தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் பங்கேற்றார்.
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். “கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடித்த தனது ‘பாரத் ஜோடா யாத்திரை’ பற்றி பேசிய அவர், “எனது யாத்திரையின் முக்கிய நோக்கம், நாடு முழுவதும் மக்கள் மத்தியில் ஒற்றுமையை விதைப்பதுதான். இந்த நாட்டில் பல்வேறு மொழிகள், வரலாறுகள், பண்பாடுகள், கலாச்சாரங்கள் இருந்தாலும், இத்தனை மக்களையும் ஒருங்கிணைத்து, ஒற்றுமைப்படுத்தி, ஒரு தாய் மக்களாக வாழ வைக்க வேண்டும் என்பதே யாத்திரையின் முக்கிய நோக்கமாக இருந்தது.
கலாச்சார யுத்தம்
நாங்கள் இன்று பிரிவினைவாத அரசியலை வளர்க்கும் மாறுபட்ட சித்தாந்தத்தை முன்னெடுக்கும் பாஜகவை எதிர்த்து போராடி வருகிறோம். எங்களைப் பொறுத்தவரை இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். இந்திய அரசியல் சாசனம் அப்படித்தான் இந்த நாட்டை அமைத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் இருக்கும் பல மொழி பேசும் மக்களின் கலாச்சாரங்கள், பின்னணிகள் அனைத்தையும் போற்றி பாதுகாக்கும் அமைப்பாகவே எங்கள் அரசியல் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களைப் பொறுத்தவரை, ஒரு மாநிலம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது எங்களுக்கு முக்கியமான மாநிலம்தான். இந்தியாவில் பேசப்படும் ஒவ்வொரு மொழிக்கும் பின்னால் ஒரு பெரிய வரலாறு உள்ளது. ஒவ்வொரு மொழியும் ஒரு மிகப் பெரிய இலக்கியப் பொக்கிஷம்.தமிழ் மொழிக்கு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வரலாறு உண்டு. அதேபோல் பஞ்சாபியைப் பேசுபவர்களுக்கும், கன்னடம் பேசுபவர்களுக்கும், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநில மொழிகளைப் பேசுபவர்களுக்கும் ஒரு பெரிய கலாச்சாரமும் பண்பாடும் உண்டு.
தனிப்பட்ட மொழியின் பண்பாடு, கலாச்சாரம் அல்லது அவர்களுடைய உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அது யாராலும் சிதைக்கப்படக் கூடாது.
எங்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநிலமும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாலேயே ஆளப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் குரலும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு மதிக்கப்பட வேண்டும். ஆனால் பாஜக அப்படி நினைப்பதில்லை. பாஜக ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரலாறு’ என்று எல்லாவற்றையும் ஒற்றை அரசியலுக்குள் அடக்க நினைக்கிறது. இதுதான் எங்களுக்கும் அவர்களுக்கும் இடையிலான கலாச்சார யுத்தம்.
எங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு தமிழ்நாட்டிலிருந்து தமிழர்களாலேயே ஆளப்பட வேண்டும். அதேபோல் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் அந்த உரிமை உண்டு. அந்த மாநிலத்தைச் சார்ந்தவர்கள்தான் மாநில நிர்வாகத்தை நடத்த வேண்டும். நமது அரசியல் சாசனம் இதைத்தான் சொல்கிறது. ஆனால் பாஜக அரசியல் சாசனம் சொல்வதை ஏற்றுக்கொள்வதில்லை. பாஜக மாநிலங்களுக்கு இடையிலான கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்த நினைக்கிறது.
அது டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள நினைக்கிறது. ஆனால் நாங்கள் தமிழ்நாட்டைத் தமிழ்நாட்டிலிருந்து தான் ஆள வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
மணிப்பூரில் அவர்கள் என்ன செய்தார்கள்
மிக அமைதியான ஒரு மாநிலத்தில் தீயைப் பற்ற வைத்து, மணிப்பூர் முழுவதும் கொழுந்துவிட்டு எரிகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துவிட்டார்கள். சமூக அமைதியை இழந்து, அந்த மாநிலம் இன்று சின்னாபின்னமாகக் காட்சியளிக்கிறது. அதற்கு பாஜக தான் காரணம். எங்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு, பின்னர் டெல்லியில் இருந்து அந்த மாநிலத்தை ஆள நினைக்கிறார்கள். ஆனால் இதைத் தமிழ் மக்களிடம் நேரடியாகச் சொல்ல அவர்களுக்கு தைரியம் இல்லை. அதற்காகப் பெரிய வரலாற்றைக் கொண்ட ஒரு இயக்கத்தை அவர்கள் இப்போது கைப்பற்றியுள்ளனர்.
