ADVERTISEMENT

அன்புமணியை மத்திய அமைச்சராக்கிய கலைஞர்.. தரம் தாழ்ந்து பேசும் எடப்பாடி.. வடக்கு மண்டல களம் எப்படி? விவரிக்கும் அமைச்சர் எ.வ.வேலு

Published On:

| By Mathi

EV Velu

திமுகவின் வடக்கு மண்டலத்தில் 41 தொகுதிகளையும் கைப்பற்றுவோம் என்று வடக்கு மண்டல பொறுப்பாளரும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான எ.வ.வேலு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நமது மின்னம்பலம் யூ டியூப் சேனலுக்கு அமைச்சர் எ.வ.வேலு அளித்த பேட்டி:

ADVERTISEMENT

கேள்வி: எப்படி இருக்கு சார் திமுகவின் வடக்கு மண்டலம்?

எ.வ.வேலு: வடக்கு மண்டலம் ஒரு வெற்றி மண்டலமாதான் இருக்கு. களத்துல போய் பார்க்கும் பொழுது மக்களுடைய ஆரவாரம், முதலமைச்சருடைய சுற்றுப்பயணம், அதோட இல்லாம நம்மளுடைய எந்நாளும் இளம்பெரியார் என்று சொல்லப்பட்ட தமிழ்நாட்டினுடைய துணை முதலமைச்சர், அவர்தான் முதன்முதலா வடக்கு மண்டலத்துல வந்து தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்கினார். அந்த பிரச்சாரம் வந்து ஒரு வெற்றிப் பிரச்சாரமா அமைஞ்சிருக்கு. வெற்றி என்கிற இலக்கை நோக்கி நாங்க போயிட்டு இருக்கிறோம். அதனாலதான் சொல்றேன் இந்த களம் வெற்றிக் களமாக எங்களுக்கு அமைந்திருக்கிறது.

ADVERTISEMENT

கேள்வி: நீங்க பிரச்சாரத்துக்குப் போகும் போதோ அல்லது இங்க கள நிலவரத்தைப் பார்க்கும் போதோ என்னென்ன சவால்கள் இருக்கு?

எ.வ.வேலு: சவால்னு எதுவுமே இல்லை. பொதுவா என்னன்னா அஞ்சு வருஷம் ஆளுங்கட்சியா இருந்தாக்க ஏதாவது நாலு பேர் கேள்வி கேட்பாங்க எப்பவுமே. அதைச் செய்யல, இதைச் செய்யல அப்படின்னு அவங்களுடைய எதிர்பார்ப்பு. அந்த மாதிரி எந்த இடத்திலும் அந்த மாதிரி கேள்வி கேட்கிற மாதிரி எதுவுமே இல்லை. எந்தெந்த லெவல்ல இருக்கிற லீடர்கள் யார் போனாலும் சரி, இன்முகத்தோடதான் மகிழ்ச்சியா வந்து அன்பு சகோதரிகள், மகளிர் வரவேற்கிறாங்க. பொதுவா வந்து ஒரு குடும்பத்துல இருக்கிற சகோதரி வரவேர்த்துட்டாக்க அந்த குடும்பம் முழுமையா நமக்கு ஓட்டுப் போடும். மாற்றுக்கருத்து இருக்காது. அதுக்காக நாட்டுக்குத் திட்டம் போடலன்னு அர்த்தம் இல்லை. நாட்டு நோக்கியும் திட்டம் போடலாம், மாநில வளர்ச்சிக்குத் திட்டம் போடலாம், மாவட்ட வளர்ச்சிக்குத் திட்டம் போடலாம், தொகுதி வளர்ச்சிக்குத் திட்டம் போடலாம், பகுதி வளர்ச்சிக்குத் திட்டம் போடலாம், ஒரு ஊராட்சிக்குத் திட்டம் போடலாம். ஆனா இந்த முதலமைச்சர் என்ன பண்றாரு மைக்ரோ லெவல்ல போய் பார்க்கிறாரு. குடும்பத்து வரைக்கும் போயிட்டோம்னா குடும்பப் பொருளாதாரம் வளர்ந்தா ஆட்டோமேட்டிக்கா நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்துரும். குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஒரு நாடு. அதனால அவருடைய ஸ்கீம் எல்லாம் பார்த்தீங்கன்னா குடும்பத்தை நோக்கியே போகுது. நான் சட்டமன்றத்திலேயே சொன்னேன், தமிழ்நாட்டு முதலமைச்சர் குடும்பப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குத் திட்டம் போடுகிறார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் அத்தனையும் வந்தவுடனே அப்ப கடனிலிருந்து தப்பிக்கிறோம். அதுக்கடுத்து என்ன உங்களுக்கு? படிக்கிற பெண்களுக்கு, புதுமைப் பெண் திட்டம், கல்லூரிக் கட்டணம். அரசு சார்பா முதலமைச்சர் செலுத்துறாரு.

ADVERTISEMENT

தமிழ் புதல்வன் திட்டம், குடும்பத்திற்கான திட்டம்தான் அது. அவன் கல்லூரியில படிச்சா அவனுக்குப் பணம் கொடுக்கிறோம். மருத்துவ வசதிக்கு நம்ம வெளியில போறோம் நாம. அதை மருத்துவரே வீட்டுக்கு வந்து, உங்களுக்கு வந்து சுகர் இருக்குதா, பிளட் சுகர் இருக்குதா, எல்லாம் பார்த்து மாத்திரை கொடுக்கிறாங்க அப்படின்னா… ஒன்னு டாக்டருடைய கன்சல்டிங் பீஸ், இன்னொன்னு மருந்துச் செலவு. இப்ப இரண்டுமே வந்து குடும்பத்துல செலவு இல்லாம பண்ணி மக்களுக்கே கொண்டு வந்து சேர்க்கிறாங்க. “மக்களைத் தேடி மருத்துவம்” அந்தத் திட்டத்துக்குப் பேரு. வந்து செய்றாங்க.

மகளிருக்கான உரிமைத் தொகை. ரொம்ப எளிமையா சொல்லணும்னா, ஒரு பெண் சகோதரி காலையில 5:30 மணிக்கு எழுந்து தன்னுடைய வேலையைத் தொடங்கி, முழுசும் வேலையைச் செஞ்சுட்டு இரவு கடைசியா படுக்கப் போறது பெண்தான். வீட்ல ஆணா இருக்கலாம், கணவனா இருக்கலாம், குழந்தையா இருக்கலாம், எல்லாருக்கும் செய்ய வேண்டிய அத்தனை பணிகளையும் செஞ்சுட்டு நிறைவா வந்து போய் படுக்கப் போறது பெண்கள்தான்.

