தமிழக பாஜகவின் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டம் கடலூர் மாநகர மையப் பகுதியான கடலூர் புதுநகர் சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் இன்று (ஜனவரி 20) நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்காக விளம்பர டிஜிட்டல் பேனர்களை வைக்க ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே பா. ஜ. க வினர் ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
நேற்று முன் தினம் இரவு கடலூர் மாநகரம் முழுவதும் கொடி தோரணம் மற்றும் டிஜிட்டல் பேனர்களை வைத்து விட்டனர்.
அதிலும் மாவட்ட நிர்வாகத்தை அதிரவைக்கும் அளவில், மாவட்ட ஆட்சியர் கேம்ப் அலுவலகம் மற்றும் மாநகராட்சி அலுவலகம் புதுநகர் காவல் நிலையம் எதிரிலும் அருகிலும்,
பேனர்களை வைத்தனர் பா. ஜ. க வினர். குறிப்பாக மாநகராட்சி பூங்காவை பேனர்களால் மறைத்தே விட்டனர்.
தி. மு. க கூட்டணி கட்சியின் பெரும்பான்மையான தலைவர்கள் கடலூர் மாவட்டத்தில்தான் உள்ளனர்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி,
த. வா. க. தலைவர் தி. வேல்முருகன் எம். எல். ஏ, விசிக தலைவர் சிதம்பரம் தொகுதி எம். பி. தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் ஆகியோர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
இப்படி தி. மு. க கூட்டணி கட்சி தலைவர்கள் நிறைந்த கோட்டையை தகர்க்கதான் கடலூரை குறிவைத்து களம் இறங்கியுள்ளார் பா. ஜ. க தலைவர் அண்ணாமலை என்கிறார்கள் பா. ஜ. கவினர்.
“கடலூர் மாவட்டத்தில் பட்டியல் இனத்தார் சமூகமும், வன்னியர் சமூகமும் பெரும்பான்மையாக உள்ளது.
மீனவர்கள் சமூகமும் கணிசமாக உள்ளதால் விசிக மற்றும் பாமக நிர்வாகிகளை இழுத்து வரும் பா. ஜ. க, கடலூர் மாவட்டத்தில் தி. மு. க உட்கட்சி கோஷ்டி பூசல் அதிகமாக இருப்பதை பயன்படுத்தி தி. மு. கவினர் மீதும் குறி வைத்துள்ளது.
கடலூர், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிகளை குறிவைத்து தேர்தல் வேலைகளை செய்து வருகின்றனர்.
குறிப்பாக பா. ஜ. க பட்டியல் இன பிரிவு மாநில தலைவர் தடா பெரியசாமி கடந்த ஒரு வருடமாக சிதம்பரம் தொகுதியில் களப்பணி செய்து வருகிறார்.
இதையெல்லாம் தீவிரப்படுத்தவே கடலூரை மாநில செயற்குழு கூட்டம் நடத்தும் களமாக தேர்ந்தெடுத்திருக்கிறார் மாநிலத் தலைவர் அண்ணாமலை” என்கிறார்கள் கடலூர் மாவட்ட பா. ஜ. கவினர்.
–வணங்காமுடி
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியா? – ஓபிஎஸ் வைத்திருக்கும் திட்டம்!
பாசக்கயிறாக மாறும் மாஞ்சா கயிறு: குஜராத்தில் சோகம்!