்க, கூட்டு பட்டாவை பிரிக்க மாட்டாங்க, பட்டா கொடுக்க மாட்டாங்க. அதெல்லாம் வந்து தாலுகா அலுவலகத்திலே போய் மாதக்கணக்கிலே வருடக்கணக்கிலே இருந்ததெல்லாம் 15 நிமிடம், 20 நிமிடம், அதே மாதிரி ஒரு 15 நாட்களுக்குள்ள அதுக்கு தீர்வு கிடைச்சது மக்களுக்கு பெரிய செய்தியதெல்லாம். இந்த ஆட்சியினுடைய சாதனைகள்ல அது ஒரு முக்கியமான சாதனை. எனவே அதெல்லாம் இருந்ததுனாலதான் நமக்கு வந்து எதிர்ப்பு இல்லை கீழ.
கேள்வி: சாதனைகள் நீங்க சொல்றீங்க, அதே மாதிரி மக்கள் நல திட்டங்களும் வந்து மக்களை போய் சென்றடைஞ்சிருக்கு. மகளிர் உரிமைத் தொகையா இருக்கட்டும், நீங்க சொல்ற மாதிரி விடியல் பயணமா இருக்கட்டும், புதுமைப் பெண் அப்படின்னு திட்டங்கள்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அந்த தூத்துக்குடி சம்பவம்னு எதிர்கட்சிகள் வைக்கிற குற்றச்சாட்டு இருக்கே? அது எடுபடும்னு நினைக்கிறீங்களா?
கே.என். நேரு: அது நீங்க வந்து இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கிற செய்திகள் பெரிதுபடுத்துகிற ஊடகங்கள் இன்றைக்கு நிறைய வந்துருச்சு. நிறைய ஊடகங்கள். அதனால அதை பெரிதுபடுத்துகிறார்கள். மற்ற ஆட்சியை காட்டிலும் இந்த ஆட்சியில சட்ட ஒழுங்கை நேரடியாக தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார். யாரும் தலையிட முடியாது. தவறுன்னா தவறுன்னு எவர் பேரிலயும் நடவடிக்கை எடுக்கக்கூடிய அரசு தளபதி அவருடைய இலாக்கா. எனவே அவர் நல்லாதான் பார்த்தார், நாட்டுல அப்படிலாம் ஒன்னும் பெருசா இல்லை. இங்கொன்னும் அங்கொன்னும் எங்கயாவது நடக்குறதுல வந்து அதை பெரிசுப்படுத்துறாங்க அவ்வளவுதான்.
கேள்வி: அதே மாதிரி தமிழக வெற்றிக் கழகம் இந்த முறை தேர்தல் அரசியல்ல வராங்க. மற்ற கருத்துக்கணிப்பு எல்லாத்துலயும் பார்க்கும்போது ஒரு குறிப்பிடத்தக்க சதவீதம் வாங்குறாங்க. இது எப்படி இருக்கும் சார் உங்க அனுபவம் நிறைய? இந்த தேர்தல்?
கே.என். நேரு: என்னுடைய கணிப்பு வந்து நாங்க தேர்தல்ல ஃபீல்டுல போனா நாங்க ஒரு இடத்துக்கு வீட்டுக்கு போகிறோம், வீட்டுக்கு ஓட்டு கேட்கப்போறோம். ஒன்னு அதிமுகவுல இருக்கிறவங்க கூட்டணியில இருக்கிறவங்க ஓட்டு கேட்க வர்றாங்க. இவங்க தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்த அளவு எங்கோ ஒன்று அங்கே ஒன்றுதான் ஓட்டு கேட்கிறது போறாங்க வர்றாங்களே தவிர எங்களுக்கு ஆனா சதவீதம் பார்த்தா அவங்க கூடுதலாக வர்ற மாதிரி எல்லா கருத்துக்கணிப்பிலயும் வருது. ஆனா ஃபீல்டுல அவங்க இல்லை.
கேள்வி: விஜய் சொல்ற மாதிரி விஜய் முகம் 234 தொகுதிகளிலும் விஜய் விஜய் அப்படின்னு சொல்லி பேசி இருந்தாரு. அது எதுவும் கிரவுண்ட்ல எடுபடுதா சார்?