இப்ப சாதாரண ஒரு ஏழைப் பெண், எங்கேயோ ஒரு இன்னொரு குடும்பத்துக்குப் போய் பத்து பாத்திரம் தேய்க்கப் போனா கூட ஒரு 300 ரூபாய் மாசம் சம்பளம் தருவாங்க, இல்லையா? ஆனா இந்த குடும்பத்துல காலையிலிருந்து மாலை வரைக்கும் மாங்கு மாங்குன்னு வேலை செய்றாங்களே, அவங்களுக்கு யார் என்ன தர்றாங்க? அந்த அளவுலதான் முதலமைச்சர் மைக்ரோ லெவல்ல யோசிக்கிறார் அப்படிங்கிறதுக்கு ஒரு எக்ஸாம்பிள்தான் சொல்றேன் இதை. அப்ப என்ன பண்ணாரு? மகளிருக்கு உரிமைத் தொகை. அது நூற்றாண்டு விழாவை கலைஞர் நடத்தியதால, அந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு அடையாளப்படுத்துவதற்காக கலைஞர் பெயர்ல வந்து “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை”. அது வந்து இலவசம்னு சொல்லல. ரைட், அவங்க ரைட்டைக் கொடுக்கிறோம். அவங்க உழைப்புக்குத் தகுந்த மாதிரி நாம கொடுக்கிற அரசாங்கம்.

கேள்வி: நீங்க மகளிர் உரிமைத் தொகை கொடுக்கிறதா இருக்கட்டும், புதுமைப் பெண் திட்டமா இருக்கட்டும், பெண்களுக்கான ஒரு நலத்திட்டங்கள் அப்படிங்கறதை தொடர்ந்து வகுத்துட்டு வர்றதை உங்களுடைய ஒரு பலமாவே சொல்றீங்க, திமுகவுடைய பலமாவே சொல்றீங்க. ஆனா எதிர்க்கட்சிகள் வைக்கக்கூடிய அந்த குற்றச்சாட்டுன்னு இருக்குல்ல சார்? 1000 ரூபாய் கொடுத்துட்டு இங்கிட்டு டாஸ்மாக்… அதே மாதிரி பெண்களுக்கு எல்லா திட்டமும் போடுறீங்க, ஆனா இங்க பாதுகாப்பு இல்லை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை அப்படின்னு… இதெல்லாம் மக்கள் மத்தியில எப்படி இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?

எ.வ. வேலு: எடப்பாடி பழனிசாமி… அவர் காலத்துல டாஸ்மாக்கை மூடி சீல் வச்சுட்டுத்தான் முதலமைச்சரா இருந்தாரா? அதுக்கு முன்னால அம்மையார் முதலமைச்சரா இருந்தாங்க.. அப்ப வந்து சீல் எல்லாம் போட்டு மூடி வச்சுட்டுத்தான் ஆட்சி நடத்துனாங்களா? டாஸ்மாக் என்பதை உருவாக்கியதே அதிமுக அரசாங்கம்தான். டாஸ்மாக் என்ற ஒரு நிறுவனத்தையே, அந்த கார்ப்பரேஷனை உருவாக்குனது அவங்கதான் முதல் முதல்ல. அப்புறம்தான் அது இருக்குது, தொடர்ந்து இருக்குது அதுல.

பாதி பேர் என்ன சொல்றான், அது இல்லைன்னு சொன்னா அனர்த்தம் வந்துடுது, அது வந்துடுதுன்னு அது ஒரு பக்கம். நான் அவங்களை சப்போர்ட் பண்ணல நானு. இப்படி ஒரு குரல் இருந்துட்டுத்தான் இருக்குது. அதனாலதான் முதலமைச்சர் சொன்னார், படிப்படியாக அதை நிறுத்துவோம். விழிப்புணர்வை நம்ம உருவாக்கித்தான் நிறுத்த முடியும். ஒரு பழமொழியே உண்டு அந்த காலத்துல… “திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது”. அவர்களா பார்த்து வந்தால்தான் ஒழிக்க முடியும், இல்லனா கஷ்டம்.

அதனால, இந்த குற்றச்சாட்டுகள் சொல்லுபவர்கள் அவர்களை முதுகைத் திரும்பிப் பார்க்கணும் முதல்ல. ஃபர்ஸ்ட் பாயிண்ட் (First point). இப்ப வந்து இந்த லா அண்ட் ஆர்டர் (Law and Order) பத்தி சொன்னீங்க…

கேள்வி: இந்த லா அண்ட் ஆர்டருக்கு முன்னாடி இதைக் கேட்டுடுறேன். நீங்க சொன்னீங்க, அந்த வார்த்தையைச் சொன்னீங்கல்ல… அவங்க முதுகைத் திரும்பிப் பார்க்கணும்னு. இப்ப இலக்கு நிர்ணயிக்கிற அளவுக்கு டாஸ்மாக்ல இவ்வளவு இலக்கு நம்ம வந்து விற்பனை செய்யணும்னு நிர்ணயிக்கிற அளவுக்கு, விழிப்புணர்வையும் அதே அளவுக்கு நம்ம கொடுத்திருக்கோமா சார் கடந்த ஐந்து ஆண்டுகள்ல?

எ.வ. வேலு: இல்லையே… நீங்க  தியேட்டர்ல பாருங்க… “குடி உடலைக் கெடுக்கும்”, “குடி குடியைக் கெடுக்கும்” விளம்பரம் பண்ணுறோம். ஏன்னா மீடியா தான் உங்களுக்கு முக்கியமா இருக்குது. எல்லா மீடியாவும் நம்ம பகிர்ந்துட்டுத்தான் இருக்கிறோம். என்ன படிச்சாலும் அவன் திருந்தணும். இப்ப ஒரு பாதுகாப்பான அவனுக்கு வேண்டிய ஒரு போதையை வந்து டாஸ்மாக்ல கொடுக்கிறோம். இப்ப அதை நிறுத்துனா என்ன பண்ணுவான் அடுத்த கட்டத்துக்குப் போவான்னா… நம்ம ஊர்ல சொல்லுவோம் கள்ளச்சாராயம் குடிக்கிறான்னு. அதுல என்ன கெமிக்கல் பண்றாங்கன்னு தெரியாது யாருக்கும். இன்னும் அவன் வந்து உயிர் போகிற நிலைக்கு வந்துடுவான் அது இன்னொரு பக்கம். இதெல்லாம் வந்து பார்க்கணும், இதெல்லாம் யோசிக்கணும்.