அதிமுக ஒரு கருவி
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்காற்றியுள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. அதிமுகவில் தமிழகத்தை உண்மையாகவே பிரதிபலித்த தலைவர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று இருக்கும் அதிமுக என்பது ஒரு வெற்றுக் கூடாக மாறியுள்ளது. தற்போது அதிமுக, பாஜக தமிழகத்திற்குள் நுழைவதற்கான கருவியாக மாறியுள்ளது. அதிமுகவின் இன்றைய தலைவர்கள் ஊழலில் திளைத்த காரணத்தால், மோடி அரசிடம் முழுமையாக சரணாகதி அடைந்துள்ளனர். ஆர்எஸ்எஸ் இயக்கம் தமிழகத்தை பிராமணர்களை வைத்து ஆட்சி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அமெரிக்க குடியரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் எப்படி மோடியை கைவசப்படுத்தி ஆட்டுவிக்கிறாரோ, அதேபோல மோடி தமிழகத்தில் இருக்கும் எடப்பாடியை கைவசப்படுத்தி அவரை ஆட்டுவிக்க நினைக்கிறார்.
ஆனால் நாங்கள் கூட்டணி வைத்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும், மற்ற கட்சிகளாக இருந்தாலும், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கிறோம். தமிழ் பண்பாட்டைச் சிதறாமல் பாதுகாப்பதில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். ஆர்எஸ்எஸ் இயக்கம் அடிப்படையில் திராவிட சித்தாந்தத்தை வெறுக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சித்தாந்தத்தை எதிர்க்கக்கூடியவர்கள் தமிழர்கள் தான் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். வீரமான தமிழர்கள் அவர்களை ஒருநாளும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழர்கள் ஒருநாளும் அவர்களுக்கு சரணடைய மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் புதிதாக ஒரு யுக்தியைக் கண்டுபிடித்து, அதிமுக மூலம் தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கிறார்கள்.
தேச விரோத செயல்
சில நாட்களுக்கு முன் பிரதமர் பாராளுமன்றத்தில் மிகவும் ஆபத்தான காரியத்தைச் செய்தார். இந்த நாட்டு மக்களுக்கு மகளிருக்கான இட ஒதுக்கீடு வழங்கப் போகிறேன் என்று சொன்னார். ஆனால் உண்மையான திட்டம் என்னவென்றால், இந்த நாட்டில் இருக்கும் தேர்தல் கட்டமைப்பையே சீர்குலைப்பதுதான். மகளிர் இட ஒதுக்கீட்டிற்குப் பின்னால் தொகுதி சீரமைப்பு என்ற ஒரு விதியையும் சேர்த்து, இந்தியாவில் இருக்கும் அத்தனை தொகுதிகளையும் மாற்றி அமைப்பதற்கான முயற்சியை அவர் மேற்கொண்டார்.
தென் மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும் என நினைத்தார். இந்தியாவில் இருக்கும் அதிகாரப் பரவலாக்கத்தை சீர்குலைக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைத்து, அவர்களது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் குறைக்க வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம்.
அவர்கள் செய்வதைச் சொல்வதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவர் செய்ய நினைப்பது மிகப் பெரிய தேச விரோத செயல். ஒன்றுபட்ட இந்தியாவிற்கு எதிராக அவர் செய்யும் சதி. அதனால்தான் அதை பாராளுமன்றத்தில் தடுத்து நிறுத்தினோம். அந்த மசோதாவைத் தோற்கடித்தோம். இன்று மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கு மோடி அரசு முற்பட்டால், அதை ஒவ்வொரு முறையும் தோற்கடிப்போம். அந்த சதியை வீழ்த்துவோம்.
தமிழகம் இந்தியா முழுமைக்கும் ஒரு முற்போக்கான பார்வையைத் தந்துள்ளது. உங்கள் அரசியல் என்பது வரலாற்றுப் பூர்வமாக சமூக நீதியில் கால் பதித்தது. தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டம் வந்தது, பெண்களுக்கு பாதுகாப்பான சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்றத்திற்கான சட்டங்கள் தமிழகத்தில் தான் முதன்முதலில் உருவாக்கப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகமும் முதல்வர் ஸ்டாலினும் இந்தப் பணிகளை இன்னும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை மிக மகிழ்ச்சியுடன் சொல்ல ஆசைப்படுகிறேன்.கடந்த ஐந்து ஆண்டுகளாக பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம், மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளார். எங்களுடைய கூட்டணி இந்தப் பணிகளைத் தொடர்ந்து செய்யும். திமுக கூட்டணி ஆட்சிக்கு வரும்போது, இப்போது தரப்படும் ஆயிரம் ரூபாயை 2,000 ரூபாயாக உயர்த்தித் தருவோம் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் இப்போது தரப்படும் ஆயிரம் ரூபாயிலிருந்து கூடுதலாக ஆயிரம் ரூபாயாக 2,000 ரூபாய் பெறுவார்கள். முதல் முறையாக சொத்து வாங்கும் எந்தப் பெண்ணுக்கும் முழுமையான பத்திரப் பதிவு கட்டண சலுகை உண்டு. அரசாங்கத்தில் இருக்கும் அத்தனை காலி பணியிடங்களும் உடனடியாக நிரப்பப்படும். கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.