கே.என். நேரு: அதான் சொல்றேனே, இந்த தொகுதியில் எனக்கு 2 லட்சத்து 14 ஆயிரம் ஓட்டு. நான் மொத்த வார்டையும் முடிச்சுட்டு நான் அடுத்த தொகுதிக்கு போயிட்டேன் . ஆனா அவங்க சும்மா கூட பார்க்கல மக்களெல்லாம் பார்க்கல. ஆனா கருத்துக்கணிப்புல பார்த்தா அவங்க வந்து ஒரு கன்சிடரபிள் (Considerable) அளவுக்கு வர்றதுன்னு எல்லா பத்திரிக்கையில போடுறாங்க, எல்லா இடத்துலயும் வருது. அது எப்படின்னு எங்களால புரிஞ்சுக்க முடியல.
கேள்வி: இந்த தேர்தலை உங்க அனுபவத்துல எப்படி பார்க்கிறீங்க சார்? எத்தனை முனை போட்டியா பார்க்கிறீங்க? எவ்வளவோ தேர்தல்களை நீங்க கடந்து வந்திருப்பீங்க. எல்லாரும் சொல்றது இது ஒரு வித்தியாசமான தேர்தலா இருக்கும், திடீர் திருப்பங்கள்லாம் இருக்கும்றாங்க. அது மாதிரி ஏதாவது கெஸ் பண்ண முடியுமா சார்? அதிமுக-வும் இப்போ களத்தில் வலுவா இருக்காங்கன்னு சொல்றாங்களே…
கே.என்.நேரு: அது ஒன்னும் அப்படிலாம் ஒன்னும் இருக்காதுங்க. நீங்க வந்து பார்த்தீங்கன்னா, அங்க ஒன்று அங்க ஒன்று இருக்கும்.SIR-ல் வாக்காளர்கள் இருப்பதற்காக எடுத்துக்கொண்ட முயற்சியும் சரி, இறந்தவர்களை நீக்குவது அல்லது இடம் மாற்றம் போயிருந்தவர்களை நீக்குவது என்பதையெல்லாம் சரியாக பார்த்த ஒரே இயக்கம் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்.
எனவே, இதுல ஒரு திருப்பம் வருமான்னா எந்த வேலைக்குமே அவங்கல்லாம் வரல. அதிமுக இதுலயும் செய்யல, மத்த கட்சிகள் எதுலயும் செய்யல, இவங்கல்லாம் எதுலயும் செய்யல, ஒன்னுமே செய்யல. பூரா கன்சாலிடேட் (Consolidate) பண்ணி இதுதான் வாக்குன்னு முடிவு பண்ணி திமுக வச்சது. அதுல வந்து நான் வந்து திமுக பேர்ல குறை சொல்லிட்டு வாக்குன்னு கேக்குறாங்க. அது எந்த அளவுக்குன்னா ரிசல்ட்ல வந்தாதான் அத பத்தி தெரிஞ்சுக்க முடியும். கீழ அது மாதிரி தெரியல எங்களுக்கு.
கேள்வி: மலைக்கோட்டை மன்னன்னு உங்களைச் சொல்லுவாங்க…
கே.என்.நேரு: அத சும்மா அவங்க சொல்றாங்க, பிரியமா இருக்குறவங்க சொல்லுவாங்க. அதுல என்னங்க, திருச்சியில வந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மிகப்பெரிய தலைவர்கள் எல்லாம் வந்திருக்காங்க திருச்சியைப் பொறுத்தளவு. அருணாசலம் பிள்ளை என்றெல்லாம் இருக்கின்ற போது காங்கிரஸ் கட்சியில இருந்தவர், காங்கிரஸ் கட்சியில காமராஜர் வந்து அவருக்காக காத்திருந்த காலம்லாம் உண்டு. அவ்வளவு நேர்மையாக இருந்தவர். அன்பில் இருந்திருக்கிறார்,அதே மாதிரி நாகசுந்தரம் இருந்திருக்கார், எம்.எஸ்.மணி இருந்திருக்கார். காங்கிரஸ் கட்சியிலும் பெரிய பெரிய தலைவர்கள் இருந்திருக்காங்க, திமுக-விலும் பெரிய பெரிய தலைவர்கள் எல்லாம் திருச்சியை ஒரே குடையின் கீழ் ஆண்டவர்கள் நிறைய இருக்காங்க.