கேள்வி: பீகார்ல கூட மதுவிலக்கு அமல்படுத்தி இருக்காங்கன்னு நினைக்கிறேன்…

எ.வ. வேலு: அங்கேயும் இது வந்து தெரியாம நடக்கத்தான் செய்யுது.

கேள்வி: சட்டம் ஒழுங்குக்கு வருவோம் சார். இதுவும் ஒரு பேசுபொருளா இருக்கு இல்ல? ஆட்சி மேல அதிருப்தி அப்படின்னு வரும்போது இந்தச் சட்டம் ஒழுங்கத்தான் எதிர்க்கட்சிகள் விமர்சனமா வைக்கிறாங்க. இதுக்கு என்ன பதில் சார்?

எ.வ. வேலு: எதிர்க்கட்சித் தலைவர் ஏற்கனவே சட்டமன்றத்துல இந்த குற்றச்சாட்டச் சொன்னார். போலீஸ் எப்படின்னு கேட்டீங்கன்னா, எல்லாரும் ஒரே போலீஸ்தான். அவங்களுக்கு வேற போலீஸ், நமக்கு வேற போலீஸ் கிடையாது. போலீஸ் என்பவர்கள் பொதுவானவர்கள், அதிகாரிகள் பொதுவானவர்கள். இந்த ஆட்சி மாற்றம் இருந்தாலும் திறமை – அந்தந்த ஆட்சியாளருடைய திறமை. என்ன திறமை? கொலை, கொள்ளைகளைக் குறைக்கிறது. நடக்கலன்னு நான் சொல்லல, குறைக்கிறது.

அப்படி இந்தக் குற்றச்சாட்ட வைக்கும்போது முதலமைச்சர் டேட்டாவோட (தரவுகளுடன்) சொன்னார். உங்க ஆட்சிக்கும் எங்க ஆட்சிக்கும் ஒப்பிட்டுச் சொல்றேன் தெரிஞ்சுக்கங்க. கொலை, கொள்ளை, மற்றைய கற்பழிப்பு இதெல்லாம் டேட்டா போட்டுச் சொன்னார். இவைகளெல்லாம் உங்க ஆட்சியை விடக் குறைத்திருக்கிறோம். இது எங்களுடைய அட்மினிஸ்ட்ரேஷன் (நிர்வாகத் திறமை), காவல்துறையில நாங்க இதைக் குறைச்சிருக்கிறோம். இப்பவும் சொல்றேன், ஜீரோன்னு நாங்க சொல்லல, குறைச்சிருக்கிறோம். ஆனா அந்த ஆட்சியை விட எங்க ஆட்சியில நீங்க சொல்ற சட்டம் ஒழுங்கா இருக்கட்டும் அல்லது ஏனைய பாலியல் தொல்லையா இருக்கட்டும் எல்லாத்தையும் நாங்க குறைச்சிருக்கிறோம்.

கேள்வி: வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், முதல்வர் அவர்கள்கிட்டதானே அந்த காவல்துறை இருக்கு? அப்ப இன்னும் சாட்டையைச் சுழற்றுவதற்கு நாம உறுதி கொடுக்க முடியுமா?

எ.வ. வேலு: “வந்தால்” என்ற வார்த்தையை ஏன் போடுறீங்க? ஜனநாயகத்துல நம்பிக்கைதானே வாழ்க்கை. கட்டாயம் அவர்தான் வருவார். நீங்க சொல்ற மாதிரி மேலும் குறைப்பதற்கு அத்தனை முயற்சிகளும் எடுப்பார்.

கேள்வி: அடுத்து உங்களுடைய பலமாக என்ன பார்க்கிறீங்க சார்? இந்தத் தேர்தல்ல திமுக-வோட பலமாக நாங்க பார்க்கிறது அப்படின்னு… ஏன்னா டார்கெட் வச்சிருக்கீங்க நீங்க, 200 தொகுதிகள் வெற்றி பெறணும் அப்படிங்கறப்ப, அது என்ன பலம் இருக்கும்?

எ.வ. வேலு: எப்ப அதிமுக போய் பிஜேபி-யோட போய் சேர்ந்ததோ, அன்னைக்கே எங்களுக்குப் பலம் அதிகமாயிடுச்சு. ஏன்னா தமிழ்நாட்டு மக்கள் பிஜேபியை எந்தக் காலத்திலயும் சேர்த்துக்க மாட்டாங்க. உதாரணத்துக்குச் சொல்லணும்னா இப்ப சிறுபான்மை சமுதாய ஓட்டு இருக்கு. அந்த சிறுபான்மை சமுதாயம்னு சொல்ற கிறிஸ்தவ சமுதாயமா இருக்கட்டும் அல்லது இஸ்லாமிய சமுதாயமா இருக்கட்டும், அது முழுமையாக எங்களுக்கு ஓட்டு வரும் இப்ப.

இதே பிஜேபி தனியா நின்னு, எடப்பாடி தனியா நின்னார்னா இந்த சிறுபான்மை சமுதாய ஓட்டு கூடச் சிதறிப் போய் அவங்களுக்குப் போறதுக்கு ஒரு வாய்ப்பு இருக்கு – ஒரு சிதறல். ஆனா அந்த வாய்ப்பு கூட இப்ப இருக்காது அவங்களுக்கு. அது முழுமையாகவே எங்களைத்தான் போடுவாங்க. ஏன்னா நாங்க ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியில் இல்லாவிட்டாலும் சிறுபான்மை சமுதாயத்துக்கு அரணாக இருக்கிறது திமுக-தான். அந்த நம்பிக்கை எங்க மேல இருக்கு, அதனால முழுமையா வரும்.

