அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இன்று (ஜூன் 21) அதிகாலை தொடங்கி நடைபெற்று வந்த பைபாஸ் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ஆம் தேதி அதிகாலை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி ஜூன் 15ஆம் தேதி இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஓமந்தூரார் மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவ குழு என மூன்று தரப்பு மருத்துவர்களும் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதை உறுதி செய்து பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்று கூறினர்.
ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருந்த போது, இந்த அடைப்புகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க பிளட் தின்னர் மருந்து கொடுக்கப்பட்டது.
இந்த மருந்து கொடுக்கப்பட்டால் 5 அல்லது 6 நாட்களுக்கு அறுவை சிகிச்சை எதுவும் மேற்கொள்ளக் கூடாது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டும் அறுவை சிகிச்சை செய்யப்படாமலே இருந்தது.
அதோடு அவர் பயத்தில் இருந்ததாகவும் காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சூழலில் ஜூன் 19ஆம் தேதி இரவு நடத்தப்பட்ட பரிசோதனையில் செந்தில் பாலாஜியின் உடல் பைபாஸ் சர்ஜரி செய்வதற்கான தகுதியை பெற்றிருப்பதாகவும், ஜூன் 21 அதிகாலை சர்ஜரி செய்யப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது.
அதன்படி செந்தில் பாலாஜிக்கு இன்று அதிகாலை சர்ஜரிக்கான நடைமுறைகள் தொடங்கின. காலை 5 மணிக்கு சர்ஜரி தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பின் இதயவியல் நிபுணர் மருத்துவர் ரகுராம் தலைமையிலான குழு அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.
மருத்துவமனையின் 7 ஆவது மாடியில் இருக்கும் ஆபரேஷன் தியேட்டரில் அறுவை சிகிச்சையை 5 மணி நேரமாக மருத்துவர்கள் மேற்கொண்டனர்.
தற்போது 10 மணியளவில் அறுவை சிகிச்சை முடிவடைந்திருப்பதாகவும், ஆபரேஷனுக்கு பிந்தைய வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது உயிர் காக்கும் சுவாச கருவி உதவியுடன் செந்தில் பாலாஜி உள்ளார்.
இதனிடையே செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டும் என்று கரூர் மத்திய மாநகர திமுக சார்பில் இன்று காலையில் அங்குள்ள கல்யாண பசுபதி ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
உச்ச நீதிமன்றம் விசாரணை
செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க துறை மேல்முறையீடு செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
பிரியா
தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!
நான் மோடியின் ரசிகன் : எலோன் மஸ்க்
