தவெக அமைச்சருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டி நடந்தபோது, விஐபி கேலரியில் அமர்ந்திருந்த அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு அமைச்சர் சரத்குமார் மறுப்புத் தெரிவித்திருந்தார்.
இந்தசூழலில் அவருக்கு எதிராக திமுகவினர் இன்று (ஜூன் 29) பல்வேறு இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் புரசைவாக்கத்தில் தவெக அமைச்சரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மேயர் பிரியா, ”போலீஸ் அராஜகம் ஒழிக” என்று கோஷம் எழுப்பினார். “மாத்திரை தயார்.. அமைச்சர் மாத்திரையை பொடியாக்க தயாரா, தூய சக்தியா.. போதை சக்தியா” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி, சேகர்பாபு, பிரியா உள்ளிட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே செய்தியாளார்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, ”போராட்டக்களத்திற்கு திமுக-வாக செல்லவில்லை, இந்த அரசு தான் போராட்டக்களத்திற்கு எங்களை தள்ளி இருக்கின்றது.
மக்களுக்காகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருக்கின்றோம். முதல்வர் வருகின்ற பொழுது சாலையிலே ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை விட, கரூரிலே ஏற்பட்ட சம்பவத்திற்கு 41 உயிர்கள் பலியானதை விட, இது ஒன்றும் பெரியதல்ல.
தமிழ்நாட்டினுடைய மனிதவளம் காக்க, தமிழ்நாட்டினுடைய போதை கலாச்சாரம் ஒழிக்கப்பட, தமிழகத்திலேயே இருக்கின்ற அமைச்சரவையிலே இருக்கின்ற ஒரு அமைச்சரே போதை பழக்கத்திற்கு ஆளாகின்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாரத்தான் ஓடியதில் என்ன பலன்?
தன்னுடைய அமைச்சரவையிலே இருக்கின்ற போதை ஆசாமிகளுக்கே அறிவுரை சொல்ல இயலாத முதல்வர், போதை ஒழிப்பிற்காக ஓட்டப்பந்தயம் நடத்தி என்ன பலன்? அதற்காகத்தான் மக்களுடைய விழிப்புணர்வுக்கு இந்த கண்டன ஆர்ப்பாட்டம். இதுவும் மக்களுக்கு தொந்தரவு செய்வதற்காக அல்ல. நாங்கள் கேட்ட இடத்தில் முறையாக அனுமதித்திருந்தால், அங்கேயே கூட இதுபோல அனுமதித்திருந்தால், ஒரு கோஷம் போட்டு கலைந்து சென்றிருப்போம். தடுக்கின்ற பொழுதுதான், இது காட்டாற்று வெள்ளம், திமுக திராவிட முன்னேற்றக் கழகம். பல தடைகளை கடந்து வருகின்ற இயக்கம். இது நீரோடை, தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும்.
அச்சுறுத்தலால், மிரட்டல்களால் அணிவகுப்பை வைக்க முடியாது என்பதற்கு இது ஒரு ட்ரைலராக இன்றைக்கு காட்டியிருக்கின்றோம்.
நிச்சயமாக அந்த அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அது ஒரு பாடமாக இருக்க வேண்டும். அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர் கொக்கைன் உபயோகப் படுத்தியிருக்கிறாரா என்று ஆய்வறிக்கை கேட்க வேண்டும். இந்த பாடம் தமிழகத்திலே இருக்கின்ற அரசியல்வாதிகளுக்கும், மக்களுக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதால்தான் இதை வற்புறுத்துகிறோம்” என்று கூறினார்.