அதனால எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு ஒன்னு. ரெண்டாவது நாங்க ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட கூட்டணி வைத்திருந்த பொழுதே நாங்க 40-க்கு 40 எம்பி வென்றிருக்கிறோம். சட்டமன்றத்துல 21-ல பிடிச்சிருக்கிறோம் அதுக்கு முன்னால நடந்த தேர்தல்ல 38 நாடாளுமன்றத்தைப் பிடிச்சிருக்கிறோம் இல்லையா? உள்ளாட்சியில பெரும்பான்மையான இடங்களை நாங்க பிடிச்சிருக்கிறோம். இப்ப வேற சட்டமன்றத் தேர்தல்ல ஒரு புதிய வரவு எங்களுக்கு – அருமைச் சகோதரர் விஜயகாந்த் அவர்களுடைய இயக்கம். அது எங்களுக்குப் புதிய வரவா இருக்கு. அதுல இளைஞர்கள் எல்லாம் இருக்காங்க. அவங்களுடைய சப்போர்ட் (ஆதரவு) எங்களுக்குக் கிடைக்குது. அதனால எங்களுடைய மெகா கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. 200 சீட் இலக்கு வச்சு நாங்க தேர்தல் பணியாற்றிட்டு இருக்கிறோம். அதனால நிச்சயமா வெற்றி பெறுவோம்.

கேள்வி: இப்ப அந்த அதிமுக – பாஜக கூட்டணி, இதை மக்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு சொல்றீங்க. ஆனா கடந்த 2021 தேர்தல்ல இதே அதிமுக – பாஜக கூட்டணிதான் களத்துல இறங்கி உங்களுக்கு எதிரா இருந்தாங்க. அப்ப வெற்றிச் சதவீதம்னு பார்க்கும்போது அதிமுக-வுக்கும் திமுக-வுக்கும் 3.5% தான் சார் வித்தியாசம். குறைந்தபட்ச சதவீதம்தான் இருந்தது. அப்ப இந்த முறையும் அதே கூட்டணிதானே வருது? நீங்க ஒரு ஆட்சியில இருந்து ஆளுங்கட்சியா வர்றீங்க, அவங்க இப்ப எதிர்ல இருக்காங்க. அப்ப இன்னும் ஒரு போட்டி இருக்கத்தானே செய்யும்?

.வ.வேலு: முன்னெப்பொழுதும் இல்லாத சதவீதத்தப் பெற்று நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தோம் அப்படின்னு சொன்னீங்க. எதிர்க்கட்சியா இருக்கிறப்போ அவங்கள விட கூடுதலான சதவீதம் பெற்றிருக்கோம். அன்னைக்கு எந்த இல்லத்தரசி மருத்துவமும் கிடையாது, காலை சிற்றுண்டி கிடையாது, மகளிர் உரிமைத் தொகையும் கிடையாது. இவையெல்லாம் இந்த ஆட்சியில நாங்க செஞ்சிருக்கோம். இந்த சர்டிபிகேட்டை எங்களுக்கு இப்போ கிடைக்கும், பாராட்டுச் சர்டிபிகேட் கிடைக்கும். இந்த பாராட்டுச் சர்டிபிகேட்டை யாரும் தனித்தனியா அடிச்சு தர முடியாது, அதுதான் ஓட்டா மாறும். அதனால முன்ன விட கூடுதலான சதவீதம் தான் நாங்க இருக்கிறோம்னு தான் பல பொதுவெளித் தளத்தில இருக்குற சமூகவலைத் தளங்கள்ல ஒரு டேட்டா போட்டிருக்காங்க. திமுகவைப் பொறுத்தவரைக்கும் 42, 45 என்ற அளவுக்குப் போட்டிருக்காங்க இப்ப. அதனால முன்ன விட நாங்க இப்ப மக்கள் மத்தியில இடம் பிடிச்சிருக்கோம். எங்களோட சதவீதம் இப்பக் கூடியிருக்குது.

கேள்வி: அதே மாதிரி தேர்தல் பிரச்சாரம் அப்படின்னு வந்ததுக்குப் பிறகு, களத்துல பிரச்சாரம்னு ஆரம்பிச்சதுக்குப் பிறகு, அந்த திமுக, அதிமுக நான்கு முனைப் போட்டியில மாறுதுன்னு நினைக்கிறீங்களா சார்? அதாவது லீடு ஏதாவது மாறுதுன்னு நினைக்கிறீங்களா?

எ.வ.வேலு: எப்பவுமே ஸ்ட்ரெய்ட் ஃபைட் அப்படின்னு சொல்லும்போது, ஒரு அரசாங்கம்… இந்த அரசாங்கத்துல என்ன பண்ணிருப்போம், அஞ்சு பேர் வேலை கேட்டுருப்பான், ஒருத்தருக்கு உதவி செஞ்சிருப்போம், ரெண்டு பேருக்கு உதவி செஞ்சிருப்போம், ரெண்டு பேரு அதிருப்தியில இருப்பான். இதுதான் அவன் எப்பவுமே நேர்மறை எதிர்மறையா சில நேரங்கள்ல ஆட்சிக்கு வருவான்னு சொல்றது. அதை மாதிரி நேர்மறையா நினைக்கிற வாக்காளர்கள் அவங்க ரெண்டு கட்சி போட்டியிடும் போது ஸ்ட்ரெய்ட் ஃபைட்ல அங்க போட்டுருவாங்க. இப்ப நாலா நிக்கும் போது என்ன பண்ணுவாங்கன்னா எங்களை எதிர்த்து வாக்களிக்கின்ற ஓட்டு அது வந்து நாலு பகுதியா மாறிடும். அதுவே எங்களுக்குப் பெரிய பலம்.

கேள்வி: அது உங்களுக்குப் பலமா இருக்கும்.

எ.வ.வேலு: பலம் தான். நான்கு முனைப் போட்டிங்கிறது எங்களுக்குப் பலம் தான்.

கேள்வி: இபிஎஸ் அவர்களுடைய பிரச்சாரம் சமீபத்திய நாட்கள்ல ஒரு பேசுபொருளாக மாறியிருக்கு. அதை ஒரு மூத்த தலைவரா, அரசியல்ல அனுபவம் கொண்டவரா எப்படிப் பாக்குறீங்க சார்?

