அதிமுகவின் கரூர் (Karur) எம்.எல்.ஏ. எம்.ஆர். விஜயபாஸ்கர் (M.R. Vijayabhaskar) இன்று ஜூன் 29-ந் தேதி தமது பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணி குறித்து கரூர் மாவட்ட அதிமுக செயலாளர் கமலக் கண்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவின் 5 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே பதவிகளை ராஜினாமா செய்த நிலையில் இன்று எம்.ஆர். விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ.வும் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதவிகளை ராஜினாமா செய்வது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளர் கமலக் கண்ணன் கூறியதாவது: இன்றைய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான எம்.ஆர். விஜயபாஸ்கர், அதிமுகவுக்கும் தொண்டர்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டு, மாற்றுக்கட்சிக்குச் செல்வதற்காகத் தனது பதவியைத் திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இந்த ராஜினாமா செயல், தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கும், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்த கழகத் தொண்டர்களுக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது.
5 ஆண்டு காலம் அமைச்சராகவும், 12 ஆண்டு காலம் மாவட்ட கழக செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார். இத்தனை வாய்ப்புகளையும் வழங்கிய ஜெயலலிதா, அவரை அமைச்சராக அமரவைத்த எடப்பாடி பழனிசாமிக்கு அவர் துரோகம் இழைத்துவிட்டார்.
தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் முகத்தைக் காட்டி வெற்றி பெற்றவர், வெற்றிக்குப் பிறகு வாக்களித்த மக்களுக்கோ அல்லது களத்தில் நின்ற தொண்டர்களுக்கோ முறைப்படி நன்றி கூட தெரிவிக்கவில்லை.
கரூர் சட்டமன்றத் தொகுதியில் ஒவ்வொரு தொண்டனும் தன் சொந்தச் செலவில் கைக்காசு போட்டு இந்தத் தேர்தலை ஒரு போராட்டக் களமாகக் கருதி பணியாற்றினர். இத்தகைய உழைப்பிற்கு மதிப்பளிக்காமல், ”எனக்கு கடன் இருக்கிறது; எனக்கு கடன் இருக்கிறது” என கூறி பதவியைத் துறப்பது ஏற்புடையதல்ல.
இயக்கத்தின் வளர்ச்சிக்குத் தான் மட்டுமே காரணம் எனத் தனிமனித பிம்பத்தை முன்னிறுத்தியதால், இத்தகைய துரோகங்கள் நிகழ்ந்துள்ளன.
என்னால் தான் இயக்கம்; எனது முகம் தான் கட்சி” என்று ஒரு தலைவன் எப்போது நினைக்கிறானோ, அன்றே அவனது வீழ்ச்சி ஆரம்பித்துவிடுகிறது.
இயக்கத்தின் வலிமை: அண்ணா திமுக என்ற இயக்கம் தனிநபர்களைச் சார்ந்தது அல்ல; இந்தத் துரோகங்களை எல்லாம் முறியடிக்கும் சக்தி இந்தக் கழகத்திற்கு உண்டு என்பதைத் தொண்டர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
தேர்தல் காலத்தில் அந்தந்தப் பகுதிகளில் இருந்த மக்களுக்கு நன்றி கூட சொல்லாதது, மக்களின் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது.
நிச்சயமாக வரும் காலங்களில் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் பதில் சொல்ல வேண்டிய தருணம் வரும்; அப்போது இந்த துரோகங்களுக்கான பலனை அவர் அனுபவிப்பார். இவ்வாறு கமலக் கண்ணன் கூறினார்.
முன்னதாக கரூர் அதிமுகவினர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமாவை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
