விமானத்தில் அவசர கால கதவு திறக்கப்பட்ட விவகாரத்தில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பச்சை பொய் சொல்லி வருவதாக தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
திமுகவின் விளையாட்டு மேம்பாட்டு அணியின் நிர்வாகிகள் நேர்காணல் இரண்டாம் நாள் நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை செயலாளர்கள் கவுதம சிகாமணி மற்றும் எஸ்.ஆர். பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று, நிர்வாகிகளை நேர்காணல் செய்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக அறிவிக்கின்ற வேட்பாளர்கள் வெற்றி பெற்று டெல்லி சென்று, தமிழர்களின் உரிமைகளை மீட்பார்கள்.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில், அதிமுகவை எதிர்த்து எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோம் என பொறுத்திருந்து பாருங்கள்.
திமுக கூட்டணி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும், முதலமைச்சர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவால் இனி மாதம் தோறும் மின் கட்டணம் மாறும் என செய்திகள் சில தினங்களாக வருகிறது அது முற்றிலும் தவறான செய்தி.
நாடாளுமன்றத்தில் இந்த சட்ட திருத்த மசோதா கொண்டு வரும் போதே அதை திமுக எதிர்த்தது. தற்போது அந்த மசோதா நாடாளுமன்ற நிலை குழுவில் உள்ளது.
மின் துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. புதிய மின்சார திருத்த சட்ட மசோதாவை தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு போதும் ஏற்றுகொள்ள மாட்டார் என உறுதிபட கூறினார்.

மேலும் விமானத்தில் அவசரகால கதவு திறக்கப்பட்ட விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
ஒரு கட்சியின் தலைவராக இருக்கக் கூடியவர் பொய்யான செய்தி வெளியிடுவதை அனைவரும் உற்று நோக்க வேண்டும்.
விமானத்தில் அவசர கால கதவை திறக்கவில்லை என பொய் சொல்லும் அண்ணாமலை,
அதேபோல் அரை மணி நேரம் தான் விமானம் கால தாமதமானதாக பச்சை பொய்யை சொல்கிறார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், இதில் ஏன் அண்ணாமலை பொய் சொல்ல வேண்டும்?.
அவரிடம் உள்ள கை கடிகாரத்திற்கான பில் அவரிடம் இருந்திருந்தால் எடுத்து கொடுக்க வேண்டியது தானே?,
ஏப்ரல் மாதம் தருவதாக கூறும் அண்ணாமலை, அதற்கான பில் ஒன்றை தயார் செய்ய, அவ்வளவு காலம் ஆகும் போல் என்று விமர்சித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் பாஜகவில் எவ்வளவு பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என அண்ணாமலை சொல்ல வேண்டும் என வலியுறுத்திய அமைச்சர் செந்தில் பாலாஜி,
நோட்டாவோடு போட்டி போடக் கூடியவர்கள் தமிழ்நாடு பாஜகவினர் என்று கிண்டலடித்தார்.
கலை.ரா
கடலூரில் பாஜக செயற்குழு: காரணம் என்ன?
படைப்பாளிகள் பிறந்தநாளில் தள்ளுபடி: அசத்தும் நகைக்கடை உரிமையாளர்!