எ.வ.வேலு: என்ன பேசுபொருளா மாறியிருக்கு? அவரு திருக்குறள் சொல்றாரா, தொல்காப்பியம் சொல்றாரா, நாலடியாரைப் பத்தி சொல்றாரா அல்லது ஐஞ்சிறுங்காப்பியங்கள்ல மணிமேகலை பத்தி சொல்றாரான்னு பேசுறாங்க? ஒரு முதலமைச்சரா இருந்தவரு தன்னுடைய தரம் அறிந்து பேசணும். ஒரு முதலமைச்சர் தரம் இறங்கிப் பேசுறாரு. அதுதான் பேசுபொருளா இருக்கு. வேற ஒண்ணும் பேசுபொருள் கிடையாது. ஒரு முதலமைச்சரா இருந்தவர் இப்படித் தரம் தாழ்ந்துப் பேசுறாரே, இது நியாயம் தானா என்ற பொருள் குறித்துத் தான் விமர்சனம் இருக்குதே ஒழிய அவர் ஒரு பெரிய அறிவுஜீவின்னு யாரும் பேசல.

கேள்வி: அதே சமயம் திமுக தரப்புல விமர்சனங்கள் வைக்கும் போது அதிமுகவைப் பத்தி முதல் இதுவே அவர் அடிமை, இங்க ஆட்சியில வந்து வெற்றி பெற்றாலும் அவர் தேர்தல்ல வெற்றி பெற்றாலும் டெல்லிதான் ஆளும் அப்படின்னு திரும்பத் திரும்ப வைக்கிறீங்க. இந்த விமர்சனம் எப்படி இருக்கும் சார்? அவருடைய ஆட்சியில என்ன செஞ்சாரு, என்ன செய்யலன்னு குறைகளைச் சொல்லலாம். ஆனா இது திரும்ப ஒரு நேரேட்டிவா போகுதா?

எ.வ.வேலு: இல்ல நான் ரெண்டு கருத்தைச் சொல்றேன். எனக்கு ரொம்ப அவர் நண்பர். நான் மற்ற பேரெல்லாம் மாதிரி தரம் குறைவாப் பேசத் தயாரா இல்ல. அவர் எனக்கு நண்பர். அவர் நல்லா இருக்கணும்னு நான் நினைப்பேன். இன்னும் சொல்லப்போனா எங்களுக்கு அவர்தான் எதிர்க்கட்சியா இருக்கணும்னு நினைக்கிறவன் நான்.

கேள்வி: எதனால சார் அது?

எ.வ.வேலு: தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் ஒரு எதிர்க்கட்சித் தேவைப்படுது. அண்ணா காலத்திலிருந்தே அவர்தான் சொல்லுவாரு. நல்ல காளை மாடா இருந்தாலும் அதுக்கு ஒரு மூக்கணாங்கயிறு வேணும். சட்டமன்றத்துல எவ்வளவுதான் மெஜாரிட்டி ஆட்சி நடத்தினாலும் நம்மைக் கேள்வி கேட்கறதுக்கு ஒரு எதிர்க்கட்சி வேணும்னு கேட்பாரு எப்பவுமே.

கேள்வி: அந்த மூக்கணாங்கயிறு திராவிடக் கட்சி அதிமுகவா தான் இருக்கணுமா? இல்ல வேற ஏதாவது கட்சி வர வாய்ப்பு இருக்கா?

எ.வ.வேலு: அதான் எங்களுடைய நோக்கம். ஏன் அப்படின்னா தமிழ்நாட்டுல பிற கட்சிகள் வர்றது தமிழ்நாட்டுக்கு நல்லது இல்ல. திமுகவுக்குச் சொல்லல, தமிழ்நாட்டுக்கே நல்லது இல்ல. இப்போ பாஜக வர்றது தமிழ்நாட்டுக்கு எப்படி நல்லதா இருக்க முடியும்? ஏற்கனவே ஆண்டுகொண்டிருக்கிற மாநிலங்கள்ல எவ்வளவு பெரிய சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயிருக்குது. பெண்கள் நடமாட முடியுதா? சாப்பிடுறது யாருன்னு அவன் முடிவு பண்றான், அதுக்கு என்ன பதில் சொல்றீங்க? நீ என்ன சாப்பிடணும்னு அவன்தான் முடிவு பண்ணனும்ன்றான். நான் சொல்றதை மீறி சாப்பிட்டேன்னா உன்னை அடிப்பேன், உதைப்பேன், சட்டம் ஒழுங்கைக் கெடுக்குறான்னு சொல்றான். அது இந்த தமிழ்நாட்டுக்கு வந்து பரவிடக்கூடாது. இங்க சிறுபான்மைச் சமூகம்… பிரிட்டிஷ்காரன் காலத்திலிருந்தே இங்க கல்வியை அவங்க கிறிஸ்துவம் என்ற பெயரில் கொடுத்திருக்காங்க. கல்வி கொடுத்திருக்காங்க, மருத்துவம் செஞ்சிருக்காங்க. பல ஊர்கள்ல உங்களுக்கெல்லாம் தெரிய வாய்ப்பில்லை, என் வயசுக்குத் தெரியும். பல கிராமங்கள்ல பசங்களைப் படிக்க வைக்கணும்றதுக்காக ஃபாரின்ல இருந்து பால் பவுடர் வாங்கிட்டு வந்து கரைச்சுப் பசங்களுக்குக் கொடுத்துப் படிங்கன்னு சொல்லுவாங்க. அது கிறிஸ்டியானிட்டி தான் செஞ்சாங்க. ஆக இங்க தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் கிறிஸ்டியன்ஸும் இஸ்லாமியர்களும் அண்ணன் தம்பி உறவோட நாங்க வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அவர்கள் வந்தா அதற்கு ஊறு விளைவிச்சுடுவாங்க.

கேள்வி: சட்டம் ஒழுங்கு கட்டுப்படுமா?

எ.வ. வேலு: கட்டாயம் பண்ணிடுவாங்க. ஏன்னா தெரியுதா ஆளுநர் மாளிகையில என்னென்ன பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு. சர்ச்ச போய் இடிக்கிறேன்றான், கோவில போய் அடிக்கிறேன்றான், மசூதிய இடிக்கிறேன்றான். அப்ப என்ன பொருள் அதுக்கு? அதனால அவங்க வரக்கூடாது. அதனாலதான் இவர் வரணும். ஃபர்ஸ்ட் இன்னொன்னு கேட்டீங்க நீங்க, அது என்ன அவர் வந்து அடிமைன்னு சொல்றீங்களே அப்படின்னு சொல்றீங்களா பாருங்க, அதுக்கு இரண்டே இரண்டு விஷயம்தான்.

