அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட 22 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரி எஸ்பி வேலுமணி கோஷ்டியின் கொறடா சி.விஜயபாஸ்கர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் மனு கொடுத்துள்ளார். இந்த மனு மீதான சபாநாயகரின் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபையில் முதல்வர் விஜய் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 22 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனால் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 25 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை மீறி, அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் எஸ்பி வேலுமணி கோஷ்டியின் கொறடா சி.விஜயபாஸ்கர், சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை நேரில் சந்தித்து கொறடா உத்தரவை மீறியதாக எடப்பாடி பழனிசாமி உட்பட 22 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரியுள்ளார். இதில் சபாநாயகரின் முடிவு பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.