ஆர்எஸ்எஸ் இயக்கமும் பாஜகவும் எடுத்துள்ள இந்த சதியை நாங்கள் நிச்சயமாக முறியடிப்போம் என்று நம்புகிறேன்.நான் எப்போதெல்லாம் தமிழ்நாட்டிற்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் நமது நெஞ்சில் நிறைந்த காமராஜரை நன்றியோடு நினைத்துக் கொள்கிறேன். அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும், சமூக நீதிக்காகவும், மதிய உணவுத் திட்டத்திற்காகவும், கல்விக்காக அவர் செய்த பணிகளை ஒருநாளும் மறக்க முடியாது. அவருடைய ஆட்சிக் காலத்தில் மாநில கல்வித் திட்டத்திற்கு எத்தனை அருமையான அடிப்படைத் திட்டங்கள் செய்யப்பட்டன, உயர்கல்வியை எப்படி வளர்த்தார் என்பதை நாம் என்றும் நினைவு கூறுகிறோம்.
பாஜக டெல்லியில் இருந்து ஆள நினைக்கிறது என்று நான் சொன்னேன். நான் இந்த இடத்தில் இருந்து பாரத் ஜோடோ யாத்திரையை ஆரம்பித்தபோது, இந்த நாட்டை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற உணர்வோடு தொடங்கினேன். ஆர்எஸ்எஸ் – பாஜக இயக்கத்தின் கொள்கைகளின் மோசமான விளைவு என்னவென்றால், இந்த நாட்டு மக்கள் மத்தியில் வெறுப்பு விதைகளை விதைத்து, அவர்களை எப்படிப் பிளவுபடுத்துவது என்பதுதான். நாட்டில் இருக்கும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் உருக்குலைக்க நினைக்கின்ற கொடும் செயல்.
அச்சத்தில் சிறுபான்மையினர்
நம் நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரை இந்தியா முழுவதும் அவர்கள் தாக்குகிறார்கள், சிதைக்க நினைக்கிறார்கள். வரலாற்றில் முதல் முறையாக சிறுபான்மை மக்கள் தாங்கள் பாதுகாப்பில்லாத ஒரு வாழ்க்கை வாழ்கிறோம் என்ற அச்ச உணர்வைப் பெற்றுள்ளனர். நீங்கள் கிறிஸ்தவராக, முஸ்லிமாக, சீக்கியராக இருக்கலாம், பழங்குடி வகுப்பினராக இருக்கலாம். ஆனால் உங்களையெல்லாம் தேடித் தேடி உங்கள் உரிமைகளைப் பறித்து, உங்கள் மீது வன்முறையை ஏவிவிட்டு, நாட்டில் வெறுப்பு விதைகளை வளர்க்க நினைக்கிறார்கள்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கன்னியாஸ்திரிகளை அவர்கள் கொடுமைப்படுத்தி, வன்முறையை ஏவிவிட்டு மாநிலம் முழுவதும் பதற்றத்தை விதைத்திருக்கிறார்கள். இந்தக் கொடியவர்களை, அந்த ஒரு காரணத்திற்காகவே இந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவை இந்த நாட்டிலிருந்து தோற்கடிக்க வேண்டும்.இந்த நாடு ஒருநாளும் வெறுப்பு அரசியலை ஏற்றுக்கொண்டதில்லை. இந்த நாடு அன்பால், மனிதநேயத்தால், ஒற்றுமை உணர்வால் நிறைந்த நாடு. இந்தச் சித்தாந்தத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இன்று தேசிய அளவில் நடக்கும் அரசியல் களம் என்றால், பாஜகவின் தத்துவத்திற்கும் காங்கிரஸ் தத்துவத்திற்கும் இடையிலான அரசியல் யுத்தப் போராட்டம்தான். இறுதியில் காங்கிரஸ் கட்சியின் தத்துவம்தான் வெற்றி பெறும் என்பதை பாஜகவினருக்கு நன்றாகத் தெரியும். இறுதியில் வெற்றி பெறப் போவது காங்கிரஸ்தான் என்பதை பிரதமர் நன்றாக அறிவார்.”என தெரிவித்தார்.