அண்ணன் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது ஜி.எஸ்.டி போடறேன்னு சொல்லி கேட்டாங்க. அப்ப ஒன்றிய அரசாங்கம்… அப்ப திமுக அதுல பங்கு பெற்றிருந்தது. ஒன்றிய அரசாங்கத்துல காங்கிரஸும் திமுகவும் பங்கு பெற்ற காலம். அப்பொழுது அண்ணன் கலைஞர் சொன்னார், “வரி போடுற அதிகாரம் எங்களுக்குத்தான் தேவை. இதை ஒன்றிய அரசாங்கத்துகிட்ட கொடுக்க மாட்டோம். ஏன்னா எதுக்கு என்ன வரி போடணும் இந்த மாநிலத்துக்குன்றது எங்களுக்குத்தான் தெரியும்”னு.

இப்ப சகோதரியா இருக்குறதால நான் சொல்றேன்… இப்ப சாதாரண பருப்பு இருக்குது, பருப்புக்கு ஒரே மாதிரியான தீ போட முடியுமா? பருப்புக்கு வேற தீ போடணும், பாலுக்கு வேற தீ தான போடணும். பாலுக்கு கொஞ்சமா தீ போட்டாக்க பால் வந்து பொங்காமல் நாம பால் எடுத்தரலாம். அதே தீ பருப்புக்கு போட முடியுமா? பருப்புக்கு கூடுதலாக போட்டாதானே பருப்பு வேகும். இத வந்து முதலமைச்சரா இருந்து அண்ணன் கலைஞர் சொன்னார். “இது வேற அது வேற. மாநில அரசாங்கத்துக்கு அந்த அதிகாரம் இருந்தால்தான் யார் யாருக்கு என்னென்ன பண்ண முடியும், எந்த உற்பத்திப் பொருளுக்கு வரி போட முடியும்”னு.

இப்ப நான் உணவுத்துறை அமைச்சராக இருக்கும்போது, அப்ப கமர்சியல் டேக்ஸ் மினிஸ்டர் உபயதுல்லா அண்ணன் தஞ்சாவூர்க்காரர் இருந்தார். திடீர்னு என்ன பண்ணாங்க ஹோட்டல் பொருளுக்கு 12% வரி போட்டாங்க. ஹோட்டல் முதலாளி வந்து அப்ப அந்த அசோசியேஷனோட தலைவர் வசந்த பவன் ரவி என்ன வந்து பாத்தார். “சார் எங்களுக்கு என்ன சார் ஹோட்டல்ல வரி போட்டுட்டீங்க சார், நாங்க என்ன சார் கட்டப்போறோம், இட்லி விலையை ஏத்துவோம், தோசை விலையை ஏத்துவோம்”னாரு.

இப்போ நான் கமர்சியல் மினிஸ்டர் இல்ல ஆனா உணவுத்துறை அமைச்சர், எனக்கு தொடர்பு இருக்குது அதனால பேசுறேன். நான் மறுநாளே அண்ணன் கலைஞர்கிட்ட போய் சொன்னேன். “இப்படி சொல்றாங்கண்ணே, நாளைக்கு பப்ளிக்ல கெட்ட பேரு வந்திடும்ண்ணே”னு. அன்னைக்கே கூப்பிட்டு கேரளாவுல என்னயா போடுறாங்கன்னு கேட்டார். 4% என்னமோ போடுறான்றதை நினைவில வச்சுதான் சொல்றேன், ஆனா சரியான தரவு எனக்கு தெரியல. ஆனா சொன்னார், “அங்க விடு, அதைவிட குறைச்சு போடுயா வரிய”ன்னு. உடனே தன்னுடைய உதவியாளரைக் கூப்பிட்டு, கமர்சியல் டேக்ஸ் மினிஸ்டர், கமிஷனர், செக்ரட்டரியைக் கூப்பிட்டு “யோவ் அந்த ஹோட்டலுக்கு போட்ட வரியை குறைங்க”ன்னு சொல்லிட்டார். புரியுதா உங்களுக்கு? இது நடைமுறையில் நடந்தது. அப்போ அவர் அனுமதிக்கல. அதுக்கு பின்னாடி ஜெயலலிதா அம்மா வந்தாங்க. அவங்க கூட என்ன சொன்னாங்கன்னா, “எதை ஏத்துக்கிறனோ இல்லையோ கலைஞர் சொன்ன இந்த விஷயத்தை நான் ஏத்துக்கிறேன், நான் வரி போட மாட்டேன்”ன்னாங்க.

கேள்வி: வடக்கு மண்டலத்தில் இருக்கக்கூடிய தொகுதிகள்னு பார்க்கும்போது வன்னியர் பெல்ட், இந்த மாதிரி சாதிய தாக்கம் இருக்கக்கூடிய தொகுதிகளும் இருக்கு. இந்த இடங்கள்ல எப்படி இருக்கு சார்?

எ.வ. வேலு: பொதுவாக ஒரு கற்பனை கதை அது, வன்னியர்கள் வந்து திமுகவுல இல்லை அப்படின்றதெல்லாம் கிடையாது. எனக்குத் தெரிஞ்சு சொல்றேன், 1952-ல நான் ரொம்ப சின்ன வயசு, எனக்குத் தெரியாது. அப்போ நான் ஸ்கூல்ல படிச்சுட்டு இருந்த காலம். 1950-ல நான் பிறந்ததால 52-ல ஸ்கூல்ல கூட சேர்த்து இருக்க மாட்டாங்க. 57 தேர்தல்ல நான் ஸ்கூல்ல சேர்ந்து இருப்பேன்.

நான் படிச்ச வரலாற்றை பார்க்கிறேன். 52-ல முதல் முதலா பொதுத் தேர்தல்ல நிக்கிற பொழுது, “வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை” அப்படின்ற கோஷம் அப்பவே வந்தது. அப்ப கடலூர் எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார், இந்தப்பக்கம் மாணிக்கவேல் நாயக்கர்… அவங்க ரெண்டு பேரும் அப்படிப் போட்டாங்க. போட்டு 15 சட்டமன்ற உறுப்பினர் அப்பவே வந்தாங்க.

