செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்திலேயே முறையிடலாம் என்று அமலாக்கத் துறையிடம் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மருத்துவ காரணங்களால் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையால் காவலில் எடுக்க முடியாமல் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே செந்தில் பாலாஜி உயர் நீதிமன்ற உத்தரவுபடி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்தது. “செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்கும் போது அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது. செந்தில் பாலாஜி தவறான மருத்துவ காரணங்களை கூறி, விசாரணையை தவிர்ப்பதற்காக வேண்டுமென்றே இப்படி நடந்துகொள்கிறார்” என்று அமலாக்கத் துறை தனது மேல்முறையீட்டு மனுவில் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த மனு மீதான விசாராணை இன்று (ஜூன் 21) தொடங்கி நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறை சார்பில் மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அவர், “கைதாகி முதல் 15 நாள் விசாரணை நடத்துவதற்கு முக்கியமான காலகட்டமாகும். ஆட்கொணர்வு மனுவில் தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது.
விசாரணையை தவிர்ப்பதற்காக இதுபோன்ற அணுகுமுறை கையாளப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்ற, “தற்போதைய நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை சந்தேகிக்க முடியாது. சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
உயர் நீதிமன்ற உத்தரவில் தவறுகள் இருப்பின் அதை சுட்டிக்காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். அமலாக்கத்துறை வேண்டுமானால் உயர் நீதிமன்றத்தில் முறையிடலாம். இந்த வழக்கை முடித்து வைக்கப்போவதில்லை” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரியா
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி: காவேரி மருத்துவமனை அறிக்கை!