அன்றைக்கெல்லாம் பெரிய மாவட்டம் திருச்சி மாவட்டம். அன்றைக்கு அவர்களெல்லாம் சொல்வார்கள் காங்கிரஸ் கட்சியில அருணாசலம் பிள்ளை அவர்கள் ஒரு தொகுதியில இவ்வளவு செலவாச்சுன்னா, அந்த செலவு போய் மிச்சப் பணத்தை பொட்டணம் போட்டு எப்ப வேணாலும் போய் எடுத்துக்கலாம். ஒரு பைசா தொடாத அது மாதிரி நேர்மையான தலைவர்கள் பல, கி.ஆ.பெ. விஸ்வநாதன் அவர்கள் மிகப்பெரிய இந்த திராவிட இயக்கத்தினுடைய பெரிய தலைவர். அவர் எல்லாம் திருச்சியில் இருந்தவர்கள் தான். எஸ்.ஏ.ஜி. ராபி என்றெல்லாம் பெரிய தலைவர்கள் எல்லாம் இருந்த இடம், நேர்மைக்குப் பேர் போன தலைவர்கள் இருந்த கட்சி. எனவே அவர்களெல்லாம் இருந்த இடத்திலே அவர்களை ஒட்டி நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நீண்ட காலம், ஆனால் கலைஞரோடு இருந்து நீண்ட காலம் இருக்கிறோம். அதுல அவங்க வந்து ஒரு பிரியத்தில் சொல்கிறார்களே தவிர, மலைக்கோட்டைக்கு எப்படி 5000 வருடம் மிகப் பழமையான அதற்குப் போய் மன்னர் எல்லாம் சும்மா சொல்றாங்க அவங்க அவ்வளவுதான்.
கேள்வி: இவ்வளவு பெரிய தலைவர்கள் எல்லாம் இங்க இருந்திருக்காங்க, நீண்ட பட்டியலே கொடுக்கிறீங்க. நீங்களும் வந்து நீண்ட நாட்களாக இங்க களப்பணியில இருக்கிறீங்க. திருச்சி கிழக்குல தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் போட்டியிடுறார், இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்து அவர் வர்றார். இதை எப்படிப் பார்க்கிறீங்க?
கே.என்.நேரு: அவருக்கு அவருடைய அதாவது அவருடைய இனம், அங்கு கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்று பெரும்பகுதியாக அவருக்கு யாரோ ஆரம்பத்துல இருந்து சொல்லி இருக்காங்க. அதனால அவர் பெரும்பகுதியாக இங்க இருக்க சர்ச்கெல்லாம் (Church) கொஞ்சம் இதெல்லாம் பண்ணிக் கொடுத்திருக்கார், அப்பவே 10 வருஷத்துக்கு முன்னால, 15, 20 வருஷத்துக்கு முன்னாலயே பண்ணிக் கொடுத்திருக்கிறார். ஏதோ ஒரு வகையில அவருடைய இயக்கத் தோழர்கள் இங்க போடுங்க, இங்க போடுங்கன்னு சொல்லி அவரை நிற்கச் சொல்லி வற்புறுத்தியதுல வந்து நிக்கிறார்.
ஆனால், இந்தத் திருச்சி கிழக்கு தொகுதி என்பது அப்ப ஒன்னாவது தொகுதின்னு சொல்றது, திருச்சி ஒன்னுன்னு சொல்றது அப்போல்லாம் அது மாதிரி சொல்றது. அப்போ எம்.ஜி.ஆர் வந்து நாங்க ஒன்றுபட்ட மாவட்டம் 17 தொகுதி எங்களுது. 18-ஆ இருந்து ஒன்னு குறைஞ்சிருச்சு, 17 தொகுதியும் எம்.ஜி.ஆர் வெற்றி பெற்ற போது, ஒரே தொகுதி கிழக்கு தொகுதி மட்டும்தான் திமுக வெற்றி பெற்றது. அரியலூரிலே மூன்று முறை வெற்றி பெற்றது எம்.ஜி.ஆர் இருக்கும்போது.