அப்ப திமுக எலக்சன்ல நிக்கல. 49-ல திமுக உருவாக்கப்பட்டாலும் 57-ல தான் முதல் முதல்ல தேர்தல்ல நின்னு 15 எம்.எல்.ஏ வந்தோம். அன்றையில இருந்து நான் சொல்றேன்… பாட்டாளி மக்கள் வர்க்கம் என்று சொல்லப்படுகிற வன்னிய மக்கள் அந்த காலத்திலிருந்தே திமுகவுல இருந்தாங்க. ஏ.ஜி.னு ஒருத்தர் இருக்கிறார் ஏ. கோவிந்தசாமி. திமுகவுலதான் அவர் அமைச்சரா இருந்தார். இப்ப அவருக்கு மணிமண்டபம் கட்டி சிலையைத் திறந்தமே. 21 பேரை சமூக நீதிப் போராட்டத்துக்காக அதிமுக ஆட்சியில் சுட்டுக்கொன்றப்ப கூட, மக்கள் திமுக பக்கம் தான் இருந்தாங்க.

அந்த 21 குடும்பத்துக்கு, ஒரு குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் டெபாசிட் போட்டுட்டு 1500 ரூபாய் உதவித்தொகை கொடுத்தது கலைஞர் தானே? அதற்குப் பின்னால் அது 3000-மாக மாறியது. அதற்குப் பின்னால் இன்றைக்கு இருக்கிற முதலமைச்சர் அந்த 21 பேருக்கும் சிலை அமைத்து, அதற்கு மணிமண்டபம் கட்டி சிறப்பு சேர்த்திருக்கிறாரா இல்லையா? அந்த குடும்பத்தாரையெல்லாம் வரச்சொல்லி பொன்னாடை போர்த்தி அவர்களையெல்லாம் கௌரவித்து படம் எடுத்துக்கொண்டாரா இல்லையா?

அதைவிட இன்னும் முக்கியமான தரவு உங்களுக்குத் தருகிறேன். வன்னியர்கள் அதிகமாக இருக்கிற இயக்கம் திமுக.

கேள்வி: அமைச்சர்களே அதிகமா இருக்காங்க.

எ.வ. வேலு: நான் அதையே தான் சொல்றேன், அதுதான் திமுக. அமைச்சர்கள்னு எடுத்துக்கிட்டீங்கன்னா நீங்களே பாருங்க, அண்ணன் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிவசங்கர், ராஜேந்திரன் – எத்தனை அமைச்சர்கள் இருக்கிறார்கள்?

நாடாளுமன்றம்னு எடுத்துக்கோங்க, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், அதற்கு அடுத்தது தர்மபுரியில் பார்த்தீங்கன்னா மணி எம்.பி., அப்புறம் சேலத்துக்கு போனீங்கன்னா செல்வகணபதி, அப்படியே எங்க மாவட்டத்துக்கு ஆரணி வந்தா தரணிவேந்தன், இந்தப்பக்கம் கடலூருக்குப் போனீங்கன்னா விஷ்ணு பிரசாத் – இன்னும் பட்டியல் போடணுமா?

கேள்வி: இதற்கெல்லாம் ஏதாவது காரணம் இருக்கா சார்?

எ.வ. வேலு: காரணம் கிடையாது, திமுகவில் இருப்பார்கள் எல்லாருமே இருப்பார்கள். சில நேரங்களில் அவர்களின் சுயநலத்திற்காகப் போய் இனத்தின் பெயரால் சொல்லி ஒரு கட்சி ஆரம்பித்து ஏதாவது அவர்கள் சுயநலத்திற்காகப் பண்றாங்களே ஒழிய, பொதுநலம் என்று பார்த்தால் அதிகமாக இயக்கத் தோழர்கள் இருப்பது, வன்னியப் பெருமக்கள் இருப்பது, அவர்கள் இருப்பது திராவிட இயக்கமான திமுகவில்தான் அதிகமாக இருக்கிறார்கள்.

கேள்வி: இப்போ அதிமுக கூட்டணியில் இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ் அவர்கள் திமுகவை ரொம்பக் கடுமையா விமர்சிக்கிறார். அவங்களுக்கெல்லாம் என்ன பலம் இருக்கு சார் இங்க?

எ.வ. வேலு: சரி, அவருக்கு முகவரி கொடுத்ததே திமுகதான். அவர் ராஜ்யசபா எம்.பி. ஆகும்போது அவருக்கு அப்போ அந்த சக்தியே கிடையாது. நாங்களெல்லாம் ஓட்டுப்போட்டுத்தான் அவர் ராஜ்யசபா எம்.பி. ஆக்கினோம்.

அதற்குப் பின்னால் அமைச்சராக்குவதற்கு அண்ணன் கலைஞர் போய் டெல்லியில உட்கார்ந்து அவங்க வந்து அன்னை சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் சொன்னாங்க – ‘அவர் இப்பதான் புதுசா வந்திருக்கிறார், நாங்க புதுசா வந்தவங்களுக்கு எப்பவுமே ஒரு துணை அமைச்சர் லெவல்லதான் கொடுப்போம், இன்டிபெண்டென்ட் போர்ட்ஃபோலியோ கொடுக்க மாட்டோம், துணை மந்திரி’னாங்க. ஐயா வந்து கோவிச்சுக்கிட்டாரு. இதே ஜி.கே.மணி தான், தமிழ்நாடு இல்லத்துல நானும் அங்க இருந்தேன் கூட அப்போ. தமிழ்நாடு இல்லத்துக்கு வந்து அண்ணன் கலைஞர்கிட்ட சொன்னாங்க. ‘இல்லையா நான் இருந்து வாங்கித் தர்றேன் போ’ அப்படின்னு கார் எடுத்துட்டு இங்கிருந்து அன்னை சோனியா காந்தி வீட்டுக்கு போயி சொல்லி ஹெல்த் மினிஸ்டர் வாங்கிக்கொடுத்தோம். அது வாங்கிக்கொடுத்தது தப்பு, அதனால எங்களை விமர்சனம் பண்றார்.

கேள்வி: நீங்க இவ்வளவு செஞ்சிருக்கீங்க, ஆனா அவங்க தரப்புல கடந்த 2006-ல கலைஞர் அவர்கள் ஆட்சி அமைப்பதற்கு நான் நிபந்தனையற்ற ஆதரவு தந்தோம் பாமக – அப்படிங்கிறதை அவங்க கிரெடிட்டா சொல்றாங்களே?

