டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை எடுத்த திடீர் ‘யு டர்ன்’… ஆடிட்டர் வீட்டில் காத்திருந்த அன்புமணி… கச்சிதமாய் முடிந்த கணக்கு!

Published On:

| By Aara

Annamalai took a sudden U turn

வைஃபை ஆன் செய்ததும் இன்று மார்ச் 14ஆம் தேதி சென்னையில் நடந்த பாஜகவின் புதிய சிற்பி மோடி என்ற புத்தக வெளியீட்டு விழா காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.

அதன் பிறகு நடந்தவற்றை விசாரித்து அறிந்து வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.

“மார்ச் 14 காலை சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் பாஜகவின் புதிய சிற்பி மோடி என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கிருந்து 11.15 மணிக்கு புறப்பட்டார்.

கல்லூரி வாசலில் இருந்து புறப்பட்ட அண்ணாமலையின் காருக்கு பின்னால் ஒரு இன்னோவா, அவரது எஸ்கார்ட் கார் என மூன்று கார்கள் அணிவகுத்தன. அடையாறு பாலம் இறங்குவதற்கு முன்பே அண்ணாமலையின் கார் திடீரென நின்றது. அதையடுத்து அவருக்கு பின்னால் வந்த இரண்டு கார்களும் நின்றன.

தனது காரில் இருந்த டிரைவர் மற்றும் உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரிடம்… ’ண்ணா… நீங்க பின்னாடி வர்ற கார்ல ஏறி கமலாலயம் போயிடுங்க. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் முடிச்சுட்டு வந்துடறேன்’ என்று சொல்லிவிட்டு தான் பயணித்த காரின் டிரைவர் சீட்டில் அமர்ந்த அண்ணாமலை செல்ஃப் டிரைவ் செய்து கொண்டே அடையாறு பாலத்தில் இருந்து கீழே இறங்கி யு டர்ன் போட்டார்.

அண்ணாமலையின் கார் கொஞ்ச நேரத்தில் மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டுக்கு சென்றது. அங்கே ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட தகவலின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி வந்திருந்தார். ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணியும் சிறிது நேரம் முக்கியமான ஆலோசனை செய்தனர்.

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுகவோடு அணி சேருமா பாஜகவுடன் சேருமா என்ற கேள்விகள் கடந்த சில வாரங்களாகவே எழுந்து வந்த நிலையில் இன்று அதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அண்ணாமலையும் அன்புமணியும் தனிப்பட்ட முறையில் சந்தித்து முக்கியமான விஷயங்களை பேசி முடித்திருக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி முதலில் 15 தொகுதிகள் வேண்டும் என கேட்டதாகவும், அதன் பின்னர் அது பத்து தொகுதிகளாக குறைந்து இன்று 9 மக்களவைத் தொகுதிகள் ஒரு ராஜ்யசபா என்ற அளவில் அன்புமணிக்கும் அண்ணாமலைக்கும் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 15 காலை தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி சேர்வதற்கான முறைப்படியான தகவல் கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டு அதன் பிறகு இரு கட்சி தலைவர்களும் வெளிப்படையாக சந்தித்துக் கொள்வார்கள் என்கிறார்கள் பாமக வட்டாரங்களே.

Annamalai took a sudden U turn

வழக்கமாக தைலாபுரம் தோட்ட வளாகத்தில் இருக்கும் அரசியல் பயிலரங்கில்தான் மாவட்டச் செயலாளர்கள் மாநில நிர்வாகிகள் கூட்டத்தை ராமதாஸ் கூட்டுவார். ஆனால் இந்த முறை புதிய நடைமுறையாக தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது வீட்டிலேயே கூட்டத்தை கூட்டியிருக்கிறார் என்கிறார்கள் தைலாபுரம் வட்டாரத்தில்.

ஆக தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏற்கனவே தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐ ஜே கே, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றிருக்கும் நிலையில் இப்போது பாட்டாளி மக்கள் கட்சியும் சேர்கிறது. வரும் வாரம் பிரதமர் மோடி தமிழகம் வரும்போது ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அவரோடு மேடையேறுவார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் அப்டேட்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பெட்ரோல் டீசல் விலை ரூ.2 குறைப்பு!

100 நாள் வேலை திட்ட நிலுவைத் தொகை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share