திருச்சி கிழக்கு திமுக மலர்மன்னன் அவர்கள் வெற்றி பெற்றார். கே.எஸ்.எம் அவர்கள் 80-ல் ஒருமுறை வெற்றி பெற்றார். அன்பில் அவர்கள் 80-ல் வெற்றி பெற்றார். இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட பக்கம் திராவிட இயக்க கொள்கைகள் நிறைந்த மக்கள் இருக்கிற பகுதி. இன்றைக்கும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் திருச்சி கிழக்கிலே திமுக தான், உதயசூரியன் தான் வெற்றி பெறும் என்ற முழு நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். வெற்றியும் பெறுவோம்.
கேள்வி: இப்போ திருச்சி கோட்டைக்குள்ள விசில் ஒலிக்கிறதுக்கு வாய்ப்பு இல்லை. மீண்டும் உதிக்கப் போறது உதயசூரியன் தான்.
கே.என்.நேரு: ஆமா ஆமா. அவங்களுக்கு வாய்ப்பு இல்லை. அவர் நேரடியாக நிக்கிறதுனால 5 சதவீதம், 2 சதவீதம் கூட வருமே தவிர வெற்றி பெறுற அளவுக்கு இருக்க வாய்ப்பு இல்லை.
கேள்வி: நிறைவாக, இப்போது நீங்க ஒரு டார்கெட் வச்சு தான் முதல்வர் அவர்கள் சொன்னாங்க. வெற்றி 200 பிளஸ். 200 தொகுதிகள் அப்படிங்கிறது நிச்சயமாக உண்டு அப்படின்னு. அதை நோக்கிய பயணமா உங்களுக்குத் தெரியுதா சார், இப்போ களத்தில் பிரச்சாரத்தில் இருக்கும் போது?
கே.என்.நேரு: நல்லா தான் இருக்குங்க. நீங்க வந்து 200 பிளஸ், 40-க்கு 40-ன்னாரு 40-க்கு 40 ஜெயிச்சோம். எங்களுடைய எய்ம் வந்து 200-ஐ நோக்கி தான் போறோம். நம்ம இன்னைக்கு தோழமை கட்சிகள் எல்லாம் எல்லாரோட இணைஞ்சு போறோம். அதனால வந்து திமுக தனிப்பட்ட முறையில் உதயசூரியன் நின்னது 162. தோழமை கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் நிக்கிறது எட்டு பேராக 170 பேருக்கு மேல நாம நிக்கிறோம். நம்ம எல்லாம் வெற்றி பெறணும்ங்கிற முறையில் தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். எனவே அதை நோக்கி தான் இந்த பயணம் இருக்கிறது. 200 தொகுதியை நோக்கி தான் பயணம் இருக்கிறது. அதுல ஓரளவுக்கு நீங்க பாத்தீங்கன்னா பழனிசாமி எடப்பாடியார் வந்து பல பகுதியில வேன்ல பேசுறாரு. ஆனால் திமுகவில் தலைவர் எல்லா மாவட்டங்களுக்குச் சென்று வந்துவிட்டார். கனிமொழி அவங்க, அவங்களும் ஒரு பகுதியிலே போறாங்க. இளைஞரணி செயலாளர் ஒரு பகுதியிலே பலமாக எல்லா பகுதிக்கும் சென்று கொண்டிருக்கிறார். எனவே பிரச்சாரத்தை மக்களிடம் கொண்டு செல்வது திமுக மட்டும் தான் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. அதிமுகவில் பழனிசாமி தவிர யாரும் பேசுவதில்லை.
கேள்வி: ஆனா அவர் ஒருத்தரே நிறைய பேசுறாருன்னு நினைக்கிறீங்களா?
கே.என்.நேரு: இல்லை, அவர் நிறைய பேசுறது என்ன இருக்கு? அவருக்கு அதுக்கு மேல எதிர்பார்க்க முடியாது. அவர் அவ்வளவுதான். அவ்வளவுதான் பேச முடியும், அப்படித்தான் பேசுவார்.
கேள்வி: பாஜகவுடைய அடிமையாக மாறிவிடுவார், நாளைக்கு இவர் ஆட்சிக்கு வந்தாலும் டெல்லி தான் ஆளும் அப்படிங்கிற உதாரணம் சொல்றாங்க.