எ.வ. வேலு: ஏன் அப்போ காங்கிரஸ் எங்களோடு ஜெயிச்சு வரலையா? மேல நாங்க காங்கிரஸ்க்கு உதவியா இருந்தோம் நாங்க அந்த கவர்மெண்ட் அவங்க அமைக்கிறதுக்கு. அவங்க எங்களுக்கு உதவியா இருந்தாங்க. அது ஏன் இவர்? நான் இவர் பண்ணலன்னு சொல்லல. அவங்களும் பண்ணாங்க, இவங்களும் போட்டிப் போட்டு நாங்களும் பண்றோம்னாங்க.

கேள்வி: முதல்ல நாங்க தான் பண்ணோம்னு கிரெடிட் எடுத்துக்கறாங்க. உங்களுக்கு அப்புறம் தான் காங்கிரஸே சரின்னு…

எ.வ. வேலு: இல்ல, அவங்க வாய்மொழியா எங்ககிட்ட சொன்னாங்க, இவங்க லெட்டர் கொடுத்தாங்க அவ்வளவுதான்.

கேள்வி: சரி சார், நிறைவாக எப்படி இருக்கிறது இந்த ஒட்டுமொத்தமான களம்? 2026 தேர்தல். உங்க மண்டலம், அதுல உள்ள தொகுதிகள் அதிக வெற்றி பெற்று நீங்க வர்றதுக்கு – முதலிடம் அப்படின்னு உங்களுக்குள்ள ஒரு இலக்கு இருக்கா?

எ.வ. வேலு: 41 தொகுதி என்கிட்ட ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை. இந்த மாவட்டத்தில் 41 தொகுதியில வந்து திமுகவும் நிக்குது, தேமுதிகவும் நிக்குது, காங்கிரஸும் நிக்குது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் நிக்குது. நான் எல்லாமே சமமாகத்தான் பார்க்கிறேன். ஏற்றத்தாழ்வு கிடையாது என்கிட்ட எப்பவுமே. நான் இயற்கையாகப் பகுத்தறிவாளன். 13 வயசுல இருந்து நான் பகுத்தறிவாளன். நான் பெரியார் பேச்சை திருவண்ணாமலையில 13 வயதில் கேட்டவன். அன்றிலிருந்து இன்று வரை நான் பகுத்தறிவாளன், சுயமரியாதைக்காரன்.

கலைஞர் அண்ணன் சொல்லுவார் எப்பவும் – ‘யோவ், என்னோடு இருக்கிற நாலு பேரை ஒழுங்கா இருக்கச் சொல்லுய்யா’ன்னுவார். ஆனா ‘நான் நல்லாத்தானே இருக்கேன்? யோவ் உன்னைச் சொல்லலையா’ன்னுவார். நகைச்சுவையாச் சொல்றேன், அப்படி நான் இருக்கிறவன். என் மீது கூட அளப்பரிய பாசம் இப்ப இருக்கிற முதலமைச்சர் வைச்சிருக்கிறதுக்குக் காரணம் நான் ஒரு கொள்கைவாதி என்பதுதான் என் மேல் அவருக்கு அவ்வளவு அளப்பரிய பாசமா இருப்பார் எப்பவும். தொண்டன், தலைவன் என்பதை விட பாசம்ன்றது ஒன்னு இருக்கு, அது என் மேல பாசமா இருப்பார், அதுல மாற்றுக்கருத்து இல்லை.

அந்த ஒரே ஒரு பாசத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் நான் எப்பவுமே சின்சியரா இருப்பேன் அவருக்கு. நான் இதுவரைக்கும் அரசியல்வாதி சொல்லுவாங்க, நான் அவர்கிட்ட பொய் சொன்னதே கிடையாது. என்ன உண்மையோ அதைத்தான் பேசுவேன். என் பேச்சு அவருக்குப் பிடிக்கும். நான் ஒரு கடுமையான கருத்தைச் சொல்றதாகக் கூட அவர்கிட்ட ‘அண்ணே கோச்சுக்காதீங்கண்ணே, நீங்கதான் முடிவு எடுக்கப் போறீங்க, என் கருத்தைப் பதிவு பண்றேன்’னு சொல்லுவேன், அதுமாதிரி ஆள் நான். அதை அக்செப்ட் பண்ணுவார். அவர் வந்து கருத்தை அக்செப்ட் பண்றதுல ரொம்ப இது பண்ணுவார். அது சொல்ற பக்குவத்துல சொல்லணும் எதுவா இருந்தாலும். எங்க சக நண்பரே சொல்லுவாங்க சில நேரம் – ‘இதென்னப்பா பக்குவமா சொல்ற சிஎம்கிட்ட, நாங்கெல்லாம் மாட்டிக்கிறோமே’ன்னுவாங்க. உண்மை அதுல மாற்றமில்லை. மனிதர்தானே அவரும் பாவம். ஆனா அவர் வந்து எங்களை ஒரு கொள்கைவாதின்னு நல்லா நேசிப்பார். அதுல ஒன்னும் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.

இந்த அடிப்படையில் என்னுடைய அரசியல் அனுபவங்கள். நான் ஏறத்தாழ 1971-ல இருந்து தேர்தலைப் பார்க்கிறேன். எம்.எஸ். ராதாகிருஷ்ணன் செங்கம் தொகுதி எம்எல்ஏ அப்போ, அவருக்கு நான் போய்ச் செவுத்துல கோடு போட்டு உதயசூரியன் சின்னம் போட்டவன் நான். அப்போ நான் வந்து மைக்கைப் பிடிச்சு பொன்னால்ல பிரசாரம் பண்ணிக்கிறேன் ‘வாக்களிப்பீர் உதயசூரியனுக்கு’ அப்படின்னு. அன்னையிலிருந்து இன்னைக்கு வரைக்கும் நான் தேர்தலைப் பார்த்துட்டு இருக்கேன், எல்லாத் தேர்தலையும் பார்த்துட்டு இருக்கேன்.

அதெல்லாம் கணக்கு பண்ணிச் சொல்றோமா, 41 தொகுதியில பெரும்பான்மையான தொகுதி எங்க கூட்டணி வெற்றி பெறும். அதுல ஒன்னும் மாற்றமே இல்ல. இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

EV Velu Interview | EPS-யை கலாய்த்து தள்ளிய அமைச்சர்... | MKStalin | Edapadi Palanisamy | ADMK
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share