கே.என்.நேரு: நீங்களே கேட்கிறீங்க உதாரணம். குடியுரிமை சட்டத் திருத்தம் இவங்க ஓட்டுப் போட்டு தான் வந்தது. உதாரணம் விவசாயிகள் சட்டம் இவங்க ஓட்டுப் போட்டு தான் வந்தது. இப்ப நம்ம 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடம்பிடிக்கிறோம்னு சொல்றாங்க. 2011-ல் நம்ம குடும்பக் கட்டுப்பாடு விஷயத்தை நம்ம தமிழ்நாட்டுல ரொம்ப கடுமையாக திமுக ஆட்சியில் அதைக் கொண்டு வந்தோம். ஜனத்தொகை குறையுது. 4 கோடியா இருந்தது 8 கோடியா இருக்கு. அவங்க 20 கோடிக்கும் மேல போயிட்டாங்க உபி. அப்ப நாங்க கேட்கிறது என்னன்னா, மக்கள் தொகை அடிப்படையில் இல்லாமல் ஏற்கனவே இருந்த தொகுதியின் அடிப்படையில் பர்சன்டேஜ் என்ன கொடுக்கிறீங்களோ அதைக் கொடுங்க அப்படின்னு தான் கேட்கிறோம். பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறதை நம்ம எதிர்க்கல. 33 சதவீதம் கொடுங்க. ஏன்னா உள்ளாட்சியில் 50 சதவீதம் நம்ம கொடுத்திருக்கோம். 33 சதவீதம் கொடுங்க. அதே நேரத்தில் எங்களுடைய உரிமையை நீங்க பறிக்காதீங்கன்னு சொல்லி நாம தான் கேட்கிறோம். ஆனா பழனிசாமி காலையில் என்ன சொல்றார், அதெல்லாம் ஒன்னும் இல்ல சரியா இருக்கு அப்படின்னு சொல்றாரு. அவங்க சொல்றதுக்கு என்ன ஓட்டெடுப்புக்கு அமித்ஷா இப்பதான் பதில் சொல்றாரு. ஆனா எடப்பாடி நேத்தே சொல்லிட்டார் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல தமிழ்நாட்டுக்குன்னு. அப்புறம் இதைக் காட்டிக் கொடுக்கிறதை விட இதை எப்படி எடுத்துக்க முடியும் இதை?
கேள்வி: இந்த வார்த்தையே ரொம்ப வீரியமா இல்ல?
கே.என்.நேரு: எது?
கேள்வி: காட்டிக் கொடுக்கிறது. ஒரே இதுல அடிச்சிடுவீங்க போல இருக்கு?
கே.என்.நேரு: பாஜகவுடைய எதிர்ப்புங்கிறது தமிழ்நாட்டில் ஏற்கனவே 40 எம்பிகள் இருந்து கடுமையாக போராட வேண்டியிருக்கு அவங்ககிட்ட. வட மாநிலங்களில் இருக்கிறவர்கள், ஹிந்தி பேசுற மாநிலங்களோடு கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. உதாரணத்திற்கு நாம் கட்டுகிற வரியைத் திருப்பித் தருவதற்கு கூட கட்டுப்பாடுகள் வைத்து, அதிலே ஒரு ரூபாய் என்றால் 29 பைசா நமக்குக் கொடுக்கிறாங்க. பீகாருக்கு எல்லாம் 8 ரூபாய் கொடுக்கிறாங்க. உத்தரப் பிரதேசத்துக்கு 8 ரூபாய், ஒரு ரூபாய் கட்டினா 8 ரூபாய் கொடுக்கிறாங்க. நாளைக்கு எம்பியும் குறைஞ்சிருச்சுன்னா நாம எப்படி பேச முடியும்? நமக்கு என்ன பணம் கட்டுறதை மட்டும் வசூல் பண்ணிட்டு அவங்களுக்குச் சேவை செய்யறதைத் தவிர வேற என்ன உரிமையாகக் கேட்க முடியும்? எனவே தான் நம்முடைய உரிமையைக் காக்க வேண்டுமென்று சொன்னால் நமக்கு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
